விண்டோஸ் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைவிண்டோஸ் இயக்கத்துடன் தான் நம் பொழுது முழுவதும் செல்கிறது. இருப்பினும், விண்டோஸ் இயக்கத்தில் நாம் இன்னும் அறியாத பல 
விஷயங்கள் உள்ளன. இவை அவ்வப்போது நாம் பணியாற்றிக் கொண்டிருக்கையில் தெரியவருகின்றன. அவ்வாறு கண்டறிந்த பத்து செயல்பாடுகளை இங்கு காணலாம்.

அசைத்து எறி (Shake It Off
): ஒரே நேரத்தில் பல விண்டோக்களைத் திறந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் மானிட்டர் திரை, எந்த ஒழுக்கத்திற்கும் கட்டுப்படாமல் குழப்பமான ஒரு காட்சியைக் காட்டிக் கொண்டிருக்கிறதா? விண்டோஸ் 7 மற்றும் அதனை அடுத்து வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், இதற்கான தீர்வாக, வியக்கத்தக்க வழி ஒன்று தரப்பட்டுள்ளது. நீங்கள் எந்த விண்டோவினை மட்டும் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ, அதன் டைட்டில் பார் மீது கிளிக் செய்து அப்படியே மவுஸைத் தக்க வைக்கவும். பின், அதனை மவுஸ் கொண்டு முன்னும் பின்னுமாகச் சற்று அசைத்திடவும். இப்போது பிற விண்டோக்கள் அனைத்தும் டாஸ்க் பாருக்கு வந்துவிடும். இந்த வசதிதான் Aero Shake என அழைக்கப்படுகிறது. இதே வசதி விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டா சிஸ்டத்தில் தேவை எனில், அதற்கான தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி ஏற்படுத்தலாம்.

வால்பேப்பர் ஸ்லைட் ஷோ: உங்களுடைய டெஸ்க் டாப்பில் ஒரே ஒரு வால் பேப்பர் காட்சியை அமைத்து, அதனையே தொடர்ந்து பார்ப்பது, உங்களுக்கு சில வேளைகளில் அலுத்துப் போகும். ஏன் ஒரே ஒரு வால் பேப்பருடன் நாம் திருப்தி அடைய வேண்டும்? ஒரே நேரத்தில் பல வால் பேப்பர்களைக் காட்டும்படி நாம் செட் செய்திடலாம். இதற்கு டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Personalise > DesktopBackground எனச் செல்லவும். இது உங்கள் வால் பேப்பரை செட் செய்திடத் தேவையான விண்டோவினைத் திறக்கும். இங்கு பல படங்கள் கிடைக்கும். கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், எந்த கால அவகாசத்தில் இந்த படங்கள் மாறி காட்சி அளிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம். எந்த படத்தில் தொடங்கி முடிய வேண்டும் என்பதனையும் நிர்ணயம் செய்திடலாம். இதன் மூலம், டெஸ்க் டாப் படத்தினை மாற்ற ஒவ்வொரு முறையும் நீங்கள் டெஸ்க்டாப்பில் வேலை செய்திட வேண்டியதில்லை.


விரைவாக டாஸ்க்பார் திறத்தல்: 
வேகம் வேகமாகக் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் நமக்கு, மவுஸை டாஸ்க் பார் கொண்டு சென்று, அங்குள்ள ஐகான்களைக் கிளிக் செய்வது கூட நேரம் எடுக்கும் செயலாக இருக்கும். இதற்குப் பதிலாக, விண்டோஸ் கீயை அழுத்திக் கொண்டு, நீங்கள் விரும்பும் ஐகான் வரிசையில் எந்த இடத்தில் உள்ளதோ, அதற்கான எண்ணை அழுத்த வேண்டும். எடுத்துக் காட்டாக, டாஸ்க் பாரில் வேர்ட் புரோகிராமிற்கான ஐகான் மூன்றாவதாக இடம் பெற்றிருந்தால், விண்டோஸ் கீ + 3 அழுத்தினால் போதும். வேர்ட் விண்டோஸ் திறக்கப்படும்.

