காவியத்தலைவன் பற்றி வசந்தபாலன்












'ஆல்பம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். அந்தப் படம் தோல்விப் படமாக அமைந்தாலும் சில வருட போராட்டங்களுக்குப் பிறகு 'வெயில்' படம் மூலம் எனக்குள் இப்படிப்பட்ட இயக்குனரும் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அவரது இயக்கத்தில் வெளிவந்த 'அங்காடித் தெரு' படத்தின் கதையும், அதன் ரசனையும் அவரது திறமையை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. அடுத்து அவர் இயக்கிய 'பீரியட்' படமான 'அரவான்' படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டாலும் தோல்விப் படமாகவே அமைந்தது. மீண்டும் 'காவியத் தலைவன்' என்ற மற்றொரு பீரியட் படத்தை இயக்குவது ஏன் என்பதற்கான காரணத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.
அரவான் ரிலீஸ் ஆகி அந்த படம் சரியாக கவனிக்கப்படவில்லை. நீண்ட மனச்சோர்வு, அரவானுக்கு முன்னால் எழுதிய கதை காவியத்தலைவன். இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு வேறு எதாவது ஒரு கமர்சியல் கதை பண்ணலாம் அல்லது வேறு ஒரு கதை பண்ணலாம் என்று கதை யோசிக்க உட்கார்ந்தேன். கிட்டத்தட்ட ஆறு கதைகள் பேசினேன். இரவு காவியத்தலைவன் பற்றிய கனவு தொந்தரவு செய்தவண்ணம் இருக்கும். அதில் உள்ள பல காட்சிகள் ஷாட் வாரியாக வரும். அதிகாலையில் முழித்துக் கொள்வேன். பச்சிளம் குழந்தை போல எனக்குள் நானே சிணுங்கிக் கொள்வேன். மீண்டும் கதை விவாதம் தொடரும். நானே கதைகளை கலைத்து போடுவேன்.
புதியதாக கோலம் போடத்துவங்கிய இளம் பெண்ணை போல கோலத்தை அழித்து அழித்து போடுவேன். ஒரு கட்டத்தில் நமக்கு கதை யோசிக்கிற திறன் போய்விட்டதோ என்ற எண்ணம் வந்து மனம் வெறுமையாய் கிடக்கும். அதற்கு அரவான் ஒரு பெரிய காரணம். அரவான் ஓடிவிடும் என்று ரீலிஸ் தினம்வரை ஆழமாக நம்பினேன். இது இங்குள்ள அனைத்து இயக்குனர்களுக்கும் ஏற்படுகிற பிரச்னை தான். அளவுக்கு அதிகமாக நாம் அந்த படத்தை நேசித்துவிடுவதால் அது எங்கு சறுக்குகிறது என்று தெரியாது. ஆனால் எங்கோ தவறு நிகழ்ந்து விட்டது. அது ஆழ்மனதில் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. ஏன் ஏன் எங்கு தப்பு நடந்தது என்று தினம் தினம் யோசிப்பேன்.
குடிப்பழக்கத்தை நீண்ட வருடங்களுக்கு முன்பே விட்டுவிட்டதால் குடித்தாவது கவலையை மறப்போம் என்று எண்ணமுடியவில்லை. வலியை நேரடியாக ஒரு சுகப்பிரசவம் செய்து கொள்ளும் பெண்ணை போல அனுபவித்தேன். நம் கவனத்துக்கு வராமல் எப்படி தவறு நிகழ்கிறது என கலங்கிவிட்டேன். என் மீது என் கதைகள் மீது நான் வைத்திருந்த மொத்த நம்பிக்கையும் போய்விட்டது. பாதி வரை உருவான கதைகள் மனதுக்கு நிறைவாக இல்லாமல் போனது. காலம் ஓடிக்கொண்டிருந்தது. நம்பிக்கையில்லாத ஏதோ புதிய கதையை படமாக்குவதற்கு பதில் நம்பிக்கையுள்ள காவியத்தலைவனை படமாக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அப்போது மீண்டும் பீரியட் படமான காவியத்தலைவனை கையில் எடுத்தேன். பழக்கப்பட்ட ஆயுதம் தானே விளையாண்டு பார்ப்போம் என்று தோன்றியது,” எனத் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர் மற்றும் பலர் நடிக்கும் 'காவியத் தலைவன்' அடுத்த வாரம் 14ம் தேதி வெளியாக உள்ளது.


No comments:

Post a Comment