இரும்புகுதிரை சினிமா விமர்சனம்


அதர்வா படித்து முடித்துவிட்டு பீட்சா கடையில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். இவர் பைக் ஓட்டுவதென்றால் ரூல்ஸை கடைப்பிடிக்கிற கேரக்டர். ஒருநாள் பஸ்ஸில் போகும்போது பிரியா ஆனந்தை பார்க்கிறார். பார்த்தவுடனயே அவள் அழகில் மயங்கிவிடுகிறார்.

மறுநாளும் பஸ்ஸில் போகும்போது பிரியா ஆனந்தை பார்க்கிறார். அப்பொழுது பிரியா ஆனந்த் நேரடியாக இவரிடம் வந்து, அவரை காதலிப்பதாக கூறிவிட்டு சென்றுவிடுகிறார். அதைக்கேட்டதும் அதர்வா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். மறுபக்கம் சந்தோஷமும் அடைகிறார். 


ஒருநாள் பிரியா ஆனந்தின் வீட்டுக்கே பீட்சா டெலிவரி பண்ணப்போகும் அதர்வாவிடம், பிரியா ஆனந்த் தான் அன்று பஸ்ஸில் தனது பிரெண்டோட பாய் பிரெண்டை கலாய்ப்பதற்கு பதில், தவறுதலாக உன்னிடம் கூறிவிட்டேன் என்று சொல்கிறாள். இதனால் சோகத்துடன் திரும்பும் அதர்வா, அவளுடைய போன் நம்பரை கண்டுபிடித்து அவளுடன் பேசத்துடிக்கிறார். 


ஒருகட்டத்தில் பிரியா ஆனந்தின் போன் நம்பரை கண்டுபிடித்து அவளிடம் பேச ஆரம்பிக்கிறார் அதர்வா. அவளும் அதர்வாவுடன் பேசத்தொடங்குகிறாள். இருவரும் நட்பாக பழகிக்கொண்டிருக்கும்போது அதர்வா மனதுக்குள் மட்டும் காதல் துளிர்விடுகிறது.  


பிரியா ஆனந்த்துக்கு பைக் என்றால் கொள்ளை பிரியம். ஒரு பைக்கின் சத்தத்தை வைத்தே அது எந்த பைக் என்று கண்டுபிடிக்கக்கூடிய ஆற்றல் படைத்தவள். அவள் நமக்கென்று ஒரு பைக் இருந்தால் எப்படி இருக்கும் என்று அதர்வாவிடம் தனது ஆசையை கூறுகிறாள். பிரியா ஆனந்திற்கு விருப்பமான பைக்கை வாங்க முடிவெடுத்து ஒரு ஷோரூமுக்கு செல்கிறார்கள். 


அங்கு சில பைக்குகளை பார்த்து திருப்தியடையாத பிரியா ஆனந்த், குடோனுக்குள் வைக்கப்பட்டிருக்கும் ரேஸ் பைக்கான டிகார்டி பைக்கை வாங்கவேண்டும் என்று அதர்வாவிடம் கூறுகிறாள். அதர்வாவோ அந்த பைக் வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால், பிடிவாதமாக பிரியா ஆனந்த் அந்த பைக்தான் வாங்கவேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார். 


வேறு வழியின்றி அதர்வாவும் அந்த பைக்கை வாங்கிக்கொண்டு பிரியா ஆனந்தை சந்திக்கிறார். அதனால் சந்தோஷமடையும் பிரியா ஆனந்த், அதர்வாவை கூட்டிக்கொண்டு தான் படித்த கல்லூரிக்கு சென்று சுற்றி காட்டுகிறாள். அப்போது அவள்மீதுள்ள காதலை சொல்லும் அதர்வாவிடம், நட்பாகத்தான் பழகுகிறேன் என்று சொல்லி அவன்மீது கோபப்படுகிறாள். 


இருவரும் அங்கிருந்து கோபத்துடனேயே திரும்பி வரும்வேளையில் இவர்களை ஜானி மற்றும் அவருடைய ஆட்கள் ரேஸ் பைக்கில் வந்து அவர்களை சுற்றி வளைத்து ஒரு குடோனுக்குள் அழைத்துச் செல்கின்றனர். அங்கு அதர்வாவை அடித்துப் போட்டுவிட்டு, பிரியா ஆனந்தை கடத்தி சென்றுவிடுகின்றனர். 


ஜானி, பிரியா ஆனந்தை கடத்திச் செல்ல காரணம் என்ன? பிரியா ஆனந்தை ஜானியிடம் இருந்து அதர்வா மீட்டாரா? என்பதை சுவாரஸ்யத்துடன் பிற்பாதியில் சொல்லியிருக்கிறார்கள். 


பரதேசிபடத்திற்கு பிறகு அதர்வாவுக்கு இப்படத்தில் நடிக்க நல்ல வாய்ப்பு. அதை சரியாகவும், செம்மையாகவும் செய்திருக்கிறார். பைக் ஓட்டுவதில் ரூல்ஸ் ராமானுஜராக வரும் அதர்வா, பிற்பாதியில் எடுக்கும் விஸ்வரூபம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது. இந்த படத்தில் எதற்காக சிக்ஸ் பேக் வைத்தார் என்பதுதான் தெரியவில்லை. 


பிரியா ஆனந்த்-அதர்வாவுடன் இணைந்து வரும் காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார். அதர்வாவின் நண்பியாக வரும் லட்சுமிராய் நடிப்பிலும், கவர்ச்சியிலும் சமமாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வில்லனாக வரும் ஏழாம் அறிவு ஜானி, அதர்வாவுடன் சண்டை போடும் காட்சியில் ஆக்ரோஷம் காட்டுகிறார். 


படத்தின் கதை ஓ.கேதான் என்றாலும் அதை திரைக்கதையாக்குவதில்தான் இயக்குனர் யுவராஜ் போஸ் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். படத்தின் முன்பாதியை நகர்த்துவதற்கு ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். பிற்பாதியில், கொஞ்சம் விறுவிறுப்பு காட்டியிருக்கிறார். இருந்தாலும் ஒருசில காட்சிகளை நீளமாக வைத்திருப்பதால் கொஞ்சம் போரடிக்க வைத்திருக்கிறது. 


படத்தில் பாராட்டப்பட வேண்டியது கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவுதான். இறுதிக்காட்சியையும், படத்தின் பாடல்களையும் படமாக்கியது அருமை. ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை பரவாயில்லை. 

No comments:

Post a Comment