தெரியாம உன்ன காதலிச்சிட்டேன் சினிமா விமர்சனம்




















நாயகன் விஜய் வசந்த் சென்னையில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். எந்தவித பொறுப்பும் இல்லாமல் கிடைக்கிற பணத்தை வைத்துக் கொண்டு நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் நாயகி ரஸ்னாவை பார்க்கும் விஜய் வசந்த், அவள்மீது காதல் கொள்கிறார்.

பிளஸ்-2 படித்து வரும் ரஸ்னா ஒரு சோம்பேறி. அதேபோல், குழந்தைத்தனமான குணாதிசயம் கொண்டவள். அவளின் போன் நம்பரை தெரிந்துகொள்ளும் விஜய் வசந்த், அவளை கவர தனது செல்போன் மூலம் அவளுக்கு காதல் எஸ்.எம்.எஸ்களை தட்டி விடுகிறார். அதைப் பார்க்கும் ரஸ்னாவுக்கு விஜய் வசந்த் மீது காதல் மலர்கிறது. 


இவர்கள் காதலித்த 1 வாரத்திற்குள் ரஸ்னாவுக்கும் அவளது மாமா பவனுக்கும் திருமணம் செய்துவைக்க அவளது பெற்றோர் முடிவெடுக்கின்றனர். இதை பவன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இந்நிலையில், தன்னுடைய மாமாவுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்று பயந்த ரஸ்னா, விஜய் வசந்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும், எங்காவது கூட்டிச் செல்லுமாறும் வற்புறுத்துகிறாள்.


அதன்படி, ஒருநாள் ரஸ்னா பள்ளியில் சுற்றுலா செல்வதாக கூறி, வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு விஜய் வசந்துடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து கொண்டிருக்கும் இவர்களை, ரஸ்னாவின் மாமா பவன் பார்த்து விடுகிறார். 


இவர்களை கண்டிக்கும் பவனிடம் இருவரும் தங்களுடைய காதலை எடுத்துக் கூறுகிறார்கள். இறுதியில் பவன் அவர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கிறார். இந்த 15 நாட்களுக்குள் இருவரும் ஒருவரையொருவர் தொட்டுக் கொள்ளக்கூடாது. 15 நாட்கள் கழித்தும் உங்களுக்குள் காதல் இருந்தால் என்னிடம் கூறுங்கள். நானே உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறுகிறார்.


இறுதியில், நாயகனும் நாயகியும் 15 நாட்கள் சந்தோஷமாக வாழ்ந்து வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை. 


நாயகன் விஜய் வசந்த் படத்தில் ஹீரோயிசம் காட்டாமல் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்துவரும் ஒவ்வொரு படத்திலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வரிசையில் இந்த படமும் அவருக்கு மேலும் ஒரு வெற்றியைக் கொடுத்துள்ளது. 


நாயகி ரஸ்னா குழந்தைத்தனமான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவருடைய நடிப்பு நமக்கு பழைய நடிகை சரோஜா தேவியை நினைவுபடுத்துகிறது. விஜய் வசந்தின் பெற்றோராக நடித்திருக்கும் நிழல்கள் ரவி-உமா பத்மநாபன் ஆகியோர் பொறுப்பான தம்பதிகளாக மனதில் நிற்கிறார்கள். கார் டிரைவராக வரும் மயில்சாமி வரும் காட்சிகள் காமெடியாக இருக்கிறது. 


படத்தின் முதல் பாதி சற்று சோகமாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி நகைச்சுவையாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ராமு. புதுமையான கதையுடன் தமிழ் சினிமாவுக்குள் நுழையும் இயக்குனர்களுக்கு தமிழ் ரசிகர்கள் என்றும் ஏமாற்றத்தைத் தந்ததில்லை. அந்த வரிசையில் அறிமுக இயக்குனர் ராமு ரசிகர்கள் மனதில் கண்டிப்பாக இடம்பெறுவார் என்று சொல்லலாம். முதல் பாதியில் மட்டும் சுவாரஸ்யமான காட்சிகளை கொடுத்திருந்தால் படத்தின் போக்கு வேறுவிதமாக இருந்திருக்கும்.


பி.ஆர்.ஸ்ரீநாத் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையும் படத்திற்கு மெருகூட்டியிருக்கிறது. எல்.கே.விஜய் ஒளிப்பதிவு கொடைக்கானலை அழகாக படமாக்கியிருக்கிறது. பாடல் காட்சிகளிலும் இவரது கேமரா அழகாக பளிச்சிடுகிறது. 



No comments:

Post a Comment