முருகாற்றுப்படை – சினிமா விமர்சனம்











நாயகன் சரவணனும், நாயகி நவீக்காவும் ஒரே கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்தும் வருகிறார்கள். நாயகனுடைய அப்பா நேர்மையான முறையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு சென்னையில் பெரிய இடம் வாங்கி, அங்கு தனது தொழிலை பெருக்க வேண்டும் என்பது தான் நீண்ட கால ஆசை. அந்த ஆசையை நிறைவேறும் விதமாக அவருக்கு ஒரு வாய்ப்பு வருகிறது.
சென்னையில் பெரிய இடம் ஒன்றை வாங்கி, அங்கு பில்டிங் கட்ட முயற்சிகள் எடுத்து வருகிறார். அப்போது, அந்த பகுதி வட்ட செயலாளரான நரசிம்மனும், அவருடைய உதவியாளருமான ரமேஷ்கண்ணாவும் இவருக்கு இடையூறு தருகிறார்கள்.
அதாவது, இவர் வாங்கிய இடத்திற்கு தங்களுக்கு கமிஷன் தரும்படி நாயகனின் அப்பாவை நிர்பந்திக்கிறார்கள். ஆனால், நாயகனுடைய அப்பாவோ இவர்களது பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக எடுத்துக் கொள்கிறார்.
ஒருகட்டத்தில், பைக்கில் செல்லும் நாயகனும், நாயகியும் திடீரென விபத்துக்குள்ளாகிறார்கள். இருவரும் சிறுசிறு காயங்களுடன் உயிர் தப்பிக்கிறார்கள். இந்த விபத்துக்கு நரசிம்மன் தான் காரணம் என்பதை நாயகனின் அப்பா அறிகிறார். எனவே, அவர்கள் கேட்ட தொகையை அவர்களுக்கு கொடுத்து விட்டு நிம்மதியாக இருக்க முடிவெடுக்கிறார்.
அதன்படி, அவர்கள் கேட்கும் தொகையை எடுத்துக் கொண்டு காரில் செல்லும்போது, விபத்துக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார் நாயகனின் அப்பா. அப்போது அவருடைய தொலைபேசிக்கு வரும் அழைப்பை எடுத்து பேசும் நாயகன், தன்னுடைய அப்பா ஒருவரின் மிரட்டலுக்கு ஆளாகியிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்கிறார். அவர் யார்? என்பதை தனது கல்லூரி நண்பர்களுடன் இணைந்து கண்டுபிடிக்கிறார் நாயகன்.
இறுதியில், தனது அப்பாவின் கனவை நாயகன் நிறைவேற்றினாரா? தனது அப்பாவை மிரட்டிய நபர்களை பழிவாங்கினாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் சரவணன், நாயகி நவீக்கா இருவரும் புதுமுகங்கள் என்றாலும் ஓரளவுக்கு தங்களது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நாயகி திரையில் அழகாக பளிச்சிடுகிறார். நடிப்பில் இன்னும் கொஞ்சம் கூடுதல் மெருகேற்றியிருக்கலாம். கதறி அழும் காட்சிகளில் நாயகனுக்கு நடிப்பு வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
நாயகனின் அப்பாவாக நடித்திருப்பவரும், வில்லன் கதாபாத்திரத்தில் வரும் நரசிம்மனும் பொறுப்பை உணர்ந்து அழகாக நடித்திருக்கிறார்கள். நகைச்சுவை கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் ரமேஷ் கண்ணா பளிச்சிடுகிறார்.
படத்தின் கதையை சுவாரஸ்யமாக கொடுக்க தவறியிருக்கிறார் இயக்குனர் கே.முருகானந்தம். படத்தில் தேவையில்லாத காட்சிகளை உட்புகுத்தி படத்தின் வேகத்தை குறைத்திருக்கிறார்.
படத்திற்கு மிகப்பெரிய பலமே கணேஷ் ராகவேந்திராவின் இசை தான். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்து அருமையாக இருக்கிறது. பின்னணி இசையும் பரவாயில்லை. செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.


No comments:

Post a Comment