சில வருடங்களுக்கு முன் தனியார்
வானொலியில் ஆர்.ஜே.வாக இருந்தவர் மிர்ச்சி சிவா. மொக்கை ஜோக் அடிப்பதில் வல்லவரான
மிர்ச்சி சிவாவின் காமெடி பேச்சுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது.
திரைப்பிரபலங்கள் பலரும் மிர்ச்சி சிவாவின் காமெடிக்கு ரசிகர்களாக இருந்தார்கள்.
அதை மிகச்சரியாய் பயன்படுத்திக் கொண்ட மிர்ச்சி சிவா, சினிமா நட்சத்திரங்கள், இயக்குநர்கள் ஆகியோரிடம் நட்பை
வளர்த்துக்கொண்டார்.
அதுவே அவருக்கு சென்னை-600 028 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பைத்
தேடிக்கொடுத்தது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக
நடித்தார் மிர்ச்சி சிவா.
தமிழ் சினிமாவை கிண்டல் பண்ணி
எடுக்கப்பட்ட தமிழ்ப்படம் என்ற படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்தார். அந்தப்
படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு அவர் நடித்த கலகலப்பு என்ற படமும்
சிவாவுக்கு கமர்ஷியல் வெற்றியை தேடிக்கொடுத்தது. என்றாலும், தில்லுமுல்லு, வணக்கம் சென்னை, யா யா உட்பட சிவா நடித்த சில படங்கள்
வரிசையாக ப்ளாப் ஆக..சிவாவுக்கு சறுக்கல் ஆரம்பித்தது. ஏற்கனவே அவருக்கு அட்வான்ஸ்
கொடுத்த தயாரிப்பாளர்கள் படங்களை ஆரம்பிக்காமல் அமைதி காக்க ஆரம்பித்தனர். புதிதாக
எந்தவொரு படங்களும் அவரைத் தேடி வரவில்லை.
இதேநிலை நீடிப்பது தன் கேரியருக்கு
நல்லதல்ல என்பதை உணர்ந்த மிர்ச்சி சிவா, தானே டைரக்டராகி தன் மார்க்கெட்டை நிலைநிறுத்திக்கொள்வது என்ற
முடிவுக்கு வந்துள்ளார். தற்போது முழுமூச்சாக தான் இயக்க உள்ள படத்துக்கான
ஸ்கிரிப்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.