ஜெயலலிதா இனி 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது - அரசாணை வெளியீடு















முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இனி வரும் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முறைகேடாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தவிட்டது.

இதனால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, ஜெயலலிதா 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு அரசாணையாக, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று 12-11-14 (புதன்கிழமை) வெளியான அரசாணையில், சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், செயலாளர் ஜமாலுதீன் ஆகியோரது உத்தரவு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது.

அந்த அரசாணையில், "லஞ்ச ஒழிப்புச் சட்டம் 1988 பிரிவு 13 (2)-ன்படி, ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 191, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ஆகியவற்றின் அடிப்படையில் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார்.

அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட 20ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி முதல், தமிழக சட்டப்பேரவை உறுப்பினரில் இருந்து தகுதியிழப்பு ஆகிறார். தண்டனைக்காலம் மற்றும் அதற்குப் பிந்தைய 6 ஆண்டுகளும் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார். இந்த உத்தரவு அவரது விடுதலை தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மாறுபடும்.

எனவே, தற்போதைய நிலையில் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி முதல் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுகிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'இந்த உத்தரவு அவரது விடுதலை தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மாறுபடும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் விடுதலையோ அல்லது தண்டனைக் குறைப்பு என ஏதும் நிகழாவிட்டால், ஜெயலலிதா இனி அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.


No comments:

Post a Comment