தமிழ் சினிமாவுக்கு ஆந்திரா தந்த
அழகிகளில் சானியதாராவும் குறிப்பிடத்தக்கவர். அதோடு, தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்களை திருப்திபடுத்துவது
என்போன்ற கலைஞர்களின் கடமை. அதனால் கதைக்கு அவசியம் என்றால், கிளாமர், உதட்டு முத்தக்காட்சிகளில்
நடிக்க எந்தவித தயக்கமும் இல்லை என்கிறார் இவர்.
சினிமாவில் எந்தமாதிரியான
நடிகையாக இடம்பிடிக்க விருப்பம்?
சினிமாவிற்குள் நடிக்க வரும்
எல்லா நடிகைகளுமே நல்ல குடும்பப்பாங்கான நடிகையாக வேண்டும் என்றுதான் வருவார்கள்.
நானும் அப்படித்தான் வந்தேன். ஆனால் சினிமாவிற்குள் வந்தபிறகுதான் சினிமாவைப்பற்றி
தெரிந்து கொண்டேன். அதனால் இப்போது கதை பிடித்திருக்கும்பட்சத்தில் அந்த
கதைக்கேற்ப முழுசாக மாறி நடிக்கதயாராகி விட்டேன்.
சினிமாவில் உங்களது ரோல் மாடல்
நடிகை யார்?
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு
ஜோதிகாதான் எனது ரோல் மாடல். ஆனால் அவரை மாதிரி நடிப்பதற்கு எனக்கு கதைகள்
கிடைக்கவில்லை. அதனால் இப்போது நான் நினைப்பதை விட சினிமா என்னை எந்த கோணத்தில்
பார்க்கிறதோ அதற்கேற்றபடி நடித்து வளர வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
அந்த வகையில், இப்போது நான் ஒரு கதாநாயகி
அவ்வளவுதான். ஆனால் எந்த மாதிரியான கதைநாயகி என்பது எனக்கே தெரியவில்லை.
ஆனால் நீங்கள் நடித்த இரண்டு
படங்களுமே பெரிய வெற்றி பெறவில்லையே?
முதல் படமான ஒருவர் மீது இருவர்
சாய்ந்து நான் பெரிதாக எதிர்பார்த்த படம் ஆனால் தோல்வியடைந்து விட்டது.
அதையடுத்து நடித்த படம் பனிவிழும் மலர்வனம். காதலித்து பெற்றோர் எதிர்ப்பு
காரணமாக வெளியூருக்கு செல்லும் ஒரு காதல் ஜோடி, அங்கு சென்ற இடத்தில் பெற்றோர்
தங்களுக்காக உயிரையும் கொடுக்கக்கூடியவர்கள் என்பதை உணர்ந்து மீண்டும் அவர்களைத்
தேடி திரும்பி வருவது போன்ற கதை. இந்த படத்தை பார்த்த அனைவருக்குமே
பிடித்திருக்கும். ஆனால், சரியான தியேட்டர்களில் அப்படம்
வெளியாகவில்லை. அதனால்தான் ஓடவில்லை. ஆனால் படம் பார்த்த அனைவரும் அந்த
படத்தைப்பற்றி பேசுவார்கள். அப்படியொரு அற்புதமான கதை.
இப்போது என்னென்ன படங்களில்
நடித்து வருகிறீர்கள்?
சுசீந்திரன் இயக்கும் ஜீவா
படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யாவும், நானும் நாயகிகளாக நடிக்கிறோம். அதேபோல், பா.விஜய் நாயகனாக நடிக்கும் 30 ரூபாய்க்கு ஒரு சிடி படத்திலும்
அவருக்கு ஜோடியாக நடிக்கிறேன். இதற்கிடையே ஹரிகுமாருடன் நடித்துள்ள
சங்கராபுரம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த மூன்று படங்களுமே ரொம்ப நல்ல
கதைகள்தான். அதனால் படங்களின் வெற்றியை எதிர்நோக்கியிருக்கிறேன்.
ஏற்கனவே நயன்தாரா என்றொரு நடிகை
இருக்கும்போது சானியதாரா என்று பெயர் வைத்திருக்கிறீர்களே. அவருக்கு போட்டியாக
களமிறங்கியிருக்கிறீர்களா?
எந்தவொரு தொழிலுமே போட்டி
வேண்டும். அப்போதுதான் ஒரு சுவராஸ்யம் இருக்கும். அந்த நடிகையை முந்திச்செல்ல
வேண்டும் என்ற வேகத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். அதனால்
என்னைப்பொறுத்தவரை நயன்தாரா மட்டுமின்றி களத்தில் நிற்கும் என்போன்ற சக நடிகைகள்
அனைவரையுமே எனக்கு போட்டியாகத்தான் கருதுகிறேன். இந்த போட்டியில் ஜெயித்து
முன்னணி இடத்துக்கு வர வேண்டும் என்ற வெறி எனக்குள் அதிகமாக உள்ளது.
