அங்குசம் சினிமா விமர்சனம்

கிராமத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் சுற்றி வருகிறார் நாயகன் ஸ்கந்தா. இவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் நாயகி ஜெயதி குகாவை ஒருதலையாக காதலித்து வருகிறார். முதலில் இவரை கண்டுகொள்ளாத நாயகி, பின்பு நாயகனின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.








இந்நிலையில், அந்த ஊர் எம்.எல்.ஏ.வான காதல் தண்டபானி அரசு நிதியில் பள்ளிக்கூடம் ஒன்றை கட்டி வருகிறார். இதில் ஊழல் நடப்பதாக நாயகனுக்கு தெரிய வருகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த கட்டிடம் தரமற்றது என்பதும், இதனால் இங்கு படிக்க வரும் குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதையும் அறிந்து, இதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்கிறார்.
இதற்கு இவரது மாமாவான சார்லி, தகவல் அறியும் சட்டம் என்று ஒன்று உள்ளது என்பதை நாயகனுக்கு விளக்கிக் கூறுகிறார். இந்த சட்டத்தின் மூலம் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு அரசு எவ்வளவு பணம் ஒதுக்கியது? அதில் எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது? என்பது உள்பட அனைத்து விபரங்களை அறியமுடியும் என்று கூறுகிறார்.
இதைக்கேட்ட நாயகன் பள்ளிக்கூடத்தை பற்றிய வரவு-செலவை அறிவதற்காக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கிறார். இதனால், கோபமடையும் தண்டபாணி மற்றும் இந்த பள்ளிக்கூடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினால் பலனடையும் அரசு அதிகாரிகள் நாயகனுக்கு எதிராக செயல்பட தொடங்குகிறார்கள்.
இதில், நாயகனுக்கு இந்த சட்டத்தை பற்றி சொல்லிக்கொடுத்த சார்லியை கொன்று விடுகிறார்கள். இதனால் மிகவும் கோபமடைந்த நாயகன் ஊர் மக்களை திரட்டி எம்.எல்.ஏ.வுக்கு எதிராகவும் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் உதவியோடு அவர்களை பழிவாங்குவதே மீதிக்கதை.
நாயகன் ஸ்கந்தா, காதல் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகளில் துள்ளலான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். தன் மாமாவான சார்லி இறந்ததும், அவரது உடலை பார்த்து இவர் கதறி அழும் காட்சிகள் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன. புரட்சிகர இளைஞனாக படம் முழுவதும் வலம் வந்து நம்மை கவர்கிறார்.
நாயகி ஜெயதி குகாவுக்கு நடிப்பதற்கு குறைவான வாய்ப்புகளே இருந்தாலும், கொடுத்த வாய்ப்பை திறமையாக கையாண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் சார்லி, இப்படத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
எம்.எல்.ஏ.வாக வரும் காதல் தண்டபாணி, நாயகனின் பெற்றோராக வரும் வாகை சந்திரசேகர், ரேகா சுரேஷ், நாயகியின் பெற்றோராக வரும் சாமுவேல், மீரா கிருஷ்ணன், நாயகனின் நண்பராக வரும் காதல் சுகுமார் உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் மனுக்கண்ணன். தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையப்படுத்தி படத்தை எடுத்த இயக்குனருக்கு கைதட்டல் கொடுக்கலாம். தகவல் அறியும் உரிமை சட்டத்தை பற்றி முழுமையாக அறியாத மக்கள் இருக்கும் சூழலில் இந்த சட்டத்தை மிகவும் எளிதாக மக்களிடையே கொண்டு செல்லும் படமாக அங்குசம் இருக்கும் என்று நம்பலாம்.
தீபக்குமார், திருஞான சம்பந்தம் ஆகியோருடைய கேமரா கண்கள் காட்சிகளை எதார்த்தமாக படமாக்கியிருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் களைகட்டியிருக்கிறார்.