ஸ்மார்ட் போன்களின் பெரிய திரை பற்றி தெரியுமா ?

அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்துகிற எந்த ஸ்மார்ட் மொபைல் போன்களின் ஹார்ட்வேர் அம்சங்களைக் கவனித்துப் பார்த்தால், அவற்றில் 
இரண்டு விஷயங்கள் நமக்குப் புலப்படும். முதலாவதாக, புதிய போன் அறிமுகமாகும்போது, அதன் முந்தைய ஸ்மார்ட் போனைக் காட்டிலும், இதன் திரை சற்றுப் பெரியதாக அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாவதாக, அதன் பேட்டரியின் திறன் சற்று உயர்வாக இருக்கும்.
எடுத்துக் காட்டாக, சாம்சங் காலக்ஸி ஸ்மார்ட் போன்களைப் பார்க்கலாம். காலக்ஸி எஸ் போனின் திரை 4 அங்குலமாக அறிமுகமானது. இதன் திரை 233 பிக்ஸெல் அடர்த்தியுடன் டிஸ்பிளே கொண்டிருந்த்து. பேட்டரியின் திறன், 1500 mAh ஆக இருந்தது. அடுத்து வந்த எஸ்2 போனில் திரை 4.3 அங்குலமாக அதிகரித்து இருந்தது. பிக்ஸெல் அடர்த்தி 218 பி.பி.ஐ. (PPI) ஆக இருந்தது. இதன் பேட்டரி 1650 mAh ஆக இருந்தது. எஸ்3 போனில் திரை 306 பி.பி.ஐ. திறனுடன் 4.8 அங்குலம் மற்றும் பேட்டரி 2,100 mAh ஆகத் தரப்பட்டது. எஸ்4 போனில் திரை 306 பி.பி.ஐ. திறனுடன் 4.99 அங்குலம் மற்றும் பேட்டரி 2,600 mAh ஆகத் தரப்பட்டது. அண்மையில் வெளியான சாம்சங் காலக்ஸி எஸ்5 ஸ்மார்ட் போனின் திரை 5.1 அங்குலத்தில், 432 பிக்ஸெல் அடர்த்தி கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்த்தது. இதன் பேட்டரி திறன் 2,800 mAh ஆக உள்ளது. 

இதே வழக்கத்தினை எச்.டி.சி. மற்றும் நோக்கியா போன்களிலும் காணலாம். ஆப்பிள் நிறுவனம் இந்த அளவிற்குச் செல்லவில்லை என்றாலும், ஐபோன் 6ல் திரை 4.7 அங்குலமாக தன் போட்டி நிறுவனங்களின் செயல்பாட்டினை ஒட்டி அமைத்துத் தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மற்ற அனைத்து நிறுவனங்களும் இதே வழக்கத்தினைப் பின்பற்றுவதை நாம் காணலாம்.


2011 ஆம் ஆண்டுக்கு முன்னர், எந்த ஒரு மொபைல் போனை எடுத்தாலும், அதன் திரை 2.5 அங்குலத்திலிருந்து 4 அங்குலத்திற்குள்ளாகத்தான் இருந்து வந்தது. 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர், 4 அங்குலத்திற்கும் குறைவான திரையுடன் போன்கள் வரவில்லை. ஏன், மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்களைப் போல திரையுடன் வரத் தொடங்குகின்றன. இதன் அடிப்படைக் காரணத்தினைப் பார்க்கலாம்.


1. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே, விற்பனச் சந்தையில் தங்கள் போன் அதிகமாகப் பேசப் பட வேண்டும் என எண்ணிய நிறுவன்ங்கள், போனின் திரையைப் பெரிதாக்கி, அதனை ஒரு சிறப்பம்சமாக எடுத்துரைத்தனர். ஐபோன் 5 வெளியான போது, அதன் மிகச் சிறப்பான விஷயம் அதில் தரப்பட்ட புதிய ஏ6 சிப் தான். ஆனால், எல்லாரும் அதன் திரையைப் பற்றியே, அதிகம் எடுத்துரைத்தனர். 2013ல் எச்.டி.சி. வெளியிட்ட போனின் திரை 4.7 அங்குலமாக இருந்ததை வாடிக்கையாளர்கள் அதிகம் வரவேற்றதனால், வேறு வழியின்றி, அடுத்த எம்8 போனின் திரையை 0.3 அங்குலம் அதிகப்படுத்தியது எச்.டி.சி.நிறுவனம். தொடர்ந்து இந்த விளையாட்டில் திறமையைக் காட்டியது சாம்சங் நிறுவனம்.


