வீடியோ ஆல்பம் வெளியிட்ட முமைத்கான்
வேட்டையாடு விளையாடு, போக்கிரி, வில்லு, கந்தசாமி, தலைநகரம், சிறுத்தை, மம்பட்டியான் உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்திருக்கும் முமைத்கான், தெலுங்கில் கடந்த பத்து வருடங்களாக முன்னணி கவர்ச்சி நடிகையாக விளங்கி வருகிறார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் கவர்ச்சி நடனமாடி இருக்கிறார். ஒரு பாடலுக்கு நடனமாடும் அயிட்டம் டான்ஸர் என்றாலும் தன் தொழிலில் மிகவும் உண்மையானவர் முமைத்கான். எந்தவொரு படத்தில் நடனமாட ஒப்புக்கொண்டாலும், ஒரு பாட்டுக்கு மூன்று நாட்கள் தனிப்பட்டமுறையில் ரிகர்சல் பார்த்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். நடனம் ஆடுவது பணத்துக்காகவோ புகழுக்காகவோ அல்ல, நடனம் என் உயிர் என்கிற முமைத் கான், அதனாலோ என்னவோ நடனம் ஆடுவதற்காக தான் பிறந்திருப்பதாக நம்புகிறார். நடனத்துக்கு நான் அடிக்ட் ஆகிவிட்டேன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்றும் சொல்கிறார் முமைத்கான்.

அதனால்தான் தன்னுடைய மியூஸிக் ஆல்பத்துக்கு அடிக்ஷன் என்று பெயர் வைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என உட்கார நேரமில்லாமல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் முமைத்கானுக்கு, திடீரென மியூசிக் ஆல்பம் மீது நாட்டம் வந்ததற்கு, உலகப்புகழ் பெற்ற பாடகி ஷகிராதான் காரணம் என்கிறார் முமைத்கான்.

கொலம்பியாவை சேர்ந்த பாடகி, பாடலாசிரியர் ஷகிராவின் ஆல்பத்தைப் பார்த்த பிறகு தன்னுடையை திறமையை வெளிப்படுத்துகிற வகையில், தானும் அப்படியொரு முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாம். அதன் காரணமாகவே, அடிக்ஷன் என்ற இந்த மியூசிக் வீடியோவை உருவாக்கும் முயற்சியில் இறங்கினாராம்.
முமைத்கானின் அடிக்ஷன் ஆல்பம் முதல் ஏசியன் மியூசிக் வீடியோ என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. 9எக்ஸ்ஓ, எம் டிவி ஆகிய உலகப்புகழ் பெற்ற மியூஸிக் சேனல்களில் முமைத்கானின் அடிக்ஷன் ஆல்பம் தொடர்ந்து ஒளிபரப்பானதில் உலக அளவில் முமைத்கானின் புகழ் கூடி இருக்கிறது.

சில தினங்களுக்கு முன் யூடியூபிலும் முமைத்கானின் அடிக்ஷன் ஆல்பம் அப்லோட் செய்யப்பட்டிருக்கிறது. அப்லோட் செய்யப்பட்ட ஒரே வாரத்தில் இதுவரை 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்டு களித்துள்ளனர். முமைத்கானை அனைவருக்கும் நடனம் ஆடுகிற நடிகையாய் மட்டுமே தெரியும். அடிக்ஷன் மியூசிக் ஆல்பத்தில் முமைத்கான் பாடகி அவதாரமும் எடுத்திருக்கிறார். தொழில்முறை பாடகியைப்போல் வசீகரிக்கும் குரலில் பாடல்களைப் பாடி ஆடி இருக்கிறார். பல லட்சம் செலவில் ஒருவாகி உள்ள இந்த மியூஸிக் ஆல்பத்துக்கு சர்வதேச புகழ்பெற்ற டிஜே செயிஸ்வுட் இசையமைத்திருக்கிறார். அடிக்ஷன் ஆல்பத்தைப் பார்த்துவிட்டு திரையுலகத்தை சேர்ந்த பல பிரபலங்கள் முமைத்கானை பாராட்டியதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment