இணையதளத்திலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பது எப்படி?

இன்றைய சூழலில், சிறுவர்கள் உலகோடு தொடர்பு கொள்ள, பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் என எதனையாவது பயன்படுத்தி இணையத்தோடு தொடர்பு ஏற்படுத்தி வருகின்றனர். 




இது அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றாலும், அனைத்து இணையதளங்களும் அவர்கள் பார்த்துப் பயன்படுத்தும் வகையில் இல்லை. சில தளங்கள், அவர்கள் பார்த்து அறியக்கூடாத விஷயங்களையும் கொண்டுள்ளன. இணையத்தில் இந்த கருப்பு பக்கங்களிலிருந்து உங்கள் சிறுவர்களைக் காப்பாற்றும் வழிகளை நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அது மட்டுமின்றி, நேரங் காலம் இல்லாம, தொடர்ந்து யு ட்யூப்பில் உள்ள வீடியோக்களைப் பார்ப்பது, அவர்கள் நண்பர்கள் பேஸ்புக்கில் என்ன பதிவு செய்துள்ளனர் என்பதில் அதிக நேரம் செல வழிப்பது போன்றவை, அவர்களின் கற்றல் நேரத்தை வீணடிப்பதாகும். இதற்கான வழி, சில இணையதளங்களை அவர்கள் பார்ப்பதிலிருந்து ஒதுக்கி வைப்பதாகும்.இதற்கான சில எளிய வழிகளைப் பார்ப்போம்.
பிரவுசர் வழியாக இணைய தளத் தடை: அனைத்து பிரவுசர்களும், இணைய தளங்களைத் தடை செய்திடும் வசதியைக் கொண்டிருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, இன்டர் நெட் எக்ஸ்புளோரர் 7ல், சில தளங்களை அணுகவிடாமல் செய்திடலாம். ஆனால், அதன் பின்னர் வெளியான, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 இந்த வசதியினைக் கொண்டிருக்கவில்லை. உங்களிடம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 இருந்தால், அதனைப் பயன்படுத்துங்கள். அதில், Tools, Internet Options, Content tab, Content Advisor என்று செல்லவும். பின்னர், Enable and then use the Approved sites tab to choose which sites to block என்பதில் கிளிக் செய்திடவும். இதில் இணையதளங்களைத் தேர்ந்தெடுத்துத் தடை செய்திடலாம். இதில் தடை செய்தாலும், வேறு பிரவுசர் வழியாக, உங்கள் மகன் அல்லது மகள் தடை செய்யப்பட்ட இணைய தளங்களைப் பார்க்கலாம். எனவே, தடையைச் சரியாக ஏற்படுத்த வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டரில், வேறு எந்த பிரவுசரும் இன்ஸ்டால் செய்யப்படிருக்கக் கூடாது. இன்ஸ்டால் செய்வதற்கான உரிமையும் அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது.
பல பெற்றோர்கள், அவர்களுடைய குழந்தைகள் பேஸ்புக்கில் அவர்களுக்கென ஓர் அக்கவுண்ட்டை லேப்டாப் அல்லது பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்படுத்த அனுமதிக்கின்றனர். நீங்கள் அவர்களுடைய அக்கவுண்ட்டைக் கண்காணிப்பதாக இருந்தால், இது நல்லதுதான். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அக்கவுண்ட் திறக்கலாம். பிரவுசரில் கிடைக்கும் ‘black list’ வசதி மற்றும் கம்ப்யூட்டரில் இயக்கப்படும் Parental Control software மூலம், தேவையற்ற இணைய தளங்களை, சிறுவர்கள் பார்க்காதவாறு தடுக்க வேண்டும். ஓர் இணைய தளத்தினைத் தடை செய்கையில், அதனுடன் சார்ந்த மற்றவற்றையும் தடை செய்திட வேண்டும். எடுத்துக்காட்டாக, www.facebook.com தடை செய்தால், m.facebook.com என்னும் மொபைல் பதிப்பினையும் தடை செய்திட வேண்டும். இதில் ஏதாவது விட்டுவிட்டோம் என்றால், நம் புத்திசாலிக் குழந்தைகள், நம் தடைகளை மீறி, இத்தளங்களைக் காணத் தொடங்கிவிடுவார்கள்.
பெற்றோர் தடை விதிக்க: Parental control software என அழைக்கப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் இப்போது எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றை, நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து செட் செய்து வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற இணைய தளங்களை அணுகாத வகையில் தடை ஏற்படுத்தலாம். தொடர்ந்து இத்தடை செயல்பட்டு வருகிறதா எனப் பார்ப்பதுவும் நம் கடமையாகும். தடை ஏற்படுத்த வசதி செய்வதுடன், இத்தகைய சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள், ஒரு சிறுவன் எவ்வளவு நேரம் இணை யத்தைப் பயன்படுத்தலாம் எனவும் வரையறை செய்திட உதவுகின்றன. மேலும் எந்த நேரங்களில், இவர்கள் இணையத்தைப் பயன்படுத்தலாம் எனவும், வரையறை செய்திடலாம். மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த சாப்ட்வேர் தொகுப்பினை (Family Safety) இலவசமாகவே தருகிறது. இதனைப் பயன்படுத்தத் தேவையான கூடுதல் குறிப்புகளைhttp://www.pcadvisor.co.uk/buyingadvice/security/3411335/howchooseparentalcontrolsoftware/என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் காணலாம்.
ரௌட்டரில் தடை: ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும், சாப்ட்வேர் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து, இணையத்தைப் பார்ப்பதற்கான, சிறுவர்களுக்கான தடைகளை ஏற்படுத்துவதைக் காட்டிலும், கம்ப்யூட்டருக்கு, இணைய இணைப்பைத் தருகிற ரௌட்டரிலேயே இதற்கான வரையறையை செட் செய்திடலாம். இதற்கான சாப்ட்வேர் அப்ளிகேஷனும் இலவசமாக, ரௌட்டருடன் வழங்கப்படுகிறது. உங்கள் ரௌட்டர், உங்களுக்கு இணைய இணைப்பு வழங்கும் நிறுவனத்தின் சர்வரில் உள்ள, இணைய தள பில்டரைப் பயன்படுத்தும். அல்லது இதற்குப் பதிலாக, OpenDNS அப்ளிகேஷனை இயக்கலாம். இதுவும் ஓர் இலவச சேவையே. இது தேவையற்ற தளங்களைப் பார்ப்பதைத் தடை செய்கிறது. உங்கள் ரௌட்டரின் இண்டர்பேஸில் ஒரு சில செட்டிங்ஸ் அமைப்பினை மேற்கொண்டால் போதும். நீங்கள் பயன்படுத்தும் ரௌட்டரின் நிறுவனத்தின் இணைய தளத்தைத் தொடர்பு கொண்டாலும், இந்த வசதியைப் பெறலாம். இது குறித்த அதிகத் தகவல்களுக்குhttp://www.pcadvisor.co.uk/howto/internet/3491698/howblockwebsite/%20http:/www.pcadvisor.co.uk/howto/security/3421701/getfreewebfilteringwithopendnsfamilyshield/என்ற முகவரியில் உள்ள இணையதளத்தினைக் காணலாம்.
இந்த வழிமுறையில் என்ன பிரச்னை என்றால், அந்த ரௌட்டருடன் இணைக்கப்பட்டு இயங்கும் எந்த கம்ப்யூட்டரிலும், லேப்டாப் கம்ப்யூட்டரிலும் தடை செய்யப்பட்ட தளங்கள் எவருக்கும் கிடைக்காது.

