வன்மம் – திரை விமர்சனம்












விஜய் சேதுபதியும் கிருஷ்ணாவும் நெருங்கிய நண்பர்கள். விஜய் சேதுபதி ஊரின் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர். கிருஷ்ணா நடுத்தரவர்க்க குடும்பத்தை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் வேலைக்கு செல்லாமல் ஜாலியாக ஊரை சுற்றி பொழுதை கழித்து வருகிறார்கள்.
மறுபக்கம் மதுசூதனனும் சுப்ரமணியபுரம் ராஜாவும் பிசினஸ் பார்ட்னர்கள். ஆனால், தொழிலில் சண்டை ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள். மதுசூதனனின் தங்கையான சுனைனாவை கிருஷ்ணா காதலித்து வருகிறார். இந்த விஷயம் மதுசூதனனுக்கு தெரிந்ததும் முதலில் கிருஷ்ணாவை கண்டித்து அனுப்புகிறார். அதை மீறியும் கிருஷ்ணாவும் சுனைனாவும் சந்திக்கிறார்கள்.
இதனால் கோபமடையும் மதுசூதனன், கிருஷ்ணா, விஜய் சேதுபதி ஒன்றாக இருக்கும் போது கிருஷ்ணாவை அடிக்க செல்கிறார். அப்போது பெரிய மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் எதிர்பாராத விதமாக விஜய் சேதுபதி மதுசூதனனை கொலை செய்து விடுகிறார். இதனால், மன வேதனை அடைகிறார் விஜய் சேதுபதி. இவர் இப்படி இருக்கும் நிலையில் கிருஷ்ணாவிற்கும் விஜய் சேதுபதியும் சில காரணங்களால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள்.
மதுசூதனனின் எதிரியான சுப்ரமணியபுரம் ராஜா, மதுசூதனனின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்துகிறார். இதிலிருந்து அந்த குடும்பத்தை காப்பாற்றுகிறார் விஜய் சேதுபதி. தான் செய்த தவறுக்காக மதுசூதனன் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அவர்களுடன் இருந்து வருகிறார் விஜய் சேதுபதி.
அதேசமயம், நண்பர்கள் பிரிந்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கிருஷ்ணாவை தன் வசமாக்கி மதுசூதனனின் குடும்பத்தை அழிக்க நினைக்கிறார் ராஜா.
இறுதியில் பிரிந்த நண்பர்களான விஜய் சேதுபதியும் கிருஷ்ணாவும் ஒன்று சேர்ந்தார்களா? கிருஷ்ணா, சுனைனா காதலில் ஜெயித்தார்களா? ராஜாவிடம் இருந்து மதுசூதனனின் குடும்பத்தை விஜய் சேதுபதி காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் விஜய் சேதுபதி ராதா என்னும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் முறையாக ஆக்‌ஷனில் களம் இறங்கிய இவர் தன் நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். படம் முழுக்க வெள்ளை சட்டை வெள்ளை வேட்டியுடன் பெரிய மனிதர் தோரணையுடன் வலம் வருகிறார். இவருடைய ஆக்‌ஷன் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
படத்தில் கிருஷ்ணா, செல்லதுரை கதாபாத்திரத்தில் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆடல் பாடல் என யதார்த்தமான நடிப்பை காண்பித்திருக்கிறார். நாயகியான சுனைனா நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கிறார். ஆனால், வழக்கமான சினிமா பாணியில் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை கொடுத்த படங்களை விட நட்புக்கு மரியாதை கொடுத்த படங்கள்தான் அதிகம். அந்த வரிசையில் நட்பை கதைக்களமாக வைத்து இந்த படம் உருவாகியிருக்கிறது. முதல் பாதியில் திரைக்கதையில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும், பிற்பகுதியில் அதனை சரிசெய்து பாராட்டு பெற்றிருக்கிறார் இயக்குனர் ஜெய் கிருஷ்ணா.
தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பாலா பரணியின் ஒளிப்பதிவை ரசிக்கலாம்.


No comments:

Post a Comment