எக்ஸ்
மேன் பட வரிசையில் வந்திருக்கும் 7-வது படம்
எக்ஸ் மேன் – கடந்த
காலத்தின் எதிர்காலம்.
மியூட்டன்ஸ்களை அழிக்கவேண்டும்
என்று அமெரிக்கா அரசு அதிக சக்திவாய்ந்த சென்டினட்ஸ்களை உருவாக்குகிறது.
சென்டினட்ஸ் மனிதர்களோடு ஒன்றியிருக்கும் மியூட்டன்ஸ்களை கண்டறிந்து அழிக்கிறது.
மியூட்டன்ஸ்களும் சென்டினட்ஸ்களை
எதிர்த்து போராடுகின்றனர்.
ஆனால், அவர்களால்
சென்டினட்ஸ்களை வீழ்த்த முடிவதில்லை. எனவே, அவற்றை
அழிக்க அனைத்து மியூட்டன்ஸ்களும் ஒன்று கூடி எக்ஸ் மேன் குழுவுடன் இணைந்து அதை
அழிப்பதற்கு திட்டம் தீட்டுகிறார்கள்.
எதற்காக அந்த சென்டினட்ஸ்களை
உருவாக்கினார்கள் என்பதை அவர்கள் ஆராய்கின்றனர். அப்போது 50 வருடங்களுக்கு முன்னால் மிஸ்டிக் என்னும் மியூட்டன்ஸ், ஆராய்ச்சி என்ற பெயரில் மியூட்டன்ஸ்களை கொடுமைப்படுத்திய டாக்டர்
ஒருவரை கொன்று, அமெரிக்க
அரசிடம் மாட்டிக் கொள்கிறாள்.
அபார சக்தி படைத்த அவளது செல்களை
வைத்துத்தான் இந்த சென்டினட்ஸ்களை உருவாக்கியுள்ளார்கள் என்பதை கண்டறிகின்றனர்.
அதனால், இதை
தடுப்பதற்கு 50 ஆண்டுகள்
பின்னோக்கி சென்று அந்த டாக்டரை மிஸ்டிக் கொலை செய்யாமலும், அவள் அமெரிக்க அரசிடம் சிக்கிக் கொள்ளாமலும் காக்க வேண்டும் என்று
முடிவெடுக்கின்றனர்.
அதற்காக நாயகன் ஹியூ ஜெக்மேன் 50 வருடங்கள் பின்னோக்கி செல்கிறார். அங்கே பேராசிரியர் சார்லஸ் சேவியரை
சந்திக்கிறார். அவர்தான் தன்னை 50 வருடங்கள்
பின்னோக்கி வரவழைத்தவர் என்பதையும், என்ன
காரணத்திற்காக வந்துள்ளேன் என்பதையும் அவரிடம் புரிய வைக்கிறார். அதேபோல், வில்லனான மெக்னிட்டோவையும் நேரில் சந்தித்து இதைப்பற்றி விளக்கி
காரணத்தை அறிய செல்கின்றனர்.
இதற்கிடையில் வில்லன் மெக்னிட்டோ
அந்த காலத்தில் மியூட்டன்ஸ்களை அழிக்க தயாரிக்கப்பட்ட ரோபோக்களை தன் வசமாக்கிக்
கொண்டு, உலகத்தில்
உள்ள மனிதர்களையெல்லாம் அழித்து மியூட்டன்ஸ்களே இந்த நாட்டை ஆளவேண்டும் என்று
திட்டம் தீட்டுகிறார்.
இறுதியில், வில்லனின் திட்டத்தை ஜெக்மேனும், சார்லஸ்
சேவியரும் முறியடித்தார்களா? மிஸ்டிக்
அந்த டாக்டரை கொல்லாமல் தடுத்து, சென்டினட்ஸ்கள்
உருவாவதை தடுத்தார்களா? என்பதே
மீதிக்கதை.
வால்வரின் கதாபாத்திரத்தில்
நடித்திருக்கும் ஹியூ ஜெக்மேன், முந்தைய
எக்ஸ் மென் படங்களில் நடித்திருப்பதுபோல் இதிலும் சிறப்பான நடிப்பை
வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடைய கம்பீரமான தோற்றம் மிரட்டலாக இருக்கிறது.
இவருக்கு இந்த படத்தில் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இல்லாதது ஒரு குறையாக இருக்கிறது.
மிஸ்டிக் கதாபாத்திரத்தில் வரும்
ஜெனீபர் லாரன்ஸ் ஊதா நிறத்திலான தோற்றத்துடன் பயமுறுத்துகிறார். சண்டைக்
காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். இவரை மையப்படுத்தியே கதை நகர்வதால் இவருக்கு
நடிப்பதற்குண்டான வாய்ப்பு அதிகம். அதை அவர் கவனமாகவும், திறமையாகவும் செய்திருக்கிறார்.
50
வருடங்களுக்கு முந்தைய பேராசியரியராக வரும் ஜேம்ஸ் மெக்கோவாய், வில்லனாக வரும் மைக்கேல் ஃபாஸ்பென்டரும் சிறப்பான நடிப்பை
வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இயக்குனர் பிரயான் சிங்கர் எக்ஸ்
மேன் வரிசையில் ஏற்கெனவே வெளிவந்த எக்ஸ் மேன்-பர்ஸ்ட் கிளாஸ் என்ற படத்தை
இயக்கியவர். தற்போது மீண்டும் இந்த படத்தை இயக்கியுள்ளார். மிரட்டலான காட்சிகளை
வைத்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார். சண்டை காட்சிகள்
பிரம்மாண்டத்தை ஏற்படுத்துகிறது. வில்லன் ஒரு ஸ்டேடியத்தையே பெயர்த்தெடுத்து
செல்லும் காட்சி மயிர்க்கூச்செரிய வைக்கிறது.