இந்தியாவில், ப்ளாடா பிந்தி (Bladabindi) வைரஸ்

இந்தியாவில், ப்ளாடா பிந்தி (Bladabindi) வைரஸ்













டிஜிட்டல் வெளியில், இணைய தளங்களில், குறிப்பாக இந்தியாவில், ப்ளாடா பிந்தி (Bladabindi) என்னும் வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக, 
இந்தியாவில் இயங்கும் கம்ப்யூட்டர் அவசர கால பாதுகாப்பு மையம் (Computer Emergency Response Team-India (CERT-In) தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பெரும்பாலும், மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களையே பாதிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தக் கம்ப்யூட்டரை இது பாதிக்கின்றதோ, அதில் உள்ள தனி நபர் தகவல்களைத் திருடி, திருட்டு நடவடிக்கைகளுக்காகப் பலருக்கு அனுப்புகிறது.


இது யு.எஸ்.பி. டேட்டா கார்ட், பென் ட்ரைவ் எனப் பலவாறாக அழைக்கப்படும் ப்ளாஷ் ட்ரைவ்கள் மூலமாக வேகமாகப் பரவி வருகிறது.
 


இந்தியாவில் வைரஸ், மால்வேர் தாக்கம் மற்றும் பிஷ்ஷிங் மெயில்கள் குறித்துக் கண்காணித்து, மக்களை எச்சரிக்கும் அமைப்பாக CERT-In இயங்கி வருகிறது. இந்த அமைப்பு இது பற்றிக் கூறுகையில் ப்ளாபிந்தி என்னும் மால்வேர் வைரஸ் பல வகைகளில் உருவெடுத்துப் பரவி வருவதாக அறிவித்துள்ளது. தகவல்களைத் திருடுவது மட்டுமின்றி, சில மால்வேர் புரோகிராம்களைக் கம்ப்யூட்டர்களில் பதிக்கிறது. இதன் மூலம் இதனை அனுப்பிய ஹேக்கர்கள், நமக்குத் தெரியாமலேயே கம்ப்யூட்டர்களின் உள்ளே நுழைந்து இயக்கத்தினைக் கட்டுப்படுத்த முடியும். நாம் அழுத்தும் கீ அழுத்தங்களை இது படிக்க முடியும். கம்ப்யூட்டரில் இயங்கும் கேமராவினைக் கட்டுப்படுத்த இயலும். இவற்றின் மூலம் மிக முக்கிய தனிநபர் தகவல்களைத் திரட்டி, அவற்றை ஹேக்கர்களுக்கு அனுப்பும். விண்டோஸ் இயக்கம் உள்ள கம்ப்யூட்டர்களைப் பாதித்த பின்னர், அதில் பயன்படுத்தப்படும் ப்ளாஷ் ட்ரைவ்கள் வழியாக, இவை மற்ற கம்ப்யூட்டர்களுக்குப் பரவுகின்றன.


இந்த வைரஸ் புரோகிராம், ஏறத்தாழ 12 வகைகளில் உருவெடுத்துள்ளது. இவை அனைத்தும், கம்ப்யூட்டர்களில் இயங்கும் பயர்வால் தடுப்பினை எளிதில் ஏமாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. 


இந்த ப்ளாபிந்தி வைரஸ், கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் ஒரு ப்ளாஷ் ட்ரைவின் ரூட் போல்டரில் தன்னை காப்பி செய்துகொள்கிறது. அந்த ட்ரைவ் பெயரிலேயே, ஒரு ஷார்ட் கட் பைல் மற்றும் போல்டர் ஐகான் ஒன்றைத் தயார் செய்கிறது. கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர், இந்த ஷார்ட் கட் ஐகானில் கிளிக் செய்தவுடன், மால்வேர் புரோகிராம் இயக்கப்படுகிறது. விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் வேறு ஒன்றும் தீயது நடைபெறவில்லை என்று காட்டிக் கொள்கிறது.
 


இதன் பாதிப்பு தீவிரமடையும் போது, நம் கம்ப்யூட்டரின் பெயர், இயங்கும் நாடு, அதன் வரிசை என், விண்டோஸ் யூசர் நேம், கம்ப்யூட்டரை இயக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்பு எண், குரோம் பிரவுசரில் பதியப்பட்டிருக்கும் பாஸ்வேர்ட், பயர்பாக்ஸ் பிரவுசரில் உள்ள பாஸ்வேர்ட் ஆகியவற்றைத் திரட்டி வைத்துக் கொண்டு ஹேக்கருக்கு அனுப்புகிறது.


தான் கைப்பற்றிய கம்ப்யூட்டரின் கேமரா இயக்கத்தினைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, மேலும் பல பெர்சனல் தகவல்களைக் கைப்பற்றுகிறது. இதற்கெனத் தானாக, கம்ப்யூட்டர் கேமராவிற்கான டி.எல்.எல். பைல் ஒன்றைப் பதிந்து வைத்துக் கொள்கிறது. கீ அழுத்தங்களையும் பதிவு செய்கிறது.
 


இந்திய சைபர் மையம், இதனைத் தவிர்க்கும் சில வழிகளையும் தந்துள்ளது. கம்ப்யூட்டர் சிஸ்ட்த்தினை தற்போது இணையத்தில் கிடைக்கும் இலவச ரிமூவல் டூல் கொண்டு ஸ்கேன் செய்திடவும். யு.எஸ்.பி. கிளீன் சாப்ட்வேர் பயன்படுத்தவும். அனைத்து ஆண்ட்டி வைரஸ் மற்றும் மால்வேர்களுக்கு எதிரான புரோகிராம்களின் அண்மைக் காலத்திய அப்டேட் பைல்களைப் பதிந்து வைக்கவும்.
 


அத்துடன், தேவையற்ற, சந்தேகத்திற்கு இடம் தரும் லிங்க்குகளில் கிளிக் செய்வதனை அறவே தவிர்க்கவும். இவற்றைத் தாங்கி வரும் மின் அஞ்சல் செய்திகளை, அடியோடு புறக்கணிக்கவும். யாரும் அறிந்து கொள்ள இயலாத பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்தவும். பயர்வால் இயக்கத்தினை டெஸ்க்டாப் மற்றும் கேட்வே நிலையில் இயக்கவும். கம்ப்யூட்டரை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கூடுமான அளவில் குறைக்கவும்.

No comments:

Post a Comment