சென்ற மார்ச் 12 ஆம் நாளுடன், இன்டர்நெட் தொடங்கி 25 ஆண்டுகள் முடிந்துள்ளது. இணையம் என
அழைக்கப்படும் World Wide Web என்ற திட்டம், முதலில் ஒரு இயற்பியல் இளம்
விஞ்ஞானியால், ஆய்வு கட்டுரையில் மட்டுமே
அறிவிக்கப்பட்டது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் இயங்கிய CERN என்ற சோதனைச் சாலையில் பணியாற்றிய Tim BernersLee, எவ்வாறு ஓர் எளிய வழியில், உலகில் இயங்கும் கம்ப்யூட்டர்களை
இணைக்கலாம் என்ற கருத்தினை வெளியிட்டார்.
இதுவே, பின்னர் உலகளாவிய திட்டமாக
மாற்றப்பட்டு, இன்று பல நூறு கோடிக்கணக்கான
மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒரு சாதனமாக இணையம் இயங்குகிறது. முதலில் இந்த
கருத்தினை டிம் பெர்னர்ஸ் லீ வெளியிட்ட போது, அது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்வியுடன் பல முனைத்தாக்குதல்கள் இருந்தன. அவருடைய
திட்டக் கருத்தினை அனைவரும் இது நடக்காத ஒன்று என ஒதுக்கித் தள்ளினர். ஆனால், அமெரிக்க இராணுவம் தன்னுடைய
தேவைகளுக்காக, இந்த திட்டக் கருத்துரையைக்
கவனத்துடன் படித்துப் பயன்படுத்த முன் வந்தது. 1969
ஆம் ஆண்டில், Arpanet என்ற இணைய முன்னோடித் திட்டத்தினைச் செயல்படுத்தியது.
அந்த திட்டம், இராணுவ நடைமுறைகளுக்கு மட்டும்
பயன்படுத்தப்பட்டது. ஆனால், டிம் பெர்னர்ஸ் லீ தந்த திட்டம்,
பொதுமக்களுக்கானதாகும். எந்த சிஸ்டத்தில் இயங்கும்
கம்ப்யூட்டர்களையும் ஒரு மைய வலையில் இணைத்து,
ஒன்றுக்கொன்று பைல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும் வகையில்
அவரின் திட்டம் இருந்தது.
இந்த வகையில் இணையம்
உருவாக்கப்பட்ட போது, அப்படியே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதைக் காட்டிலும், அதற்குப் போட்டியாக அமெரிக்காவில் CompuServe, பிரான்ஸ் நாட்டில் Minitel என்ற இணைய திட்டங்கள் இயக்கத்திற்கு
வந்தன. ஆனால், அவை அதிகக் கட்டணம் செலுத்தி
மட்டுமே கிடைக்கும் வகையில் இருந்தன. ஆனால், பெர்னர்ஸ் லீ கொடுத்த திட்டம்,
மக்களுக்கு இலவசமாக இணையத்தினைத் தருவதாக இருந்தது.
1990 ஆம் ஆண்டில், மின்னோஸ்டா பல்கலையில் அதற்குச் சொந்தமான Gopher system என்னும் இணைய திட்டம்
செயலாக்கத்தில் இருந்தது. ஆனால், இதனை முறியடிக்கும் வகையில்,
அப்போது அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த அல் கோர், அரசின் துறைகள், பெர்னர்ஸ் லீ தந்த சிஸ்டத்தைப்
பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். Whitehouse.gov
என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டது.
இதுவே இணையத்தை அரசு அங்கீகாரம்
செய்தமைக்கு எடுத்துக் காட்டாகும்.
1993ல் இணையம் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அப்போது
கோபர் சிஸ்டம் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப் பட்டது. பெர்னர்ஸ் செயல்படுத்திய
இணைய திட்டத்தில், பொது மக்கள் தாங்கள் விரும்பியதை,
தங்களுடைய மற்றும் இணைய இணைப்பில் இருந்த கம்ப்யூட்டர்களில்
பதிவு செய்து மற்றவர்கள் பார்க்கும்படி அமைக்கும் சுதந்திரம் இருந்தது.
