வேர்ட்டில் டெம்ப்ளேட்டை உருவாக்குவது எப்படி

நார்மல் டெம்ப்ளேட்: வேர்ட் தொகுப்பைத் தொடங்கும்போது புதிய டாகுமெண்ட் ஒன்று திறக்கப்பட்டு நம் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கிறது அல்லவா? இந்த செட் அப் தான் நார்மல் டெம்ப்ளேட் அன அழைக்கப்படுகிறது. இதுதான் அனைத்து டாகுமெண்ட்களின் அடிப்படை ஸ்லேட்டாக இருக்கும். இதனை மாற்றினால் அடுத்து தயாராகும் புதிய டாகுமெண்ட்கள் அனைத்தும் மாற்றங்களுடன் கூடிய டெம்ப்ளேட்டையே புதிய நார்மல் டெம்ப்ளேட்டாக வைத்துக் கொள்ளும். 



இந்த நார்மல் டெம்ப்ளேட் பைல் நீங்கள் வேர்ட் தொகுப்பை இன்ஸ்டால் செய்த டைரக்டரியில் இருக்கும். இதனை நீங்கள் தெரியாமல் அழித்துவிட்டால் வேர்ட் தொகுப்பு புதிய நார்மல் டெம்ப்ளேட் பைல் ஒன்றை உருவாக்கிக் கொள்ளும்.
ஹைலைட்டிங் கலர்: அச்சில் உள்ள ஆவணங்களைப் பயன்படுத்துகையில், முக்கியமான சில சொற்களை, ஹைலைட்டர் என்னும் பேனாவினால், வண்ணத்தில், சொற்களின் எழுத்துக்கள் தெரியும் வகையில் அமைப்போம். வேர்ட் தொகுப்பிலும் இதே போல் அமைக்கலாம். பல்வேறு வண்ணங்களில், சொற்களை குழுக்களாகப் பிரிக்கும் வகையில் அமைக்கலாம். தேவைப்படும்போது வண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம்.
இதற்குப் பயன்படும் டூலின் பெயர் ஹைலைட் டூல் (Highlight Tool). முதலில் வேர்ட் தொகுப்பில், மாறா நிலையில் இது மஞ்சள் வண்ணமாக இருக்கும். கலர் பிரிண்டரில் அச்சிட இது நன்றாக இருக்கும் என்பதால், இந்த வண்ணம் தரப்பட்டுள்ளது. இதனை மாற்ற விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம். மெனு பாரில் உள்ள ஐகான்களிடையே ab என்ற எழுத்துக்களுடன், ஹைலைட்டர் பேனாவுடன் ஒரு ஐகான் தென்படும். இதன் அருகில் கர்சரைக் கொண்டு சென்று, கீழாக உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால், எந்த வண்ணம் வேண்டுமோ, அந்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
நீளவரியை மடக்கி அமைக்க: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம்.
இதனால் வலது மார்ஜினில் அழகின்றி ஒரு இடைவெளி ஏற்படும். இரண்டு பக்கமும் அலைன் மெண்ட் எனில், முதல் வரியில் எழுத்துக்களுக்கிடையே அழகற்ற இடைவெளி ஏற்படும். இந்த சிக்கலின்றி அமைக்க வேர்ட் ஓர் ஆப்ஷன் தந்துள்ளது. அதனைத் தேர்ந்தெடுத்து அமைத்துவிட்டால், இணைய முகவரி அல்லது மிக நீளமான சொல் தேவைப்பட்ட இடத்தில் பிரிக்கப்பட்டு அமைக்கப்படும்.
டாகுமெண்ட்டைத் திறந்து கர்சரை எந்த இடத்தில் இணைய முகவரியைப் பிரிக்க வேண்டுமோ, அந்த இடத்தில் கொண்டு செல்லவும். பொதுவாக ஸ்லாஷ் எனப்படும் சாய்வு கோட்டின் அருகே பிரிக்க விரும்புவோம். இந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும். அடுத்து Insert டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Symbols குருப்பில் Symbolஎன்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், More Symbols என்பதைத் தேர்ந்தெடுத்தால், Symbolsடயலாக் பாக்ஸ் திறக்கப்படும். வேர்ட் 2003ல், Insert மெனுவிலேயே Symbol பிரிவினைப் பெறலாம். இதனை அடுத்து, Special Characters என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து No Width Optional Break என்பதில் கிளிக் செய்திடவும்.
இவ்வாறு பிரித்துவிடப்பட்டுள்ளதா என்று நீங்கள் யு.ஆர்.எல். முகவரியை ஸ்கிரீனில் பார்த்து சொல்ல முடியாது. ஆனால் பிரிக்கப்பட்டிருக்கும். இதனைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என எண்ணினால், பாராகிராப் பிரேக் காட்டுவதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், அனைத்து பாரா மார்க்கர்களுடன், இந்த பிரித்த இடமும் காட்டப்படும். பிரித்த இடத்தில் சிறிய நீள் கட்டம் தெரியும். இணைய முகவரி தான் என்றில்லை. எந்த நீள சொல்லையும் இது போல பிரித்து அமைக்கலாம்.