கேப்டன் அமெரிக்கா - திரைவிமர்சனம்

ஷீல்டு என்கிற அமைப்பு உலகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்புடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் கேப்டன் அமெரிக்கா என்று அழைக்கப்படும் ஸ்டீவ் ரோஜர்ஸ் மற்றும் அவரது நண்பர்களும் ஒரு குழுவாக பணிபுரிகிறார்கள். 



இந்த குழுவுக்கு தலைவராக நிக் பியூரி இருக்கிறார்.
ஒருநாள் இந்த குழுவுக்கு ஒரு வேலை வருகிறது. அதாவது நடுக்கடலில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இருக்கும் ஒரு கப்பலையும், அதில் பணய கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் பயணிகளையும் மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவு வருகிறது. அதன்படி கேப்டன் அமெரிக்காவும் அவரது குழுவும் கப்பலை மீட்க செல்கிறார்கள். அங்கு சென்று தீவிரவாதிகளை கொன்று கப்பலையும், பயணிகளையும் மீட்டு வருகிறார்கள்.
அந்த கப்பலில் இருக்கும் தீவிரவாதிகள் பற்றிய குறிப்புகளை ஒரு பென் டிரைவில் எடுத்து வருகிறார்கள். அந்த பென் டிரைவ் குழு தலைவரான நிக் பியூரியிடம் ஒப்படைக்கப்படுகிறது. கப்பலை மீட்டுவிட்டோம் என்று அமெரிக்கா உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கும் நிக் பியூரி, தீவிரவாதிகள் பற்றிய குறிப்பு அடங்கிய பென் டிரைவும் தன்னிடம் இருப்பதாக தெரிவிக்கிறார்.
அமெரிக்காவின் உயர் பதவியில் இருக்கும் அதிகாரியான அலெக்ஸாண்டர் பியர்ஸுக்கும், இந்த தீவிரவாதி கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறது. அதனால், அந்த பென்டிரைவை எப்படியாவது கேப்டன் அமெரிக்கா குழுவிடமிருந்து பெற்றுவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார். இதற்காக உலகத்தை அழிக்க நினைக்கும் தீய சக்திகளுடன் இணைந்து அந்த பென்டிரைவை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று முயற்சிக்கிறார்.
இந்நிலையில் ஷீல்டு நிறுவனம் பல நாடுகளுடன் இணைந்து அதிநவீன போர் இயந்திரங்களை தயாரிக்கிறது. இந்த போர் இயந்திரங்களை தங்கள் வசப்படுத்தி இந்த நாட்டை ஆள வேண்டும் என்று நினைக்கும் தீய சக்திகளின் சதியை கேப்டன் அமெரிக்கா முறியடித்தாரா? பென் டிரைவை அவர்கள் கைப்பற்றினார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தில் கேப்டன் அமெரிக்காவாக நடித்திருக்கும் கிறிஸ் இவான்ஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக பென் டிரைவை காப்பாற்ற முயற்சி செய்யும் காட்சிகளிலும், வில்லன்களுடன் சண்டையிடும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார்.
மேலும் படத்தில் நிக் பியூரி, நடாசா, அலெக்ஸாண்டர் பியர்ஸ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சண்டைக் காட்சிகளும், அதை ஒளிப்பதிவு செய்த விதமும் படத்திற்கு பெரும் பலம். அனைத்து சண்டைக் காட்சிகளும் பார்ப்பவர்களை மிரள செய்கிறது.