ஒரு ஊர்ல ரெண்டு ராஜா சினிமா விமர்சனம்


தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுவயதில் இருந்து நண்பர்களாக பழகி வருகிறார்கள் விமல் மற்றும் சூரி. இவர்கள் வேலை வெட்டி ஏதும் இல்லாமல் ஊர் சுற்றி வருகிறார்கள். அந்த ஊரில் உள்ள மதுபானக் கடைகள் இவர்களால் மூடப்படுகிறது. 

இதனால் அந்த ஊரில் உள்ள பெண்கள் இவர்களை வாழ்த்துகிறார்கள். அதில் ஒரு பெண் சூரி மீது காதல் கொள்கிறாள். சூரியும் அந்த பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறார். 


காதலித்த முதல் நாளே வீட்டுக்கு தெரியாமல் சூரியும், அந்த பெண்ணும் ஊரை விட்டு சென்னைக்கு ஓடிச்செல்ல முடிவெடுக்கிறார்கள். இவர்களுக்கு விமல் உதவி செய்கிறார். 


அப்போது, தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் வைத்து, சூரி ஒரு 'அன்னாடங்காச்சி' என்பதை அந்த பெண்ணிடம் விமல் கூறிவிடுகிறார். இதனால் காதலி சூரியை விட்டு விலகி செல்கிறாள். 


மனமுடைந்த சூரி, விமலுடன் சென்னைக்கு செல்லலாம் என்று முடிவு செய்கிறான். ரெயிலில் நாயகி பிரியா ஆனந்தை பார்க்கிறார் விமல். டாக்டரான பிரியா ஆனந்தை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் விமல். 


ரெயில் சென்று கொண்டிருக்கும் போது பிரியா ஆனந்தை ஒரு மர்ம கும்பல் கொலை செய்ய பார்க்கிறது. அவர்களிடம் இருந்து விமலும் சூரியும் பிரியா ஆனந்தை காப்பாற்றுகிறார்கள். அதன் பிறகு இவர்கள் யார்? எதற்காக உங்களை கொல்ல வருகிறார்கள்? என்று பிரியா ஆனந்திடம் கேட்கிறார்கள் விமலும் சூரியும். 


அதற்கு பிரியா ஆனந்த், தான் தூத்துக்குடியில் மருத்துவ முகாமிற்கு சென்றிருந்தபோது, தன் தோழி பணிபுரியும் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிந்துக் கொண்டேன். 


இதற்கு தொழிற்சாலையை சரியாக பராமரிக்காததால் தான், தொழிலாளர்களை நோய் தாக்கியதாக அதன் முதலாளியான நாசரிடம் கூறினேன். அதற்கு அவர் என்னை அவமானப்படுத்திவிட்டார். இதனால் கோர்ட்டுக்கு சென்றேன். தீர்ப்பு நெருங்குவதால் என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள் என்று கூறுகிறார் பிரியா ஆனந்த். 


இதை கேட்ட விமலும் சூரியும் நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம் என்று கூறுகிறார்கள். இறுதியில் பிரியா ஆனந்த் கோர்ட்டில் வெற்றி பெற்றாரா? விமல் தன் காதலை பிரியா ஆனந்திடம் சொன்னாரா? என்பதே மீதிக்கதை. 


படத்திற்கு ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்று தலைப்பு வைத்து கதை சொல்ல வந்த இயக்குனர் கண்ணன், சுவாரஸ்யமான கதையை சொல்ல தவறிவிட்டார். படத்தை பார்க்கும் ரசிகர்கள் கடைசி வரை சுவாரஸ்யம் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள். 


சூரி, தம்பி ராமையா, சிங்க முத்து என்று காமெடி நடிகர்களை வைத்து நகைச்சுவை படமாக எடுக்க முயற்சி செய்ததும் பெரிதாக எடுபடவில்லை. தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு வரும் இன்னல்களும் முதலாளிகளின் அலட்சியத்தையும் சொல்ல நினைத்த இயக்குனரை பாராட்டலாம். ஆனால் அதை சுவாரஸ்யமாக கொடுத்திருந்தால் ரசித்திருக்கலாம். 


படத்தில் விமல் தனது முந்தைய படங்களைப்போல வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னை விட சூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ள கதையில் நடித்ததற்காக இவரை பாராட்டலாம். 


படம் முழுக்க நாயகனைவிட சூரியின் கையே மேலோங்கி இருக்கிறது. நடனம், சென்டிமென்ட், நகைச்சுவை என்று சிறப்பாக நடித்திருக்கிறார். நாசர் இதுவரை தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இப்படத்தில் மாறுபட்டு தெரிகிறார். 


பிரியா ஆனந்திற்கு ஒரு ஹீரோவுக்கு உண்டான அந்தஸ்தை கொடுத்திருக்கிறார்கள். தன் கதாபாத்திரத்தின் பொறுப்பை உணர்ந்து அதை சிறப்பாக செய்திருக்கிறார் என்றால் அது கேள்விக்குறிதான். பாடல்களில் கவர்ச்சியாக வந்து ரசிகர்களை மகிழ வைத்திருக்கிறார். 


டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். லட்சுமி மேனன் பாடிய பாடல் ரசிக்கும் படியாக உள்ளது. ஒளிப்பதிவு சுமார் ரகம். 

No comments:

Post a Comment