இசை சினிமா விமர்சனம்திரையுலகில் தன் இசையால் கொடிகட்டி பறந்து வருகிறார் சத்யராஜ். இவருக்கு உதவியாளராக எஸ்.ஜே. சூர்யா பணிபுரிந்து வருகிறார். ஒருநாள் தன்னுடைய இசையால்தான் படம் நன்றாக ஓடுகிறது என்று ஆணவமாகப் பேசி இயக்குனர் ஒருவரை அவமானப் படுத்தி அனுப்புகிறார் சத்யராஜ். அவமானப்பட்ட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு வாய்ப்பு கொடுக்கிறார்.


இவரும் சத்யராஜை விட்டு தனியாக இசையமைக்க செல்கிறார். இசையில் பல உத்திகளை கையாண்டு அப்படத்திற்கு இசையமைக்கிறார். அப்படம் வெற்றிப்பெறவே பல படங்கள் வாய்ப்பு கிடைத்து சத்யராஜை பின்னுக்கு தள்ளி புகழின் உச்சிக்கு செல்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இதை ஏற்று கொள்ள முடியாத சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யாவை அழிக்க திட்டமிடுகிறார். 


இதற்கிடையில் எஸ்.ஜே.சூர்யா, ஒரு இசை ஆல்பம் எடுப்பதற்காக தத்ரூபமான இசையை பதிவு செய்ய காட்டிற்கு செல்கிறார். அங்கு நாயகி சாவித்ரியை பார்க்கிறார். பார்த்தவுடன் காதல் வயப்பட்டு சாவித்ரியின் பெற்றோர்களிடம் பேசி திருமணம் செய்துக் கொள்கிறார்.


திருமணம் செய்துக் கொண்டு வீடு திரும்பும் எஸ்.ஜே.சூர்யாவை வீட்டில் இருப்பவர்கள், உதவியாளர்கள், மேனேஜர் ஆகியோர் இவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் ஆக்குகிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவும் தான் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளோம் என்று நினைத்து டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்கிறார்.


இந்த இடைவேளியில் சத்யராஜ் மீண்டும் தன் பழைய இடத்தை பிடிக்க படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தன் நிலைமைக்கு யாரோ ஒருவர் தான் காரணம் என்று எஸ்.ஜே.சூர்யாவிற்கு தெரியவருகிறது. 
தன் நிலைமைக்கு யார் காரணம் என்று எஸ்.ஜே.சூர்யா கண்டுபிடித்தாரா? சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா இவர்களில் யார் வென்றது? என்பதே மீதிக்கதை.


இசையின் நாயகனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதை, திரைக்கதை, இசை, நடிப்பு, இயக்கம் என பல பரிமாணங்களில் தோன்றிருக்கிறார். தன்னுடைய வழக்கமான நடிப்பு இல்லாமல் சற்று மாறுபட்டு தோன்றிருக்கிறார். நடிகராக, மனநிலை பாதிக்கப்பட்டவர் கதாபாத்திரம் இவருக்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது. இயக்குனராக, படத்தை மூன்று மணி நேரத்திற்குமேல் எடுப்பதற்கு எஸ்.ஜே.சூர்யா மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். அதேபோல் இவ்வளவு நீளத்தை பார்க்க ரசிகர்களும் சிரமப்படுகிறார்கள். இசையமைப்பாளராக, பாடல் அனைத்திற்கும் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். பின்னணியிலும் தன் திறமையை நிரூபித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சாவித்ரி, நடிக்க அதிக வாய்ப்பு இல்லையென்றாலும் கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
படத்திற்கு பெரிய பலம் சத்யராஜின் நடிப்பு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வில்லத்தனத்தால் மிரட்டியிருக்கிறார். இவருடைய பெருந்தன்மை, பொறாமை ஆகியவை முகத்தில் இரண்டு விதமாக பிரதிபலித்து இசைக்கலைஞராக நடிப்பில் கலக்கியிருக்கிறார். தன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். எஸ்.செளந்தர்ராஜனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. 


No comments:

Post a Comment