டேப்ளட் பி.சி. மற்றும் ஸ்மார்ட் போன்களில் தடை: பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களை மட்டுமா, இன்றைய சிறுவர்கள், இணைய தளங்களைப் பார்க்கப் பயன்படுத்துகிறார்கள். டேப்ளட் பி.சி.மற்றும் ஸ்மார்ட் போன்களிலும் கூட அவர்களுக்கு இணைய இணைப்பு கிடைக்கிறதே! உங்களுடைய ஸ்மார்ட் போன், விண்டோஸ் போன் 8 சிஸ்டத்தைப் பயன்படுத்து வதாக இருந்தால், அதில் உள்ள Kid’s Corner என்னும் வசதியைப் பயன்படுத்தி, இணையத் தடை ஏற்படுத்தலாம். உங்களுக்கு வரும் மின் அஞ்சல்களைக் கூட, சிறுவர்கள் பார்க்க முடியாத படி தடை செய்திடலாம். சிறுவர்களுக்கான டேப்ளட் பி.சி.க்களில் இந்த தடை, அவற்றை வடிவமைக்கும்போதே ஏற்படுத்தப்பட்டுத் தரப்படுகின்றன.
இது குறித்த தகவல்களுக்கு http://www.pcadvisor.co.uk/reviews/childrenstablets/460/ என்ற இணைய தளத்தினைக் காணவும்.