ஜோதிகா ரீ என்ட்ரீ ஆகும் ரீமேக் படம் ஜோடியாக ரகுமான்

சில வருடங்கள் முன் வரை தமிழில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்னும், அவர் மீண்டும் நடிக்க வருகிறார் என்று அடிக்கடி வதந்திகள் வந்து கொண்டேயிருந்தன. அந்த வதந்திகளை கடைசியாக ஜோதிகா உண்மையாக்கிவிட்டார். சில வாரங்களுக்கு முன் அவர் மீண்டும் நடிக்க வருகிறார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
மலையாளத்தில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய 'ஹவ் ஓல்ட் ஆர் யு' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப் போகிறார் என அறிவித்தார்கள். அந்தப் படத்தை சூர்யாவின் சொந்தப் பட நிறுவனம் தயாரிக்க உள்ளது. மலையாளப் படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸ், தமிழ் ரீமேக்கையும் இயக்க உள்ளார். இந்தப் படம் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் ஜோதிகாவின் ஜோடியாக நடிக்க வேண்டிய கதாபாத்திரத்திற்காக பல நடிகர்களை அணுகியிருக்கிறார்கள். படத்தில் ஜோதிகாவிற்குத்தான் அதிக முக்கியத்துவம் என்பதால் பலரும் நடிக்கத் தயங்கினார்களாம். கடைசியாக ரகுமான், ஜோதிகா ஜோடியாக நடிக்க சம்மதித்து விட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே தமிழில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் ரகுமான் நடித்து வருகிறார். 80களின் இறுதியில் குறிப்பிடத்தக்க நாயகர்களில் ஒருவர் ரகுமான். பல தமிழ், மலையாளப் படங்களில் தற்போது நடித்து வருகிறார். அடுத்து ஆண்டு ஜனவரி மாதம் 'ஹௌ ஓல்ட் ஆர் யு' படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.No comments:

Post a Comment