மான்கராத்தே திரைவிமர்சனம்

ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கு சித்தர் ஒருவரை சந்திக்கிறார்கள். அவருடைய சக்தியை சோதித்துப்பார்க்க நினைக்கிறார்கள். அப்போது சதீஷ், செய்தித்தாள் வராத நாளான ஆயுதபூஜைக்கு மறுநாள் தினத்தந்தி ‌செய்திதாளை கேட்கிறார். அதற்கு சித்தர் நான்கு மாதங்களுக்குப் பிறகு வரும் அந்த செய்திதாளை தந்துவிட்டு செல்கிறார்.






அதில் இவர்கள் வேலை செய்யும் கம்பெனி மூடி நான்கு மாதம் ஆகிறது என்ற செய்தி வருகிறது. இது பொய் என முடிவெடுத்து அடுத்த நாள் அலுவலகம் செல்கிறார்கள். ஊழல் பிரச்சினையில் கம்பெனி மூடப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலை பெறுகிறார்கள்.
அதன்பிறகு செய்திதாளில் வேறு என்ன செய்திகள் இருக்கிறது என்று தேடுகிறார்கள். அதில் விளையாட்டுச் செய்திகளில் பீட்டர் என்பவர் குத்துச்சண்டையில் வெற்றிப் பெற்று ரூபாய் 2 கோடி பரிசை பெறுகிறார் என்ற செய்தி இருக்கிறது. இவர் மூலம் 2 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என்று முடிவெடுத்து அந்த பீட்டரை தேடுகிறார்கள்.
குத்துச்சண்டை என்றால் என்னவென்று தெரியாத ராயபுரத்தில் பீட்டராக இருக்கும் சிவகார்த்திகேயனை தேடி பிடிக்கிறார்கள். அவரை குத்துச் சண்டையில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்க முயற்சி செய்கிறார்கள். சிறிது விருப்பம் காட்டாத சிவகார்த்திகேயனிடம் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்கிறோம். ஆனால் நீங்கள் வெல்லும் பரிசுத் தொகையை எங்களுக்கு தர வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இதற்கிடையில் ஹன்சிகாவை பார்க்கும் சிவகார்த்திகேயன், அவரை பார்த்த உடனே காதல் வயப்படுகிறார். ஹன்சிகாவை காதலிக்க வைக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறார். ஹன்சிகாவுக்கு விளையாட்டில் மிகுந்த ஆர்வம் அதிகம் என்று தெரிந்துகொள்கிறார் சிவகார்த்திக்கேயன். சதீஷும் அவரது நண்பர்களும் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு குத்துச்சண்டையில் கலந்துகொண்டு ஜெயித்தால் உங்களுக்கு ஹன்சிகா கிடைப்பார் என்று ஆசைவார்த்தைகள் கூறி, குத்துச்சண்டையிட பயிற்சியும் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து குத்துச்சண்டையில் கலந்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் சதீஷ் மற்றும் நண்பர்கள் உண்மையான குத்துச்சண்டை வீரரான பீட்டர் ஒருவர் இருப்பதை தெரிந்து கொள்கிறார்கள். இதனால் குழப்பம் அடையும் அவர்கள் உண்மையான பீட்டரை வைத்து போட்டியில் வென்றார்களா? அல்லது குத்துச்சண்டை தெரியாத சிவகார்த்திகேயனை வைத்து வென்றார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நடிக்க வாய்ப்புகள் குறைவு. மாடர்ன் உடையில் படம் முழுக்க அழகாக வலம் வருகிறார். சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார். குத்துச்சண்டையே தெரியாமல் போட்டியில் கலந்துகொள்வது மற்றும் சதீஷுடன் சேர்ந்து இவர் செய்யும் காமெடிகளை ரசிக்கலாம்.
ஹன்சிகா முந்தைய படங்களை விட இப்படத்தில் அழகாக பளிச்சிடுகிறார். ஒரு சில காட்சிகளில் உடல் மெலிந்தும், சில காட்சிகளில் உடல் பெருத்தும் காட்சியளிக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக தெரிகிறார்.
சதீஷூக்கு படத்தில் நல்ல வாய்ப்பு. காமெடியில் கலக்கியிருக்கிறார். குத்துச்சண்டைகளுக்கு நடுவராக கௌரவ தோற்றத்தில் வரும் சூரி சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சுகுமார் ஒளிப்பதிவில் காட்சிகள் ஜொலிக்கின்றன. சிவகார்த்திகேயனையும் ஹன்சிகாவையும் ரொம்ப அழகாக காட்டிய சுகுமாருக்கு பெரிய கைதட்டல். முருகதாஸ் கதையை இயக்குனர் திருக்குமரன் சரியாக கையாளவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பெரும்பாலான காட்சிகளில் முந்தைய படங்களின் சாயல்கள் தெரிகின்றன. கடைசி 20 நிமிடம் படத்தில் அதிகம் ரசிக்கும் படியாக இருக்கிறது.
நடிகர் : சிவகார்த்திகேயன்
நடிகை : ஹன்சிகா
இயக்குனர் : திருகுமரன்
இசை : அனிருத்
ஓளிப்பதிவு : சுகுமார்