தமிழ்த் திரையுலகம் மீண்டும் கதவைத் திறக்குமா?













நடிகை ஸ்ரேயாவை தமிழ்த் திரையுலகம் மறந்து விட்டாலும், தெலுங்குத் திரையுலகம் அவரை மறக்காமல் 'மனம்' படம் மூலம் மீண்டும் ஒரு மறுவாழ்வைக் கொடுத்திருக்கிறது. 'எனக்கு 20 உனக்கு 18' படத்தில் அறிமுகமானாலும் ஜெயம் ரவி நடித்த 'மழை' படம் மூலம்தான் யார் இவர் என தன்னைப் பற்றிப் பேச வைத்தார். அழகான தோற்றத்தாலும், கிளாமரான நடிப்பாலும் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் அப்படியே இயக்குனர் ஷங்கரையும் கவர்ந்தார். அதன் பலனாக ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' படத்திலும் நாயகியாக நடித்து நடிப்பிலும், நடனத்திலும் அந்தப் படத்தில் அசத்தியிருந்தார். ரஜினியுடன் நடித்த பின்னும் அவரால் தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகியாக இடம் பிடிக்க முடியவில்லை. விஜய் நடித்த 'அழகிய தமிழ் மகன்,' விஷால் நடித்த 'தோரணை', தனுஷ் நடித்த 'திருவிளையாடல் ஆரம்பம்', விக்ரம் நடித்த 'கந்தசாமி' உட்பட பல படங்களில் நாயகியாக நடித்தவர், வடிவேலு நடித்த 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியதைத் தொடர்ந்து நமது நாயகர்களும், இயக்குனர்களும் அவரை கைகழுவி விட்டனர். அதன் பின் அவரால் தமிழ்த் திரையுலகில் பெரிதாக ஜொலிக்கவே முடியவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் முயற்சிகளை மேற் கொண்ட ஸ்ரேயாவுக்கு சில மாதங்களுக்கு முன் வெளிவந்த 'மனம்' படம் தெலுங்கில் மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
நடிக்க வந்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அதே ஒல்லியான தோற்றத்துடனும், பொலிவான அழகுடனும் ஸ்ரேயா இருப்பதற்கு என்ன காரணம் என்பதை அவரே தெரிவித்திருக்கிறார். தினமும் பவர் யோகா, நடனப் பயிற்சி ஆகியவற்றை செய்யத் தவறவே மாட்டராம். அதோடு சாப்பிடுவதையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வாராம். அதனால்தான் அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரி இருக்கிறேன் எனச் சொல்லியிருக்கிறார். தற்போது 'கோபாலா கோபாலா' என்ற ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் மட்டுமே நடித்து வரும் ஸ்ரேயாவுக்கு தமிழ்த் திரையுலகம் மீண்டும் கதவைத் திறக்குமா...?


No comments:

Post a Comment