பண்டுவம் சினிமா விமர்சனம்















நாயகன் சித்தேஷ் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தொகுப்பை உருவாக்கி வருகிறார். இதற்காக சாலைகளில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டரான நாயகி சுவாசிகாவையும் படம் பிடிக்க தன் நண்பர் கேமராமேனுடன் செல்கிறார். அங்கு சுவாசிகாவுடன் பழக்கம் ஏற்படுகிறது.

ஒருநாள் சாலையில் திடீரென ஒரு பெண் துணிகளை கழட்டுகிறார். இதை பார்த்த மக்கள் அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். இதை சித்தேஷ் வேலை செய்யும் தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்ந்தவர் ஒருவர் படம் பிடித்து தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்து விடுகிறார். இதை விரும்பாத சித்தேஷ் தன் மேலதிகாரியிடம் முறையிடுகிறான். அதற்கு அவர் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் முழு விவரத்தையும் சேகரிக்கும்படி சொல்கிறார்.


அந்த பெண் சுவாசிகாவிடம் சிகிச்சை பெறுவதால், பெண்ணின் முழு விவரத்தை சேகரிக்க முயற்சி செய்கிறார். அங்கு சுவாசிகா அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், பெண்ணால் பேச முடியாது என்றும் கூறுகிறார். பிறகு அந்த பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கிறார்கள். பல வழிகளில் முயற்சி செய்தும் பலனளிக்காமல் இருக்கிறது. 


இதேபோல் மற்றோரு பெண் சாலையில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தன் துணிகளை கழட்டுகிறார். இதையறிந்த சித்தேஷ் மற்றும் சுவாசிகா அந்த பெண்ணை பார்க்க செல்கிறார்கள். இந்த பெண்ணும் மனநிலை பாதிக்கப்பட்டு, வாய் பேச முடியாமல், கற்பழிக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிந்து கொள்கிறார்கள். எதனால் இந்த பெண்கள் இப்படி ஆனார்கள் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். மற்றொரு பக்கம் போலீசும் விசாரணையை ஆரம்பிக்கிறது.


கொடைக்கானலிலும் இதேபோல் ஒரு பெண் சாலையில் தன் உடைகளை கழட்டுவதாக சித்தேஷ் மற்றும் சுவாசிகாவுக்கு தகவல் வருகிறது. விசாரித்து பார்த்தபோது, இந்த பெண்களின் மூளை நரம்புகளின் செயல்பாடுகளை யாரோ ஒருவர் தடுத்து விட்டதும், அதன்காரணமாக இந்த பெண்கள் தன்னையறியாமல் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் தெரிய வருகிறது.


இளம்பெண்களை பைத்தியம் பிடித்து அலையச் செய்யும் இந்த படுபாதக செயலில் ஈடுபடும் நபர் யார்? எதற்காக இவர் இப்படி செய்தார்? என்பதை கண்டுபிடிப்பதே மீதிக்கதை.


படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சித்தேஷ், அரவிந்த் என்னும் கதாபாத்திரத்தில் மீடியாவிற்கு ஏற்ற முகமாக வருகிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நடன ஆடுவது, வசனம் பேசுவது ஆகியவை அனுபவம் வாய்ந்த நடிகர் போல் பளிச்சிடுகிறார். நாயகியாக நடித்திருக்கும் சுவாசிகா, அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு டாக்டராக தனது கதாபாத்திரத்திற்கு வலுவூட்டியிருக்கிறார். 


டாக்டர் பிரியதர்சன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகுமார், தன் திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நிற்கிறார். பிற்பாதியில் இவருடைய நடிப்பால் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது. பல காட்சிகளில் இவருடைய நடிப்பு ரசிக்க வைக்கிறது. 


மருத்துவக் கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் ஏற்படும் விளைவுகளை திரில்லராக திரைக்கதை அமைத்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். இதில் யாரையும் குறை கூறக்கூடாது என்றும் அவர்களுக்குள்ளும் நல்ல திறமைகள் இருக்கிறது என்றும் அதை சரியான வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை சொல்ல வந்த இயக்குனர் சிவகுமாரை பாராட்டலாம். 


நிரோ இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். முத்ராவின் ஒளிப்பதிவு அருமை. பிற்பாதியில் விறுவிறுப்புக்கு ஏற்றவாறு காட்சியமைத்திருக்கிறார்.

No comments:

Post a Comment