அஞ்சான் கேம் வெளியிடு

சினிமா உலகமே ஒரு சென்ட்டிமெண்ட் உலகம். பல கோடிகளை முதலீடு போட்டு படம் எடுப்பதால் சின்னச்சின்ன விஷயங்களில் கூட சென்ட்டிமெண்ட் பார்த்து வருகிறார்கள். அது பல நேரங்களில் எல்லை மீறியும் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணமாக சமீபத்திய சம்பவம் ஒன்று..! படங்களின் புரமோஷனுக்காக அப்படத்தின் கான்செப்ட்டை அடிப்படையாக வைத்து கேம் உருவாக்குவது சமீப காலமாக வழக்கத்தில் உள்ளது. ஹாலிவுட்டில் தொடங்கிய இந்த வழக்கம் பாலிவுட்டிலும் தற்போது வழக்கத்தில் உள்ளது.

தமிழில் சில படங்களுக்கும் இப்படி கேம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கோச்சடையான் படம் வெளியாவதற்கு முன் அப்படத்தின் கேம் வெளியிடப்பட்டது. இப்படத்தை அடுத்து விஜய் இயக்கிய சைவம் படத்திற்கும் கேம் உருவாக்கப்பட்டது. இந்த கேமை உருவாக்கியவர்கள் நடிகர் நாசரின் மகன் பைசலும், அவரது நண்பர்களும். இவர்கள்தான் பின்னர் சாலை விபத்தில் சிக்கினர். கோச்சடையான், சைவம் படங்களை அடுத்து தமிழில் கேம் உருவாக்கப்பட்டிருப்பது அஞ்சான் படத்துக்குத்தான்.
இந்த கேமை சில தினங்களுக்கு முன் சூர்யா வெளியிட்டார். அஞ்சான் கேம் வெளியான சில தினங்களில், அந்த கேம் சிறுவர்களின் மனதில் வன்முறையை பதிய வைப்பதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், கேம் வெளியிட்ட தமிழ்ப்படங்கள் பெரிதாக வெற்றியடையாது என்று சிலர் சொல்லத்தொடங்கி உள்ளனர். அதற்கு வலு சேர்க்கும் வகையில் ஏற்கனவே கேம் வெளியிட்ட படங்களின் வசூலை சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த கேம் சென்ட்டிமெண்ட்டை அஞ்சான் படம் உடைக்குமா?