ஆள் சினிமா விமர்சனம்


















ஆமீர். சிக்கிமில் ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தந்தையை இழந்த இவருக்கு எல்லாமே சென்னையில் இருக்கும் அவருடைய அம்மா, தம்பி, தங்கைதான். அம்மாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவு பாசத்தை மீனாட்சி மீதும் வைத்திருக்கிறார். மீனாட்சி வேறு யாருமல்ல... அவருடைய காதலி. 

சிக்கிமில் தனியாக வசித்து வரும் ஆமீருக்கு எப்படியாவது தனது குடும்பத்தை சிக்கிமிற்கு கொண்டு வந்து செட்டிலாகி விடவேண்டும் என்று கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார். 


இந்நிலையில், இவர் பணியாற்றி வரும் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கிடையே சண்டை வருகிறது. முஸ்லீம் மாணவனான ரிஸ்வானை சிலர் அடித்து துன்புறுத்துகிறார்கள். அவன், தான் முஸ்லீம் என்பதால்தான் தன்னை சக மாணவர்கள் கேலியாகவும், அடித்தும் துன்புறுத்துகிறார்கள் என்று ஆமீரிடம் கூறுகிறான். 


இதனால் அவன்மீது இரக்கம் காட்டும் ஆமீர், அவனை தன்னுடன் வந்து தங்குமாறு கூறுகிறார். ரிஸ்வானும் அவருடன் வந்து தங்குகிறான். இருவரும் ஆசிரியர்-மாணவன் பாகுபாடு இல்லாமல் நட்புடன் பழகி வருகின்றனர். 


இதற்கிடையில் ஆமீர்-மீனாட்சியின் காதல் மீனாட்சியின் பெற்றோருக்கு தெரிய வருகிறது. அவர்கள் ஆமீரை சென்னை வந்து தங்களை சந்திக்குமாறு அழைக்கின்றனர். அதன்படி, ஆமீர் சென்னை போக ஆயத்தமாகிறான். தன்னுடைய காதலி பரிசாக அளித்த கோட்-சூட்டுடன் சென்னை புறப்பட்டு வருகிறான். 


சென்னை ஏர்ப்போர்ட்டில் வந்திறங்கும் ஆமீருடைய செல்போன் சார்ஜ் இல்லாததால் தன்னை வரவேற்க வந்தவர்களை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறான். அப்போது, ஒரு பைக்கில் ஹெல்மெட் அணிந்த இருவர் வந்து ஒரு செல்போனை இவரிடம் தூக்கிப் போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். 


அப்போது, அந்த செல்போனுக்கு ஒரு நம்பர் தெரியாத போனில் இருந்து ஒரு அழைப்பு வருகிறது. அந்த அழைப்பை எடுத்து பேசும் ஆமீருக்கு அதிர்ச்சியான செய்தி கிடைக்கிறது. அந்த அதிர்ச்சியான செய்தி என்ன? அந்த செல்போனால் அவன் என்னென்ன அவதிப்பட்டான்? என்பதே மீதிக்கதை. 


ஆமீர் கதாபாத்திரத்தில் விதார்த், வித்தியாசமான நடிப்பால் கவர்கிறார். இதுவரை விதார்த்தை பார்த்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவருக்கு கோர்ட்டும் சூட்டும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. கோபம், சோகம், அழுகை என இவரது முகத்தில் எல்லாமே சரளமாக வருகிறது. 


ஆனால், தனக்கு இடையூறாக வரும் நபர்களை இவர் துரத்தும் காட்சிகளில்தான் ஓடமுடியாமல் தவித்திருக்கிறார். கடைசி காட்சியில் இவரது நடிப்பு கைதட்டல் பெறுகிறது. 


நாயகி ஹர்திகா ஷெட்டிக்கு படத்தில் சிறு வேடம்தான். ஒரு சில காட்சிகளே வருகிறார். அதனால் மனதில் நிற்கவில்லை. படத்தில் வில்லனாக வரும் விடியல் ராஜூவின் நடிப்புதான் பலே. உட்கார்ந்த இடத்தில் இருந்தே மிரட்டி பேசி, தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்ளும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அதேபோல், படத்தில் வரும் ஒவ்வொரு சிறிய கதாபாத்திரமும் நம்மை மிரட்டியிருக்கிறது. 


ஒரு சாதாரண மனிதனின் பலவீனத்தை புரிந்து வைத்துக்கொண்டு அவனை வைத்து தீவிரவாதிகள் தங்கள் காரியங்களை எப்படி சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை அப்பட்டமாக தோலுரித்து காட்டியுள்ள இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணாவுக்கு சபாஷ். படத்தின் முதல்பாதி சற்று தொய்வுதான். ஆனால், இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது. அதே விறுவிறுப்பை இறுதிவரை மாறாமல் கொடுத்திருப்பது இயக்குனரின் தனி சிறப்பு. 


உதய்குமார் ஒளிப்பதிவில் சிக்கிமின் அழகை அழகாக படமாக்கியிருப்பது சிறப்பு. மலையில் அடுக்குமாடி வீடுகளை தனது கேமராவால் அழகாக படமாக்கியிருக்கிறார். கதையை விறுவிறுப்பாக நகர்த்த இவரது கேமராவும் உதவியிருக்கிறது. ஜோஹன் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை பரவாயில்லை. 

No comments:

Post a Comment