பயணிகளுடன் நடுவானில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருக்கிறது. தரையிறங்க தயாராக உள்ள நிலையில், விமானத்தை சுற்றி புகை மண்டலம் சுற்றிக்
கொள்கிறது. இதனால் பாதை தெரியாமல் விமானிகள் தவிக்கின்றனர். உதவிக்கு ஏர்போர்ட்டை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஆனால், இவர்களுடைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிடுகிறது.
புகைமூட்டத்திற்குள் விமானம் செல்ல செல்ல ஒரு நெருப்பு குளம்பு வட்டத்திற்குக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். இதிலிருந்து தப்பிக்க விமானிகள் முயற்சி செய்யும் சூழ்நிலையில் விமானிகள் இருவரும் இறந்து விடுகிறார்கள். விமானம் தடுமாறும் நிலையில் விமானத்தில் பயணம் செய்யும் சிறிதளவு விமானம் ஓட்டத்தெரிந்த நாயகன் ரெயான் பட்ஸ், பயணிகள் காப்பற்றப்பட வேண்டும் இங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விமானியாக களம் இறங்குகிறார். இவருக்கு நாயகி நடாலி பர்ட்னி உதவி செய்கிறார்.
இவர்கள் விமானத்தில் பயணம் செய்யும் தொழில்நுட்ப கலைஞரின் உதவியால் ராணுவத்தை தொடர்பு கொள்கிறார்கள். ராணுவம் இவர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறது.
இறுதியில் ராணுவத்தினர் விமானத்தை காப்பாற்றினார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தில் ரெயான் பட்ஸ், நடாலி பர்ட்னி ஆகியோர் திறமையாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ரெயான் பட்ஸ் விமானத்தை ஓட்டும் காட்சிகள் அருமை. மற்றபடி திரையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் திறமையாக நடித்துள்ளனர்.
அலெக்சாண்டர் ஏலெனின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம். குறிப்பாக விமானத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் சுவாரஸ்யம். பூமி வெப்பமடைவதால் ஏற்படும் எரிமலை வெடிப்பின் விளைவுகளை தத்ரூபமாக எழுதி இயக்கிய ஜேம்ஸ் காண்டிலிக், ஜான் காண்டிலிக்-யை பாராட்டலாம்.