குக்கூ திரைவிமர்சனம்

சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரெயிலில் பார்வையற்றவராக சிறு வியாபாரம் செய்து வருகிறார் தினேஷ். இளையராஜா போல் பாடும் வல்லமை பெற்றுள்ளதால் ஒரு மேடை இசைக்குழுவிலும் பாடி வருகிறார்.



இந்நிலையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் தினேஷின் தோழி பார்வையற்ற நாயகி மாளவிகாவை அறிமுகம் செய்து வைக்கிறார். இவர்கள் அறிமுகம் ஆகும் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்கிறது. பிறகு இவர்களின் அடுத்த சந்திப்பில் தினேஷ் செய்யும் சேட்டையில் மாளவிகா கோபம் அடைந்து தன்னிடம் இருக்கும் பிரம்பால் அடித்து விடுகிறார். இதில் தினேஷுக்கு நெற்றியில் அடிப்பட்டு விடுகிறது. இதனால் மாளவிகா மீது கடும் கோபம் ஆகிறார் தினேஷ்.

2 நாட்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் போது, மாளவிகா தினேஷிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறி அவர் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். இவருக்கு அடிப்பட்டதற்கு வருந்தும் மாளவிகா, இவருக்காக பிரார்த்தனையும் செய்கிறார். பிறகு அடிப்பட்டதை தொட்டு பார்க்கிறார் மாளவிகா. இதனால் மாளவிகா மீது தினேஷுக்கு காதல் மலர்கிறது.


தன் காதலை வெளிப்படுத்த தினேஷ் முயற்சி செய்கிறார். முதலில் தோழியிடம் சொல்லுகிறார் தினேஷ். அதற்கு தோழி, மாளவிகா படிப்பதற்கு உதவியாக இருக்கும் ஒரு பார்வையுள்ள இளைஞனை திருமணம் செய்ய ஆசைப்படுகிறாள் என்று கூறுகிறார். இதனால் மனம் உடைந்து போகிறார் தினேஷ். இதற்கிடையில் மாளவிகாவிற்கு உதவியாக இருக்கும் இளைஞன், வேறொரு பெண்ணை காதலிப்பதாக மாளவிகாவிடம் கூறுகிறார். இதனால் மாளவிகா மனம் உடைந்து போகிறார்.

பிறகு தோழி மூலம் தன்னை தினேஷ் காதலிப்பதாக மாளவிகாவிற்கு தெரிகிறது. அதன்பிறகு இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். வாசனைகளாலும், ஓசைகளாலும் இவர்களின் காதல் மலர்ந்து வருகிறது. இதற்கிடையில் மாளவிகாவின் அண்ணன், தன் நண்பருக்கு மாளவிகாவை வலுக்கட்டாயமாக திருமண செய்ய முடிவு செய்கிறார்.

இறுதியில் தினேஷ், மாளவிகா காதல் ஜெயித்ததா? மாளவிகாவிற்கு அண்ணன், பார்த்த மாப்பிளையுடன் திருமணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை.

தினேஷ், மாளவிகா இருவருமே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் தினேஷ் நடிக்கும் காட்சிகள் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போல் இருக்கிறது. மாளவிகா, தனது இயல்பான நடிப்பால் ஒரு படி மேலே நிற்கிறார். பார்வையற்றவர்களாக நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. படத்தில் இளையராஜாவின் இசையே மேலோங்கி இருக்கிறது. வர்மா ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் படத்தை பார்த்து விட்டு வெளியே வருபவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் பற்றி ஒரு உயர்ந்த எண்ணத்தோடும் அவர்களின் நிலையை உள்ளத்தில் கனமாக சுமந்து செல்லும் நிலையே இருக்கும். அவர்களை பார்த்தால் நமக்கு மரியாதையும் கூடும் படியாக இருக்கும். ஆனால் இப்படத்தை பார்த்துவிட்டு வரும் போது இவர்களை பற்றி சிந்திப்பதற்கோ, உதவுவதற்கு எண்ணமோ எழவில்லை. இவர்களை கண்டு அனுதாப்படும் நிலையும் ஏற்பட வில்லை.

முற்பாதியில் கலகலப்பாக செல்வதற்காக பாலா முறையை கையாண்டிருக்கிறார். நீண்ட காட்சிகள், லாஜிக் இல்லாத காட்சிகள் இருந்தாலும் அதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நடிகர் : தினேஷ்

நடிகை : மாளவிகா

இயக்குனர் : ராஜூமுருகன்

இசை : சந்தோஷ் நாராயணன்

ஓளிப்பதிவு : பி.கே.வர்மா