3ஜி ரோமிங் வசதி நாடு முழுவதும்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர். காம்), டாட்டா டெலிசர்வீசஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள், முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றை அண்மையில் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. 




இதன் மூலம் மொபைல் போன் சேவை மண்டலங்களுக்கு இடையே தொடர்பினை பயனாளர் ஒருவர் தடையின்றிப் பெற முடியும்.
நாட்டில் இயங்கும் 22 மொபைல் தொடர்பு சேவை மண்டலங்களில், 13 மண்டலங்களில் ஆர் காம் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் உரிமங்களைப் பெற்றுள்ளன. டாட்டா டெலிசர்வீசஸ் 9 மண்டலங்களில் பெற்றுள்ளது. ஆர்.காம் தற்போது 3ஜி சேவையினை, டில்லி, மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், இமாச்சலப் பிரதேசம், பீஹார், ஒடிசா, அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு அண்ட் காஷ்மீர் மண்டலங்களில் வழங்கி வருகிறது.
ஏர்செல் நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆர்.காம் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மற்றும் ஆந்திர மாநிலங்களில் 3ஜி சேவையினைத் தன் பயனாளர்கள் ரோமிங் மேற்கொள்கையில் வழங்க முடியும். டாட்ட டெலிசர்வீசஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் மஹாராஷ்ட்ரா, குஜராத், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் (மேற்கு) ஆகிய மாநிலங்களில் 3ஜி சேவை மேற்கொள்ள உதவும்.

இதனால், நாடு முழுவதும் 3ஜி ரோமிங் சேவையினை வழங்கும் நிறுவனமாக ஆர்.காம் இடம் பெறுகிறது. இதன் மூலம் டேட்டா ஆப்பரேட்டராக முதல் இடத்தினை இந்த நிறுவனம் பெறுகிறது. இதன் மூலம் நிறுவனங்களுக்கான ஆர்.காம் சேவை இன்னும் சிறப்பாக இருக்கும் என, ஆர்.காம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.