நெடுஞ்சாலை -திரைவிமர்சனம்


நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் கூட்டாளிகளுடன் திருடி வருகிறார் நாயகன் ஆரி. திருடும் பொருட்களை சலீம்குமாரிடம் கொடுத்து அதில் வரும் பணத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு போலீஸ் அதிகாரியான பிரசாந்த் நாராயண் புதிதாக பொறுப்பேற்கிறார். பொறுபேற்றவுடன் நெடுஞ்சாலை திருடர்களை பிடிக்க முயற்சி செய்கிறார்.







இதற்கிடையில் நெடுஞ்சாலையில் டெல்லி தாபா என்னும் ஓட்டல் நடத்தி வருகிறார் நாயகி ஷிவதா. ஒருநாள் ஷிவதாவின் ஓட்டலுக்கு உணவு சாப்பிட செல்கிறார் ஆரி. அங்கு நன்றாக சாப்பிட்டு விட்டு பணம் தராமல் செல்ல முயற்சி செய்கிறார். இதனால் கோபம் அடையும் ஷிவதா, ஆரியிடம் லாவகமாக பேசி அவரை வீட்டில் அடைத்து விட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்து விடுகிறார்.
போலீஸ் வந்து ஆரியை பார்க்கும் போது நீண்ட நாட்களாக தேடி வந்த நெடுஞ்சாலை திருடன் இவன் தான் என்று தெரிந்தவுடன் இவனை கைது செய்து போலீஸ் நிலைத்திற்கு அழைத்துச் செல்கிறனர். அங்கு போலீஸ் அதிகாரி பிரசாந்த் நாராயண் ஆரியை சரமாரியாக அடித்து துவைக்கிறார். அங்கு வரும் சலீம் குமார் பிரசாந்த்திடம் இனி நாங்கள் திருடுவதில் உங்களுக்கு பங்கு தருகிறோம் என்று கூறி ஆரியை வெளியே கொண்டு வருகிறார். இருந்தாலும் ஆரிக்கும் போலீசுக்கும் பகை இருந்து கொண்டே இருக்கிறது.
போலீஸ் நிலையத்திற்கு வந்த ஷிவதாவை கண்டவுடன் பிரசாந்த் நாராயண் அவளை அடைய விரும்புகிறார். இதற்கு ஷிவதா மீது ஆரிக்கு உள்ள கோபத்தை சாதகமாக பயன்படுத்தி, அவனை தூண்டி விட்டு ஷிவதாவின் தாபா கடையை அழிக்க சூழ்ச்சி செய்கிறார். இதை தடுப்பது போல் தாபா கடையையே சுற்றி சுற்றி வருகிறார் பிரசாந்த் நாராயண்.
ஒரு நாள் ஷிவதாவிடம் தப்பாக நடக்க முயற்சி செய்யும் பிரசாந்த் நாராயணை ஷிவதா தாக்கிவிடுகிறார். இதனால் கோபம் அடைந்து ஷிவதா மீது விபச்சார வழக்கு பதிவு செய்து கோர்ட்டுக்கு அழைத்துச் செல்கிறார். கோர்ட்டில் ஆரியை சாட்சி சொல்ல வைக்கிறார் பிரசாந்த். ஆரியோ ஷிவதாவை நான் பார்த்ததே இல்லை என்று சொல்கிறார். ஷிவதா தன் மானத்தை காப்பாற்றிய ஆரியை காதலிக்க ஆரம்பிக்கிறார். முதலில் வெறுக்கும் ஆரி பிறகு ஷிவதாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார். காதலித்த பின் ஆரி திருந்தி வாழ முயற்சி செய்கிறார்.
இதையறிந்த பிரசாந்த் ஆரியை தீர்த்து கட்டிவிட்டு ஷிவதாவை அடைய முடிவு செய்கிறார். இறுதியில் பிரசாந்திடம் இருந்து ஆரி தப்பித்தாரா? ஆரியும் ஷிவதாவும் சேர்ந்து வாழ முடிந்ததா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆரி, தன் கதாபாத்திரத்தை உணர்ந்து தன் உருவத்திலும், உடையிலும் அழுத்தமாக பொருந்தியிருக்கிறார். குறிப்பாக ஓடும் லாரிகளை விரட்டி சென்று திருடும் காட்சிகளில் திறமையான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். மேலும் காதல் காட்சிகள், போலீசுடன் மோதும் காட்சிகளில் நடிப்பில் முதிர்ச்சி.
நாயகியாக நடித்திருக்கும் ஷிவதா, கனமான கதாபாத்திரத்தை ஏற்று அதை திறம்பட செய்திருக்கிறார். நெடுஞ்சாலையில் பூத்த மலர் போல் இருக்கிறார். மேலும் படத்தில் சலீம் குமார், தம்பி ராமையா, பிரசாந்த் நாராயண், கண்ணன் பொன்னையா ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து திறமையாக நடித்துள்ளனர்.
படத்திற்கு கூடுதல் பலம் சத்யாவின் இசை. பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். அதை ஒளிப்பதிவு செய்த ராஜவேலை மிகவும் பாராட்டலாம். 1980ம் ஆண்டுகளில் நெடுஞ்சாலையில் நடந்த உண்மை நிகழ்வை திரைக்கு ஏற்றார் போல் காதலை கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா
நடிகர் : ஆரி
நடிகை : ஷிவதா
இயக்குனர் : கிருஷ்ணா
இசை : சத்யா
ஓளிப்பதிவு : ராஜவேல்