ரிசோர்ஸ் மானிட்டர்: உங்களுடைய கம்ப்யூட்டர் சிஸ்டம் வழக்கத்திற்கும் மாறாக, மெதுவாக இயங்கினால், அது நம்மைக் கவலைக்குள்ளாக்கும். எதனால் இந்த மாற்றம் ஏற்பட்டது என்று அறிய ஆவலாயிருக்கும். இதற்கு ரிசோர்ஸ் மானிட்டர் நமக்கு பயன்படும். Resource Monitor எனத் தேடல் கட்டத்தில் டைப் செய்து, அதனைத் திறக்கவும். இங்கு கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களும், கம்ப்யூட்டரின் பலவகைத் திறனை எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்று தெரிய வரும். ஒரு குறிப்பிட்ட புரோகிராமின் செயல்பாட்டினை சி.பி.யு. மற்றும் மெமரியினை அடுத்து அடுத்துப் பார்க்கையில் அதன் செயல்பாட்டுக்கான திறன் எவ்வளவு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று தெரிய வரும். இதில் அதிகம் நம் சிஸ்டத்தைப் பயன்படுத்தும் புரோகிராமினைக் கண்டு, அதனை நிறுத்திப் பின்னர் இயக்கலாம். 


அழித்ததைத் திரும்பப் பெற: நாம் எல்லாரும் Ctrl + C and Ctrl + V போன்ற கட்டளைகளை நன்றாகத் தெரிந்து வைத்துள்ளோம். பலருக்குக் Ctrl + Z என்ற கட்டளை இருப்பது தெரியாது. இதனைப் பயன்படுத்தி, நாம் அப்போதுதான் நீக்கியிருந்த செயல்பாட்டினை மீட்டெடுக்கலாம். ஏதேனும் பைல் ஒன்றை அழித்து ரீசைக்கிள் தொட்டிக்கு அனுப்பி இருந்தால், Ctrl + Z கீகளை அழுத்தினால், அது மீண்டும் பழைய இடத்திற்கே வரும். இது போல நீக்கப்பட்ட பல செயல்பாடுகளை மீட்டுக் கொண்டு வரும் கட்டளை இது.


யூசர் அக்கவுண்ட் கட்டுப்பாடு: விண்டோஸ் சிஸ்டம் தரும் User Account Control மிக நல்ல பயனைத் தருவதாகப் பலரும் என்னிடம் கூறி உள்ளனர். ஆனால், இன்னும் சிலர் இது உதவுவதைக் காட்டிலும் உபத்திரவம் தான் அதிகம் தருகிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர். உங்களுடைய சிஸ்டம் செயல்பாட்டில் நீங்கள் மேற்கொள்ளும் எந்த மாற்றத்தின் போதும் இது ஒரு பாப் அப் கட்டமாக எழுந்து வரும் என்பது பலருக்குத் தெரியாது. இது பயனாளர்களை, அவர்கள் ஏற்படுத்தும் மாற்றம் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு வசதியாகும். ஆனால், இது உங்களுக்குத் தேவை இல்லை என்றால், இதன் இயக்கத்தை நிறுத்திவிடலாம். தேடல் கட்டத்தில் User Account Control என டைப் செய்து, அதனை இயக்கவும். இனி, User Account Control விண்டோ காட்டப்படும். இங்கு ஸ்லைடர் ஒன்றை இயக்கி, இழுத்து உங்களுடைய நோட்டிபிகேஷன் என்னும் அறிவிக்கை அமைப்பின் தன்மையை மாற்றலாம். உங்களுக்கு இது போன்ற அறிவிக்கையே தேவை இல்லை எனில், ஸ்லைடரைக் கீழாக இழுத்து அமைக்கலாம். இந்த விண்டோவில் வலது பக்கம் ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கிறது என்று தகவல்களுடன் தரப்படும்.


