பாறைப் பல்லாங்குழிகள் பழனியில்.........!

சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள், பாறைப் பல்லாங்குழிகள் பழனியில் கண்டுபிடிப்பு. பழனி அருகே சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள் மற்றும் பாறைப் பல்லாங்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன.பழனியில் இருந்து கொழுமம் செல்லும் வழியில் உள்ளது கரடிக்கூட்டம் மலை. இதில் கிழக்கு திசை நோக்கி இருக்கும் வழுக்குப் பாறையின் மேல் மூன்று குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு குகையின் தாழ்வாரத்தில் பாறையில் வரையப்பட்ட ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

இது குறித்து பழனியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியும், தண்டபாணி என்பவரும் ஆய்வு மேற்கொண்டனர். இது பற்றி ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது இந்த ஓவியங்களை பாறை ஓவியங்கள் என்று சொல்வதை விட ஓவியக் குறியீடுகள் என்பதே பொருத்தமானது.

இரண்டு குறியீடுகளுமே வெள்ளை நிறத்தில் உள்ளன. இடதுபுறக் குறியீடு சதுர வடிவில் 11 செ.மீ நீளம், 11 செ.மீ உயரம் கொண்டதாக இருக்கிறது. சரிசமமாக பிரிக்கப்பட்ட நான்கு சதுரம்போல உள்ள வலதுபுறக் குறியீட்டின் நீளம் 10 செ.மீ., உயரம் 9 செ.மீ ஆகும். இவை வரையப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

இவை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டவையாக இருக்கக்கூடும். இவை சிந்து சமவெளி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளைப் போல் உள்ளது. இவற்றின் பயன்பாடு பற்றியும் புரியவில்லை.

இவற்றின் மூலம் தமிழர்களின் பண்பாட்டின் எடுத்துக்காட்டாக சிந்து சமவெளி நாகரிகம் இருந்தது என்று தெரிகிறது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பாறையில் செதுக்கப்பட்ட பல்லாங்குழிகள் உள்ள மலை, பழனியில் உள்ள கல்வெட்டுகளில் பன்றிமலை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பன்றிமலையின் ஓரத்தில் பெருவழிப்பாதை என்று ஒன்று உள்ளது.

இந்த பாதையை தான் பழங்கால மக்கள் மதுரை, பழனி வழியே கேரளத்துக்கு சென்று கடல்வழி வாணிபம் செய்ய பயன்படுத்தினார்கள். இந்த பன்றிமலையின் ஒருபுறம் மூன்று பல்லாங்குழிகள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஒன்று மட்டும் நன்கு தெரிகிறது மற்ற இரண்டும் பாறைகள் வளர்ச்சியால் மூடப்பட்டுள்ளன. இவற்றை அந்த வழியாக சென்ற வணிகர்கள் குகையில் தங்கிய போது பயன்படுத்தியிருக்கலாம்.

தமிழ்நாடு மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், பஞ்சாப், ஒரிசா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, சி(ஜி)ம்பாப்வே, தான்சானியா ஆகியவற்றின் பழமையான விளையாட்டு பல்லாங்குழி விளையாட்டு என்பது குறிப்பிடத்தக்கது. 
நன்றிகள்