சரபம் சினிமா விமர்சனம்


தொழிலதிபரான நரேனை, சாப்ட்வேர் என்ஜினீயரான நவீன் சந்திரா தொழில் நிமித்தமாக சந்திக்கிறார். அப்போது நவீன் சொல்லும் புராஜெக்டை வெவ்வேறு காரணங்கள் கூறி நிராகரிக்கிறார் நரேன். இதனால், கோபத்துடன் அங்கிருந்து கிளம்புகிறார் நவீன். கோபம் சற்றும் தணியாத நிலையில், நரேன் வீட்டுக்கு சென்று பிரச்சினை செய்ய முடிவெடுத்து அங்கு செல்கிறார். 

அப்போது நரேனின் வீட்டுக்குள் இருந்து நாயகி சலோனி வெளியே வருகிறாள். அவளைப் பார்த்ததும் அவளுடன் பேச்சுக் கொடுத்துவிட்டு, இருவரும் காரில் ஏறி நவீனின் வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு சென்றதும் சலோனி நரேனின் மகள் என்பதும், அவள் போதைக்கு அடிமையானவள் என்பது நவீனுக்கு தெரிய வருகிறது. அவள் தனது கைச்செலவுக்கு அப்பா நரேன் பணம் தர மறுக்கிறார் என்று நவீனிடம் கூறுகிறாள். நவீனும், நரேன் தன்னுடைய புராஜெக்டை நிராகரித்து விட்டதால் தனக்கு வரவேண்டிய பணம் கிடைக்கவில்லை என்று அவளிடம் கூறுகிறான். 


இருவருக்கும் பணம் தேவைப்படுவதால், நரேனிடமிருக்கும் பணத்தை எப்படியாவது பெற வேண்டும் என திட்டமிடுகிறார்கள். சலோனியை கடத்திவிட்டதாக கூறி நரேனிடம் பணம் பறிக்கலாம் என முடிவு செய்து, அதன்படி, நரேனிடம் பேசி அவரிடமிருந்து 30 கோடி ரூபாயை பெற்றுவிடுகிறார் நவீன். 

இருவருக்கும் வேண்டிய பணம் கிடைத்துவிட்டதால், சலோனி வெளிநாட்டில் சென்று செட்டிலாகிவிட முடிவெடுக்கிறார். பணத்தை வாங்கிய பிறகு சலோனியை அவளது வீட்டில் விட்டுவிட்டு தனது வீட்டில் வந்து படுத்து தூங்கி விடுகிறார் நவீன்.  மறுநாள் விழித்துப் பார்க்கும்போது டிவியில் சலோனி கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக செய்தியை பார்க்கிறான். அதைப் பார்த்ததும் அதிர்ச்சியடையும் நவீனுக்கு, இறந்து போன சலோனியும், நரேனும் அவன் வீட்டிற்கு வந்து மேலும் அதிர்ச்சியை கொடுக்கின்றனர்.

இறந்துபோன சலோனி எப்படி மறுபடியும் வந்தாள்? என்பதை மீதிக்கதையாக சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்ஸாக வைத்து படத்தை சொல்லியிருக்கிறார்கள்.

கதாநாயகனாக நடித்திருக்கும் நவீன் சந்திராவிற்கு படத்தில் வழக்கமான ஹீரோவிற்குண்டான ஹீரோயிச காட்சிகள் இல்லை. ஏமாற்றப்பட்டு வேதனைப்படும் காட்சிகளே அதிகமாக கொடுத்திருக்கிறார்கள். இருந்தாலும் கதாபாத்திரத்தை உணர்ந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சலோனி லுத்ராவிற்கு தமிழில் இது முதல் படம். முதல் படத்திலேயே இரட்டை வேடம் ஏற்றிருக்கிறார். இப்படத்தில் சிகரெட் பிடிப்பது, போதைப் பொருட்கள் உபயோகிப்பது என்று துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படத்தில் திருப்பங்கள் மேல் திருப்பங்கள் இருந்தாலும் இவருடைய நடிப்பு மனதில் நிற்காமல் செல்கிறது.

பெரும்பாலான படங்களில் நேர்மையாகவும், பொறுப்பான கதாபாத்திரத்திலும் தோன்றிய நரேன், இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். வேட்டி சட்டையில் பார்த்த இவரை கோட் சூட்டில் படம் முழுக்க பார்க்க முடிகிறது. 

படத்தில் முக்கியமாக நான்கு கதாபாத்திரங்களை மட்டுமே படம் முழுக்க நகர்த்தி சென்ற இயக்குனர் அருண் மோகன், இடைவேளைக்குப் பிறகு அந்த நான்கு கதாபாத்திரங்களுக்குள் திருப்பங்களை வைத்து காட்சிகளை திரும்ப திரும்ப வைத்திருப்பது சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகமாக கதாபாத்திரங்களை வைத்திருந்தால் படத்தை இன்னும் அதிகமாக ரசித்திருக்கலாம்.

கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். பிரிட்டோ மைக்கேல்லின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்.