எப்போதும் வென்றான் சினிமா விமர்சனம்

நாயகன் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறான். இவனுக்கு அப்பா கிடையாது. அம்மா மற்றும் 2 தங்கைகளுடன் வாழ்ந்து வருகிறான். ஒருநாள் அமைச்சர் நரேன் அடிப்படை வசதிகள் இல்லாத தனியார் மருத்துவக் கல்லூரிகளை எல்லாம் மூடச் சொல்லி உத்தரவிடுகிறார்.

இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள். இந்த போராட்டத்திற்கு அரசு கல்லூரி மாணவரான நாயகனும் ஆதரவு கொடுக்கிறார். உங்கள் நல்லதுக்குத்தானே இதை செய்கிறேன் என்று மாணவர்களிடம் சீறிப்பாய்கிறார் நரேன். அதேவேகத்தில் மாணவர்களும் கொதிப்படைய அங்கு வாக்குவாதம் ஏற்படுகிறது. இதன்பிறகு சமாதானமடைந்து நரேன் 10 நாட்கள் கெடு விதித்து, மருத்துவக் கல்லூரிகளை திறப்பதாக கூறிவிட்டுச் செல்கிறார்.
காலேஜ் திறந்த சந்தோஷத்தில் நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்த்துவிட்டு நாயகன் தனியாக வீடு திரும்புகிறார். அப்போது, அவரது பைக்கை மறைக்கும் மர்ம நபர், தனது கையை ஒருவர் வெட்டி விட்டதாகவும், அவசரமாக ஒரு போன் செய்யவேண்டும் என்று அவரிடம் செல்போனை கேட்கிறான்.
நாயகனும் உதவி செய்வதாகக்கூறி தன்னுடைய போனை அவனிடம் கொடுக்கிறான். அதை வாங்கும் மர்ம நபர், நாயகனின் செல்போனில் இருந்து அமைச்சர் நரேனுக்கு போன் போட்டு, கட்சியின் மூத்த தலைவருடைய சிலைக்கு யாரோ ஒருவர் செருப்பு மாலை போட்டுவிட்டதாகவும், தட்டிக்கேட்ட தன்னை அரிவாளால் வெட்டிவிட்டதாகவும் கூறுகிறான்.
இதனால் பதட்டமடைந்த நரேன் சம்பவ இடத்திற்கு வருகிறார். வந்தபிறகுதான் தெரிகிறது இது திட்டமிட்ட சதி என்பது அவருக்கு தெரிகிறது. அங்கு வரும் மர்ம கும்பல் நரேனை வெட்டி சாய்க்கிறது.
நரேனுடைய கொலையை விசாரிக்கும் போலீஸ், அவருடைய செல்போனுக்கு யார் கடைசியாக போன் பண்ணியது என்று விசாரிக்கையில், நாயகனுடைய போனில் இருந்துதான் அழைப்பு வந்திருக்கிறது என்றதும் அவன்தான் கொலை செய்திருக்கக்கூடும் என்று கருதி, அவனை கைது செய்கிறது.
15 நாள் சிறையில் வைத்து விசாரிக்க நீதிமன்றமும் உத்தரவிடுகிறது. ஒரு செல்போனால் தன்னுடைய வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று புலம்பும் நாயகன் ஜாமீனில் வெளிவருகிறார்.
தன்னை இப்படி மாட்டிவிட்ட அந்த மர்ம நபரை தேடி போலீசிடம் ஒப்படைத்துவிட்டால், தன்னுடைய வாழ்க்கை நிலைமை சீராகிவிடும் என்ற நினைப்பில் அவனைத் தேடி அலைகிறார். இதற்கிடையில் நரேனின் தம்பி தன்னுடைய அண்ணனை நாயகன்தான் கொன்றுவிட்டதாக நினைத்து அவனைக் கொல்ல தேடி அலைகிறார்.
நாயகன் அந்த மர்மநபரை தேடி கண்டுபிடித்து போலீசிடம் ஒப்படைத்து தான் நிரபராதி என்பதை நிரூபித்தாரா? அமைச்சர் நரேனை கொன்ற அந்த மர்ம கும்பல் யார்? அவரைக் கொல்ல காரணம் என்ன? என்ற நம்முடைய கேள்விகளுக்கு இறுதியில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.
நாயகன் சஞ்சய், ஏற்கெனவே பரிச்சயமான முகம்தான். இந்த படத்திலும் தன்னுடைய அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பாசம், அழுகை, சோகம், வெறுப்பு, ஆக்ரோஷம் என நடிப்பில் வித்தியாசத்தை காட்டி ரசிக்க வைத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
நாயகி சுன்னுலட்சுமி நடிக்க வாய்ப்பு குறைவே. ஒரு சில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார். அமைச்சராக வரும் நரேன் அனுபவ நடிப்பால் முத்திரை பதிக்கிறார். மர்டர்கணேசன் என்ற பெயருடன் வலம்வரும் சிங்கபுலி வரும் காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன. வில்லனாக நடித்திருக்கும் புதுமுக நடிகர், மாடர்ன் வில்லனாக வில்லத்தனத்தில் அழுத்தம் பதிக்கிறார்.
நம்முடைய மனிதாபிமானத்தை பகடை காயாக வைத்து நம்மை எப்படி கிரிமினலாக மாற்றுகிறார்கள். அவர்களிடம் நாம் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்ற சமூக அக்கறையோடு படத்தை எடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். கதையில் கவனம் செலுத்திய இயக்குனர் திரைக்கதையில் மட்டும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருந்தால் படம் அழகாக இருந்திருக்கும். படத்தின் நீளத்திற்காக தேவையில்லாத காட்சிகளையும், பாடல்களை புகுத்தி போரடிக்க வைத்திருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் 2 பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை. தமிழ் தென்றல் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் படமாக்கிய விதம் அருமை. திருச்சி மாநகரை இவரது கேமரா கண்கள் படமாக்கிய விதம் அருமை.