2. ஆப்பிள் நிறுவனம், 2007ல், முதல் ஐபோனை வெளியிட்ட போது, மற்ற மொபைல் போன் நிறுவனங்கள், ஆப்பிள் போனின் வடிவமைப்பினைத் தங்கள் போனிலும் வாடிக்கையாளர்கள் விரும்புவதை உணர்ந்து அதே போல் தொடர்ந்தனர். ஐபோனில் இருந்த பளபளப்பினைத் தர முடியாவிட்டாலும், திரையின் அகலத்தை அதிகப்படுத்தினர். ஆனால், 2010ல் சாம்சங் காலக்ஸி போன்களில் திரைகளில் ஜாலம் காட்டியவுடன், அதனையே மற்ற நிறுவனங்களும் பின்பற்றத் தொடங்கின.


3. பொதுவாகவே, மொபைல் போன் விற்பனைச் சந்தையில், ஆயிரத்திற்கு மேற்பட்ட மாடல் போன்கள் ஒரே நேரத்தில் விற்பனையில் இருந்தாலும், அதிகம் பேசப்படுவது ஒரு சில போன்கள் குறித்தே இருக்கும். இந்த போன்களின் திரை அளவு தான் அதிகம் பேசப்படும் பொருளாகவும் இருந்தது. 


4. தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றமும் இந்த மாற்றங்களுக்குத் துணை புரிந்தன. 2007ல், அதிக அடர்த்தி கொண்ட, பெரிய திரைகள் அமைப்பதுவும், அதிக திறன் கொண்ட பேட்டரியை இணைப்பதுவும் கூடுதலான தயாரிப்புச் செலவினை நிறுவனங்களுக்குத் தந்து வந்தன. அதிக பிக்ஸெல் திறனுடன் 5 அங்குல அளவில் ஒரு திரையைத் தருவது மிகச் சிரமமாக இருந்தது. ஆனால், இன்று ஆறு அங்குல அகலத்திரையை, அதிக அளவு பிக்ஸெல் அடர்த்தி கொண்டு பெறுவது மிக எளிதாக மாறிவிட்டது. தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாறுதல்களே இதற்குக் காரணமாகும். 


5. கம்ப்யூட்டராக மாறிய ஸ்மார்ட் போன்கள், பெரிய திரையை ஒரு கட்டாயமாக்கிவிட்டன. 2007 ஆம் ஆண்டில், ஸ்மார்ட் போன் அனைத்து வாடிக்கையாளர்களிடமும் சென்றடைந்து ஒரு பெரிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படவே இல்லை. ஏழு ஆண்டுகளுக்கு முன், ஒரு ஸ்மார்ட் போனில் மியூசிக் பிளேயர், மொபைல் வெப் பிரவுசர் மற்றும் போனின் அடிப்படை செயல்பாடுகள் ஆகியவையே பெரிதாகப் பேசப்பட்டன. ஆனால், இன்று ஸ்மார்ட் போன்கள், உலகில் உள்ள மக்களை எந்நேரமும் இணைக்கும் ஒரு சாதனமாக மாறிவிட்டது. இதற்கும் திரை பெரிதானதற்கும் என்ன தொடர்பு? ஸ்மார்ட் போன்கள் நம் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் சாதனமாக மாறிவிட்டதால், அது ஒரு கம்ப்யூட்டராகவும், சிறிய தொலைக் காட்சிப் பெட்டியாகவும் மாறிவிட்டது. இதனால், அனைத்து செயல்பாடுகளையும், நிறைவாக மேற்கொள்ள திரை பெரியதாக இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. 


அளவில் பெரிதாகிப் போன போன்களை, சட்டைப் பாக்கெட்டில் வைத்து செல்ல முடியாததால், என் நல்ல சட்டைகள் பல ஒதுக்கப்பட்டுவிட்டனஎன்று ஒரு தமிழ்க் கவிஞர் எழுதும் அளவிற்கு, இன்றைய ஸ்மார்ட் போன்களின் திரைகள் பெரிதாக மட்டுமே இருக்கின்றன. இன்னும் என்ன வளர்ச்சி இருக்கும் என நாம் காத்திருப்போம்.