வசந்தகுமாரன்
படம் தொடர்பாக விஜய் சேதுபதிக்கும் ஸ்டுடியோ 9 ஆர்கே.சுரேஷுக்கும் தகராறு இருந்துகொண்டே இருக்கிறது. அந்தப்
படத்திலிருந்து முற்றிலுமாக விலகிவிட்டேன் என்று விஜய் சேதுபதி அறிவித்திருந்த
நிலையில் இன்று, விஜய் சேதுபதியின் படத்துடன் வசந்தகுமாரன்
பட விளம்பரம் தினப் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
இதனால், வசந்தகுமாரனில் மீண்டும் நடிக்க
ஒப்புக்கொண்டாரா விஜய் சேதுபதி என்ற குழப்பம் எழுந்தது. இந்நிலையில் தனது நிலையை
விளக்கி விஜய் சேதுபதியிடமிருந்து அறிக்கை வெளிவந்துள்ளது.
ஆர்.கே.சுரேஷின்
ஸ்டூடியோ 9 என்ற நிறுவனத்தில்
வசந்தகுமாரன் என்ற திரைப்படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் செய்துகொண்டது உண்மையே.
ஆனால் ஆர்.கே.சுரேஷின் தவறுதலான நடவடிக்கைகளின் காரணமாகவும் அவரின் தகாத
வார்த்தைகளின் காரணமாகவும் நான் வசந்தகுமாரன் திரைப்படத்திலிருந்து கடந்த ஆறு
மாதங்களுக்கு முன்பே விலகி கொள்வதாகவும், நான் வாங்கிய 9
லட்சம் ரூபாய் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் சேர்த்து தருவதாகவும்
அன்றே கூறிவிட்டேன்.
ஆனால், சுரேஷ் என்னிடம் பல கோடி கேட்டு தொடர்ந்து
தொந்தரவு செய்தார். மேலும், சில மர்ம நபர்கள் மூலம் எனக்கு
மிரட்டல்களும் வந்துகொண்டு இருந்தன. இதை தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர்
சரத்குமாரிடம் புகார் அளித்தேன். அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை
நடந்தபொழுது என்னுடைய தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து வசந்தகுமாரன்
திரைப்படத்திலிருந்து முழுவதுமாக என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
இதே
கருத்தை வலியுறுத்தி நடிகர் சங்கத்தில் மீண்டும் புகார் கடிதம் ஒன்றையும்
கொடுத்துள்ளேன். இந்நிலையில், இன்றைய தினம் தமிழ் நாளிதழ் ஒன்றில் நான் நடிப்பதாக வசந்தகுமாரன்
திரைப்படத்தின் விளம்பரம் வந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது போன்ற
செயல்கள் எனது வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கத்துடனே திட்டமிட்டுச்
செயல்படுத்தப்படுவதாக அறிகிறேன்.
நான்
தற்போது ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பில்
நடித்துக் கொண்டிருக்கிறேன். இதைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடி தான்
படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறேன். இந்நிலையில் வசந்தகுமாரன்
திரைப்படம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக வந்துள்ள செய்தியைக் கண்டு மிகுந்த மன
உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.
இது
போன்ற செயல்களில் ஸ்டூடியோ 9 நிறுவனத்தின் உரிமையாளர் சுரேஷ் தொடர்ந்து ஈடுபடுவாரேயானால் அவர் மீது
சட்ட ரீதியாகவும், தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் வந்தால்
காவல்துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பிரச்சினையில் நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் என்னைப் பாதுகாக்கும்
என்ற நம்பிக்கையுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன், என்று அந்த
அறிக்கையில் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment