ஆடாம ஜெயிச்சோமடா சினிமா விமர்சனம்


















கிரிக்கெட் விளையாட்டில் ஏற்படும் சூதாட்டம் பற்றிய கதையே ஆடாம ஜெயிச்சோமடா.

சென்னையில் கால் டாக்சி டிரைவராக பணிபுரிந்து வரும் கருணாகரன், நண்பனுடைய சகோதரி விஜயலட்சுமியை காதல் திருமணம் செய்து கடன்களில் தத்தளித்து வருகிறார். 


இந்நிலையில் கிரிக்கெட் சூதாட்ட புரோக்கரான பாலாஜி, பை நிறைய பணத்துடன் கருணாகரன் டாக்சியை புக் செய்து பயணம் செய்கிறார். இந்த பயணத்தின்போது இருவரும் தங்களை அறிமுகம் செய்துக்கொண்டு பழக ஆரம்பிக்கிறார்கள். அப்போது கருணாகரன் ரூ.10 லட்சம் கடனில் இருப்பதாக பாலாஜியிடம் கூறுகிறான். அப்போது பாலாஜி தற்பாது ஒரு மேட்ச் நடந்துக் கொண்டிருக்கிறது. அதில் எனக்கு நிறைய பணம் வரும். உனக்கு கொஞ்சம் பணம் தரேன் என்று சொல்லிவிட்டு ஹோட்டலில் இறங்கிக் கொள்கிறார். மறுநாள் வந்து தன்னை பிக் அப் செய்துகொள்ளுமாறும் கூறிவிட்டு செல்கிறார்.


இதற்கிடையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீஸ் உயர் அதிகாரியான கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் சிம்ஹா தலைமையிலான தனிப்படை தேடி வருகிறது. பாலாஜியை பிக் அப் செய்துகொள்ள மறுநாள் ஹோட்டலுக்கு வரும் கருணாகரன், அங்கு பாலாஜி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்க்கிறார். அதிர்ந்து போன கருணாகரன், இன்ஸ்பெக்டரான சிம்ஹாவிடம் சென்று கூறுகிறார். 


உடனே சிம்ஹா ஹோட்டலுக்கு வந்து பாலாஜியை கொலை செய்தது யார் என்பது பற்றி விசாரிக்கிறார். அப்போது அங்கிருக்கும் கேமராவில் கருணாகரன், முந்தைய நாள் இரவு பாலாஜி அறைக்கு வந்துபோனது பதிவாகியிருக்கிறது. ஆதலால், கருணாகரன் தான் பாலாஜியை கொலை செய்திருப்பான் என்று கருணாகரனை கைது செய்து அழைத்து செல்கிறார் சிம்ஹா.


பாலாஜி இறந்துபோனதால், அவனிடம் கிரிக்கெட் சூதாட்டத்திற்காக பணத்தை கொடுத்திருந்த நரேன், கருணாகரன் கைது செய்யப்பட்டது அறிந்ததும் பணத்தை பற்றிய முழு விவரமும் அவனுக்கு தெரியும் என்று அவனை கடத்தி செல்ல முடிவெடுக்கிறார். இதற்காக வேறு மாநில போலீஸ் அதிகாரிபோல் வேடம் அணிந்து, கருணாகரனை சிம்ஹாவிடம் இருந்து அழைத்து செல்கிறார். 


இறுதியில் இவர்களிடமிருந்து கருணாகரன் தப்பித்தாரா? இல்லையா? பாலாஜியை யார் கொலை செய்தது? என்பதை காமெடி கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.


இதுவரையிலான படங்களில் சிறு வேடம் ஏற்று நடித்து வந்த கருணாகரன், இப்படத்தில் முழுநீள கதாநாயகனாக நடித்துள்ளார். அப்பாவியான முகத்தை வைத்துக் கொண்டு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் விஜயலட்சுமிக்கு நடிக்க வாய்ப்புகள் குறைவு.


நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சிம்ஹா, காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார். ராதாரவி, கே.எஸ்.ரவிக்குமார், ஆடுகளம் நரேன், பாலாஜி ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்கள்.


ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். துவாரகநாத் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை. கிரிக்கெட் சூதாட்டத்தை மையக் கருவாக வைத்துக் கொண்ட இயக்குனர் பத்ரி, திரைக்கதையில் கூடுதல் கவனத்துடன் அமைத்திருக்கலாம். படத்தின் முதற்பாதி மிகவும் பொறுமையாக செல்வதை தவிர்த்திருக்கலாம். இவருடைய முந்தைய படத்தை ஒப்பிடும்போது இது சற்று சறுக்கல்தான் என்று சொல்லவேண்டும்.

No comments:

Post a Comment