ஆனால், அந்த நேரத்தில், இணையம் மக்களுக்கு எப்படி எல்லாம்
உதவ முடியும் என்று கற்பனையாகக் கூட மக்கள் எண்ணிப் பார்க்கவில்லை. இன்று கூகுள்
மற்றும் யாஹூ மிகவும் சிறப்பாகப் புகழ் பெற்றுள்ளது என்றால், அதற்கு மக்கள் விரும்பும் தகவல்களை
அவை தங்களின் சர்வர்களில் அமைத்துத் தந்து வருவதே காரணமாகும்.
இந்த கால கட்டத்தில் தான், பெர்சனல் கம்ப்யூட்டர் நம்
வாழ்வின் பல நிலைகளை மாற்றி அமைத்தது. அத்துடன் இணையமும் இணைந்து கொண்டது.
இணையவலையில் உள்ள பைல்களை அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற
செயல்பாடு பல தொழில் பிரிவுகளில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இசை,
திரைப்படங்கள், செய்தி எனப் பல தொழில் பிரிவுகள் என்ன செய்வது என அறியாமல் திகைத்தன.
யார் வேண்டுமானாலும், எதனையும் கேட்டு பயன் பெறலாம்;
அவர்களே பதிப்பிப்பவர்களாகவும் இருக்கலாம் என்ற நிலை
ஏற்பட்டபோது, இத்தகைய தகவல்களை வழங்கும் தொழில்
பிரிவுகள் தங்களின் செயல்பாட்டினை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தன.
தொடர்ந்து இந்த நிலை பல தொழில் பிரிவுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
ஆனாலும், இணைய வலை மக்களுக்குத்தான் அதிக
சக்தியை வழங்கியது. அவர்களே அனைத்து பிரிவுகளின் எஜமானர்களாக மாறினர். அரசு
குறித்த விமர்சனங்கள் அனைவராலும் தரப்பட்டன. எந்த அரசின் நடவடிக்கையும் மக்களின்
கவனத்திற்கு மறைக்க இயலாத நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து உருவான இணையம், அரசு மற்றும் அது போன்ற
மையங்களுக்கு சில பாதுகாப்பு வசதிகளை அளித்தது. சிலவற்றை மக்களுக்குத் தெரியாமல்
இவை அமைத்தன. இருந்தும் மக்கள் இணையம் தரும் சக்தியை உணர்ந்தே உள்ளனர்.
இன்று ஸ்மார்ட் போன் போன்ற கையடக்க
சாதனங்கள் வழியாக இணையத்தை எந்த நேரமும் அணுக முடியும் என்ற நிலை மக்களுக்கு
அளவற்ற சக்தியையும், சுதந்திரத்தையும் தந்துள்ளது என்பதனை மறைக்க, மறுக்க முடியாது.
இன்றைய காலகட்டத்தில் அனைத்து
வணிகமும் இணையத்தில்தான் நடக்கிறது, எந்த பொருளானாலும் வீட்டில்
இருந்துக்கொண்டே வாங்கிகொள்ளலாம், amazon.com போன்ற நிறுவனங்கள்
தொடக்கி வைத்த இந்த இவணிகத்தில் நுழைந்தது, ஆன்லைனில் ஆர்டர்கள் பெற்று
பொருளை கொரியரில் அனுப்பி வைத்தார்கள், கீழே உள்ள படத்தை பார்த்தால்
புரியும் ஒரு நாளில் எத்தனை பேர் ஆன்லைனில் வர்த்தகம் செய்கிறார்கள் பாருங்கள்.
இது அமேசான் நிறுவனத்தின் டெஸ்பாட்ச் ஹால்.
மேலும் இன்று
வேலைவாய்ப்பு, வீட்டில்
இருந்தபடியே வேலை பார்ப்பது, வங்கி பரிவர்த்தனை, புதிய நண்பர்களை
பெறுவது, அரட்டை
அடிப்பது, நேரடி
ஒளிபரப்பு, டிக்கெட்
முன்பதிவு செய்தல் என அனைத்துக்கும் இணையம் பயன்படுகிறது. இனி இணையம் இல்லாமல்
எதுவும் இயங்காது என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.
இணையம் முழுமையாகத்
தன் இலக்குகளை ஈடேற்றிவிட்டதா? என்ற கேள்விக்கு நிறைவான பதிலைத் தர இயலவில்லை.
தொடக்க கால இலக்குகளில் பாதி அளவு தான், இந்த வைய விரி வலை எட்டியுள்ளது. இன்னும் பாதி
அளவு அமைக்கப்பட வேண்டும். அது அமைக்கப்பட்டே ஆகும் என எதிர்பார்க்கலாம்.