பரணி சினிமா விமர்சனம்

நாயகன் பரணி ஊரில் எந்த வேலைக்கும் போகாமல் நண்பர்களுடன் சேர்ந்து குடியும், கும்மாளமுமாக இருந்து வருகிறார். தனது அண்ணன் மகளை இவனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற கனவோடு நாயகனின் அம்மா இருக்கிறார்.

ஆனால், பரணியோ, தனக்கும், மாமாவுக்கும் ஆகாது என்பதால் அவரது பெண்ணையும் வெறுத்து ஒதுக்குகிறார். பரணியின் மாமாவும் தனது பெண்ணை தங்கை மகனுக்கு திருமணம் செய்து கொடுக்கக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்.

இந்நிலையில், நண்பனை பார்க்க பக்கத்து ஊருக்கு செல்லும் பரணி, அங்கு பூங்கொடியை பார்க்கிறான். பார்த்ததும் அவள்மீது காதல் கொள்கிறான். ஒருகட்டத்தில் அவளிடம் தனது காதலையும் கூறுகிறான். ஆனால், அவளோ அதை ஏற்க மறுத்து, எதுவென்றாலும் தனது வீட்டில் வந்து பேசிக்கொள்ளும்படி கூறிவிட்டு சென்றுவிடுகிறாள்.


அவளை பின்தொடர்ந்து செல்கிறார் பரணி. அப்போது பூங்கொடி தனது தோழியை பார்ப்பதற்காக அவளது வீட்டிற்குள் செல்கிறாள். அதுதான் நாயகியின் வீடு என்று நாயகன் புரிந்துகொண்டு, அந்த வீட்டில் உள்ளவர்களிடம் பேசி காதலுக்கு சம்மதம் வாங்கிக் கொள்கிறான்.


மறுநாள் நாயகியிடம் காதலுக்கு அவளது வீட்டார் சம்மதம் கொடுத்துவிட்டதாக கூறுகிறார். அதன்பின், இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.


இந்நிலையில், பூங்கொடியின் வீட்டுக்கு அவளது அப்பாவுடைய நண்பரின் மகன் வருகிறார். இவருடைய பெயரும் பரணிதான். இவளை வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்துப் போய்விடுகிறது. தனது மகளுக்கு இவளையே திருமணம் செய்துவைத்துவிடலாம் என்கிற முடிவுக்கும் வந்துவிடுகின்றனர்.


நாயகியிடமும் இதுகுறித்து தெரிவிக்கின்றனர். அவர் யார் என்று தெரியாத பூங்கொடி, பரணி என்ற பெயரை வைத்து தனது காதலர்தான் அவர் என்று நினைத்து இதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.


ஒருகட்டத்தில் நாயகிக்கு தான் காதலித்த பரணி வேறு, தன்னை திருமணம் செய்யப்போகும் பரணி வேறு என்று தெரிய வருகிறது. இதற்கிடையில் தான் காதலிக்கும் பூங்கொடி தனது தாய்மாமன் மகள் என்பதும் நாயகனுக்கு தெரியவருகிறது.


இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாயகனும், நாயகியும் என்ன முடிவெடுத்தார்கள் என்பதே மீதிக்கதை.


நாயகன் பரணியாக விஜய்கதிர் முகம் முழுவதும் தாடியும், சிரிப்புமாக வருகிறார். மாமன் மகள் வேண்டாம் என்று அம்மா, அப்பாவிடம் பேசும்போது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதையே படம் முழுவதும் செய்ய நினைத்து, அதுவே மிகையான நடிப்பு போல் தோன்றுகிறது.


பூங்கொடியாக வரும் உமாஸ்ரீ கிராமத்து பெண் வேடத்துக்கு அழகாக பொருந்துகிறார். படத்தில் இவருக்கு பெரும்பாலும் நடந்து வரும் காட்சிகள் இருந்தாலும் இறுதி காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார்.


இன்னொரு பரணியாக வரும் ராஜபிரபு ஒருசில காட்சிகளே வருகிறார். நடிப்பதற்கு வாய்ப்பு குறைவு. விஜய்கதிரின் நண்பர்களாக வரும் நால்வரும் காமெடி என்ற பெயரில் ரசிகர்களுக்கு சிரிப்பு வரவழைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.


வழக்கமான முக்கோண காதல் கதையையே படமாக இயக்கியிருக்கும் மாவணன், அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்கும்படி படமாக்கியிருப்பதை தவிர்த்திருக்கலாம். படத்தில் நடிகர்கள் பேசும் வசனங்களைவிட அவர்களுடைய மைன்ட் வாய்ஸ் பேசும் வசனங்கள் வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார்கள். 


நாயகன் சந்தோஷம் வந்தாலும் குடிக்கிறார். துக்கம் வந்தாலும் குடிக்கிறார். இப்படி எந்நேரமும் குடித்துக் கொண்டே இருக்கும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.


வசந்த் மோகன்ராஜ், இசையில் மெலோடி, குத்து என வெளுத்து வாங்கியிருக்கிறார். திருவிழாவின்போது இடம்பெறும் பாடல் ஆட்டம் போடவைக்கிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

No comments:

Post a Comment