ஸ்டார்ட் மெனு ஷட் டவுண்: ஸ்டார்ட் மெனுவில் கிளிக் செய்திடுங்கள். இதில் மாறா நிலையில் கீழாக உங்களுக்குக் கிடைப்பது ஷட் டவுண் மெனுவாகும். இதில் உள்ள அம்புக் குறி, மேலும் சில விருப்பங்களுக்கு நம்மை இழுத்துச் சென்றிடும். restart அல்லது log off போன்றவற்றை இங்கு காணலாம். இந்த வகையான ஷட் டவுண் உங்களின் தேர்வாக இல்லை என்றால், இதனை மாற்றியும் அமைக்கலாம். உங்கள் எண்ணப்படி மாற்றி அமைக்க, Shut down என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில் Propertiesதேர்ந்தெடுக்கவும். இது, டாஸ்க் பாரில் உள்ளவற்றை உங்கள் விருப்பப்படி அமைக்கும் விண்டோவினைத் தரும். நீங்கள் விருப்பப்படும் பவர் பட்டனைத் தேர்ந்தெடுக்கலாம். எடுத்துக் காட்டாக, நீங்கள் sleep பட்டனை மாறா நிலையில் தோன்றும் பட்டனாக இருக்க விருப்பப்பட்டு அமைக்க விரும்புவீர்கள். அப்படிப்பட்ட விருப்பங்களை இதன் மூலம் அமைக்கலாம்.


கீ போர்ட் ஷார்ட் கட் கீ மூலம் புரோகிராம் தொடக்கம்: நீங்கள் அடிக்கடி சில புரோகிராம்களை இயக்குபவராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதற்காக, நீங்கள் டாஸ்க் பார் சென்று, ஒவ்வொன்றாக இழுத்து கிளிக் செய்திட வேண்டியதில்லை. எந்த புரோகிராமினை அடிக்கடி இயக்குகிறீர்களோ, அதன் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Properties தேர்ந்தெடுக்கவும். இது புரோகிராம் ப்ராப்பர்ட்டீஸ் என்ற விண்டோவினைத் திறக்கும். இங்கு Shortcut என்ற டேப்பிற்கு மாறவும். இங்கு Shortcutkey என்ற பீல்டைக் கவனிக்கவும். இதில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் கீயினை டைப் செய்திடவும். இந்த கீயுடன் Ctrl + Alt ஆகிய கீகள் இணைந்து, இந்த புரோகிராமிற்கான ஷார்ட் கட் கீயாக மாறும். பின்னர், இந்த குறிப்பிட்ட புரோகிராமினைத் திறக்க, இந்த மூன்று கீகளை அழுத்தினால் போதும். அந்த புரோகிராம் திறக்கப்பட்டு இயங்கும்.


டாஸ்க் பார் டூல்பார்களை அதிகரிக்க: நம் திரையில் காட்டப்படும் டாஸ்க் பார், புரோகிராம் ஐகான்களைக் கொண்டிருப்பதனைக் காட்டிலும், மேலும் சில பணியினையும் மேற்கொள்ளலாம். இதற்கு, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து, Toolbars என்பதில் மவுஸ் கொண்டு செல்லவும். இப்போது வலது பக்கம் ஒரு சிறு மெனு கிடைக்கும். இதில் மிகவும் பயனுள்ளது Address என்பதாகும். இதில் நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளத்தின் முகவரியை டைப் செய்து, எண்டர் தட்டினால், உங்கள் பிரவுசர் உசுப்பிவிடப்பட்டு, இணைய தளம் காட்டப்படும். இதில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் தேடும் டைரக்டரி, போல்டர்களையும் பெறலாம். இதில் சில புரோகிராம்கள் அவற்றிற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்ட டூல்பார்களைக் கொண்டிருக்கும். எடுத்துக் காட்டாக, ஐ ட்யூன்ஸ் (iTunes) தனக்கென டூல் பார் அமைப்பினைக் கொண்டுள்ளது. அதாவது, இந்த மியூசிக் பிளேயர் புரோகிராமினை மினிமைஸ் செய்தால், டாஸ்க் பாரிலிருந்து, மியூசிக் கண்ட்ரோல் செய்திட உங்களுக்கு ஒரு டூல் பார் கிடைக்கும்.

1 comment:

  1. அருமையான தகவல் சகோ ......

    மேலும் ஆன்ராய்டு பயனர்களுக்கு 150 உடனடி இலவச ரீசாஜ்...!!! க்கு :- http://naveensite.blogspot.in/2014/11/earntalktime.html

    ReplyDelete