நயன்தாரா மாதிரி
வரவேண்டுமென்றால் பிகினி நடிகையாக உருவெடுக்க வேண்டியதிருக்குமே?
டைரக்டர்கள் என்னிடம் சொல்லும்
கதை எனக்கு பிடித்து விட்டால் அந்த கதைக்கு எந்தமாதிரி நடிக்க வேண்டும் என்று
சொல்கிறார்களோ அந்த அளவுக்கு கண்டிப்பாக நடிப்பேன். அந்த வகையில், பிகினி, குளியல் காட்சி, உதட்டு முத்தக்காட்சி என்று இளசுகள் விரும்பும் எல்லாவிதமான
காட்சிகளிலும் நடிப்பேன். நடிகை என்று வந்துவிட்ட பிறகு நான் இந்த மாதிரிதான்
நடிப்பேன் என்று என்னைச்சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொள்வதில் எனக்கு இஷ்டமில்லை.
இயக்குனர்களின் நடிகையாக, ரசிகர்களுக்கு பிடித்தமான
நடிகையாக சினிமாவில் இருக்கிற காலம் வரை வலம் வர வேண்டும் என்பதுதான் எனது
நோக்கமே.
எந்தெந்த ஹீரோக்களுடனெல்லாம்
முத்தக்காட்சிகளில் நடிக்க விரும்புகிறீர்கள்?
அப்படியெல்லாம் எந்த தனிப்பட்ட
ஆசையும் இல்லை. கதைக்கு அவசியப்பட்டால் முத்தக்காட்சியில் நடிப்பேன் அவ்வளவுதான்.
மற்றபடி அது முன்னணி ஹீரோ, புதுமுக ஹீரோ என்ற
பாரபட்சமெல்லாம் பார்க்கமாட்டேன். என்னைப்பொறுத்தவரை எல்லோரும நடிகர்கள்தான்.
இந்த மனநிலையுடன்தான் நடித்து வருகிறேன்.
முன்னணி ஹீரோக்களுடன் எப்போது
நடிப்பீர்கள்?
முதல் படத்திலேயே விஜய்யை வைத்து
லவ் டுடே படத்தை இயக்கிய பாலசேகரன் என்ற பெரிய டைரக்டர் படத்தில்தான் நடித்தேன்.
அதையடுத்து இப்போது சுசீந்திரன் என்ற பெரிய டைரக்டர் படத்தில்
நடித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் எதிர்பார்ககிற முன்னணி ஹீரோக்களின்
படங்கள்தான் இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும், நடித்து வரும் இந்த படங்களும்
வெற்றி நான் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கான சந்தர்ப்பங்களை உருவாககும் என்று
எதிர்பார்க்கிறேன்.
தற்போதைய தமிழ் ஹீரோக்களின்
உங்களை அதிகம் கவர்ந்தவர் யார்?
இந்த மாதிரி வம்பில் மாட்டி
விடுற கேள்விதானே வேண்டாங்கிறது. அஜீத், விஜய், சூர்யான்னு ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒவ்வொருவிதமான பர்சனாலிட்டி, ஒவ்வொரு விதமான டேலண்ட் இருக்கு. அந்த வகையில், எல்லோரையும் எனக்கு பிடிக்கும். நானும் அவர்களோட ரசிகைதான். அதனால்
அவர்களுடன் நடிக்கிற வாய்ப்பு கிடைக்கும்போது, என்னை கவர்ந்த அவர்களுடன் அதிக
ஈடுபாடு காட்டி நடிப்பேன். அந்த காலம் விரைவில் கனிந்து வரும் என்று நம்புகிறேன்.
ஒரே படத்தில் இரண்டு கதாநாயகிகள்
இருந்தால் அவர்களுக்கிடையே ஈகோப் போர் வெடிக்கும் என்கிறார்களே? உங்கள் அனுபவம் எப்படி?
எனது முதல் படத்திலேயே
சுவாதியுடன் இணைந்து நடித்தேன். இப்போது ஜீவா படத்தில் ஸ்ரீதிவ்யாவுடன்
நடிக்கிறேன். ஆனால் எங்களுக்கிடையே எந்த ஈகோ போரும் வெடிக்கவில்லை.
அவரவர்களுக்கு கொடுத்த வேலையை செய்கிறோம். இதில் எதற்காக பிரச்னை வரப்போகிறது.
அதேசமயம், நடிப்பில் ஒருவரையொருவர் முந்தி
விட வேண்டும் என்ற மனநிலை ஏற்படுகிறது. அதனால், ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக
நடிக்க வேண்டும் என்கிற வேகம் பிறக்கிறது. அந்த வகையில் எனது முந்தைய படங்களை விட
இப்போது நடிக்கும் படங்களில் எனது நடிப்பு இன்னும் மெருகேறியிருப்பதாக சொல்கிறார்கள்.
அதைக்கேட்க ரொம்ப சந்தோசமாக உள்ளது என்கிறார் சானியதாரா.