ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் ஹிந்தி
'கத்தி' படம் ஒரு வழியாக வெளியானது, யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும். தமிழ் அமைப்புகளின் எதிர்ப்புகளை சமாளிக்க, தயாரிப்பாளருடன் சேர்ந்து பல தலைவர்களைச் சென்று சந்தித்தார். அதன் பின்னும் பிரச்சனை ஓயாமலே நீடித்து வந்தது. அதன் பின் முருகதாஸ் எந்த கருத்தையும் சொல்லாமலே அமைதி காத்து வந்தார். இன்று வரை அந்த அமைதி நீடித்து வருகிறது. படம் வெற்றி பெற்றதைப் பற்றிக் கூட அவர் எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.இதனிடையே முருகதாஸ் அடுத்த படத்திற்கான வேலைகளை சிறிது ஓய்விற்குப் பின் விரைவில் ஆரம்பிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அடுத்து அவர் எடுக்கப் போவது ஒரு நேரடி ஹிந்திப் படம். இதற்கு முன் அவர் இயக்கத்தில் தமிழில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'கஜினி, துப்பாக்கி' ஆகிய படங்களையே ஹிந்தியிலும் ரீமேக் செய்து இயக்கினார். இப்போது புதிதாக அவர் எழுதியுள்ள ஒரு கதையைத்தான் ஹிந்தியில் படமாக்க உள்ளாராம். ஏற்கெனவே முருகதாஸ் இயக்கத்தில் 'ஹாலிடே' ஹிந்திப் படத்தில் கதாநாயகியாக நடித்த சோனாக்ஷி சின்ஹாதான் இந்தப் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
படப்பிடிப்பு அடுத்த மாதக் கடைசியிலே, அல்லது டிசம்பர் மாதமே ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. அந்தப் படத்தை முடித்த பிறகுதான் முருகதாஸ் தமிழ்ப் படம் இயக்க வருவாராம்.


No comments:

Post a Comment