ஹெர்குலிஸ் - விமர்சனம்

நீங்கள் கிளாடியேட்டர், 300 போன்ற பாலிவுட் படங்களின் தீவிர ரசிகர்கள் என்றால் இப்படம் உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும். கிளாடியேட்டர், 
300 ஆகிய படங்களில் உள்ளது போன்ற வன்முறை காட்சிகள் இப்படத்தில் இல்லையென்றாலும், இப்படம் தனித்துவத்துடன் காட்சியளித்து உங்கள் மனதில் இடம் பிடிக்கும் என்பது மிகையல்ல.
ஆறு பேர் கும்பலுக்கு கூலிப்படை தலைவனான ஹெர்குலிஸ் மனிதனை விட அதிக சக்தி கொண்டவன். ஜீயஸ் கடவுளுக்கு பிறந்தவன் என்றாலும் ஹெர்குலிஸ் மனிதன் என்றே இக்கதையில் போற்றப்படுகிறான். தன்னை போன்று இரு மடங்கு எடை கொண்ட மிருகத்தை சந்திக்கும் அளவுக்கு ஹெர்குலிஸ் பயிற்சி பெற்றவன். கூலிப்படைத்தலைவனான அவனை திரேஸ் நாட்டு மன்னன் கோட்டீசின் மகளான எர்கினியா சந்தித்து தங்கள் நாட்டு வீரர்களுக்கு போர் பயிற்சி அளித்து தங்களது எதிரி மன்னனான ரெஸ்சுய்சை போரில் வீழ்த்தி தனது நாட்டை காக்கவேண்டும் என்று வேண்டுகிறாள். இதற்காக ஹெர்குலிசின் எடையை போல் இரு மடங்கு தங்கத்தை வழங்குவதாக அவனுக்கு வாக்குறுதி அளிக்கிறாள்.

சண்டைப்படம் என்றாலும் எர்கினியாவுடன் சில நேரங்களில் ஹெர்குலிஸ் காதலிலும் ஈடுபடுகிறான். ஆனால் இப்படம் தசைக்கும், சண்டைக்கும் இடையேயான படம் என்பதால் குறுகிய காலத்திற்கு மட்டுமே காதலுக்கு நேரமிருக்கிறது. திரேஸ் நாட்டு வீரர்கள் சிலருடன் முதலில் காட்டுமிராண்டி மாயாவிக் குழுவினரை வெல்லும் ஹெர்குலிஸ் குழுவினர், பின்னர் ரெஸ்சுய்சுடன் போரிட்டு அவனையும் கைது செய்து திரேஸ் நாட்டுக்கு அழைத்து வருகிறான்.


திரேஸ் நாட்டில் சித்ரவதைக்கு உள்ளாகும் ரெஸ்சுய்ஸ், ஹெர்குலிசிடம் கோட்டீஸ் மன்னனின் கொலை வெறியை பற்றிக் கூறுகிறான். தனது தந்தை கோட்டீசிடமிருந்து தன் மகனை காக்கும் பொருட்டே தங்கம் தருவதாக தந்திரமாக பேசி ஹெர்குலிசை திரேஸ் நாட்டுக்கு வரவழைத்தாக எர்கினியா உண்மையை உடைக்கிறாள். இதனால் கோட்டீஸ் மன்னனிடம் இருந்து நாட்டை காப்பாற்ற நினைக்கிறான் ஹெர்குலிஸ். அவனது எண்ணம் பலித்ததா, கோட்டீஸ் மன்னனிடமிருந்து ஹெர்குலிஸ் நாட்டை காத்தானா என்பதே மீதி கதை.


படத்தின் 3 டி எபெக்ட் ஹர்குலிசின் ஆயுதத்தையும், அவனது போர் முறையையும் தத்ரூபமாக காட்டியிருக்கிறது. படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்குகள் மெய் சிலிர்க்க வைப்பதாக அமைந்துள்ளன. இதற்கான பாராட்டுகள் அனைத்தும் ஒளிப்பதிவாளர் டாண்டே ஸ்பின்னோட்டியையும், இசையமைப்பாளர் பெர்ணாண்டோ வெலாஸ்க்யூசையும் தான் சேரும்.


ரெஸ்லி வீரரான நாயகன் ஹெர்குலிஸ் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் எட்டு மாதங்கள் கடுமையான பயிற்சி செய்ததுடன், இப்படத்திற்காக ஜிம்மே கதியென்று கிடந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளும் மிக சிறப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.