நாய்கள் ஜாக்கிரதை – திரை விமர்சனம்ராணுவ முகாமில் பயிற்சி பெற்று வருகிறது நாய் மணி. இதன் பயிற்சியாளர் தீவிரவாதிகளால் குண்டடி பட்டு இறந்து விடுகிறார். இதனால் மணி, சிபி இருக்கும் பக்கத்து வீட்டிற்கு இடம் பெயர்கிறது.
போலீஸ் அதிகாரியான சிபி பணியில் இருக்கும் போது ஒரு பெண்ணை கடத்திய கும்பலுடன் மோதுகிறார். இதில் சிபிக்கு காலில் குண்டு பாய்ந்து காயமடைகிறார். சிகிச்சை பெற்று வீட்டில் மனைவி அருந்ததி மற்றும் தங்கையுடன் ஓய்வெடுத்து வருகிறார்.
சிபியின் பக்கத்து வீட்டில் இருப்பவர் சொந்த ஊருக்கு செல்வதால் மணியை நான்கு நாட்கள் பார்த்துக் கொள்ளுமாறு கூறுகிறார். இதற்கு சிபி மறுக்கிறார். இதனால் பக்கத்து வீட்டுக்காரர் அவரது வீட்டிலேயே மணியை கூண்டில் அடைத்து விட்டு செல்கிறார்.
சில சிறுவர்களால் மணிக்கு தொல்லை ஏற்பட உடனே மணியை காப்பாற்றி வீட்டிற்குள் அழைத்து செல்கிறார் சிபி. பிறகு பக்கத்து வீட்டுக்காரர் இறந்துவிட, மணி இராணுவத்தில் பயிற்சி பெற்ற நாய் என்று சிபிக்கு தெரிய வருகிறது. இதனால் மணியுடன் பாசத்துடன் பழக ஆரம்பிக்கிறார் சிபி.
ஓய்வு முடிந்து சிபி வேலைக்கு சென்ற சமயத்தில் சிபியின் மனைவி அருந்ததியை ஒரு மர்ம கும்பல் கடத்துகிறது. கும்பலை பற்றி விசாரிக்கும் போது, இதற்குமுன் தாக்குதல் நடத்திய கும்பல் என்று சிபிக்கு தெரியவருகிறது. மனைவியை தேடி அலைகிறார். மனைவியை விடுவிக்க வேண்டும் என்றால் பணம் வேண்டும் என்று கடத்தல் கும்பலின் தலைவன் பாலாஜி மிரட்டுகிறான்.
இதனால் பணம் கொடுத்து தன் மனைவியை மீட்க சிபி செல்கிறார். அங்கு அருந்ததியை உயிருடன் சவப்பெட்டியில் வைத்து புதைத்துவிட்டதாக சொல்கிறார். சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்ட அருந்ததி, 6 மணி நேரம் மட்டுமே உயிருடன் இருக்க முடியும் என்ற நிலையில், அந்த 6 மணி நேரத்திற்குள் தனது மனைவியை சிபி, மணி உதவியுடன் காப்பற்ற முயற்சி எடுக்கிறார். இதில் சிபி வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தில் சிபிராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் வந்திருந்தாலும், சிறப்பான ரீ என்ட்ரீ என்றே சொல்லலாம். இது இவருக்கு ஒரு முக்கியமான படம். போலீஸ் அதிகாரியாக மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மனைவியை காணாமல் பதைபதைக்கும் காட்சியில் இயல்பாக நடித்து மனதில் நிற்கிறார். சிறு வேடமாக இருந்தாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார் அருந்ததி.
படத்தில் மணி என்னும் முக்கியமான கதாபாத்திரமாக நாய் நடித்துள்ளது. படத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து பட்டைய கிளப்பி ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது. மணிக்கு சிறப்பாக பயிற்சி கொடுத்தவருக்கு அதிக பாராட்டுகளை தரலாம்.
ஒருபடம் வெற்றிப் பெற வேண்டுமானால், கதை மற்றும் ஹீரோவைத் தவிர ரசிகர்களை கவரக்கூடிய வேறு ஏதாவது ஒன்று வேண்டும் என்பதை புரிந்துகொண்ட இயக்குனர் சக்தி செளந்தர் ராஜன், ஒரு நாயை மையப்படுத்தி கதையை சுவாரஸ்யமான திரைக்கதையால் நகர்த்தியுள்ளார். இடைவெளியில் நல்ல திருப்பத்தை கொடுத்தாலும் பிற்பகுதியில் சிறு தொய்வு ஏற்படுகிறது.
தரணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக டாக்கி டாக்கி பாடல் ஆட்டம் போட வைக்கிறது. இவரது பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. நிஸார் ஷாபியின் ஒளிப்பதிவில் திரில்லர் படத்திற்குண்டான அனைத்து அம்சங்களையும் காண முடிகிறது.


No comments:

Post a Comment