என் நெஞ்சை தொட்டாயே சினிமா விமர்சனம்

நாயகன் ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். படித்துவிட்டு ஊரில் நண்பர்களுடன் சுற்றி திரிகிறார். ஒருநாள் பேருந்து நிலையத்தில் நாயகி பவித்ராவை சந்திக்கும் ரவிக்குமார், அவருக்கு எதேச்சையாக உதவி செய்ய, இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.
நாயகனின் அப்பா ஆர்.கே.அன்புசெல்வன் அந்த ஊரில் அநியாயங்களை தட்டிக்கேட்கும் ஊர் பெரியவர். 


அம்மாவோ பெரிய பணத்தாசை பிடித்தவள். தனது மகனுக்கு அதிக வரதட்சணையுடன் பெண்ணை பார்த்து திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று கனவோடு வாழ்ந்து வருபவள்.
இந்நிலையில், நாயகனுக்கு சப்-கலெக்டர் வேலை கிடைக்கிறது. உடனே அவனுக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்கின்றனர். நாயகனோ, நாயகி நினைவாகவே இருப்பதால் பெண் பார்க்கும் படலத்துக்கு முழு சம்மதம் இல்லாமல் வருகிறான். ஆனால், வந்த இடத்தில் நாயகியே மணப்பெண்ணாக இருப்பதால் எந்த வரதட்சணையும் வேண்டாம் என்று கல்யாணத்துக்கு சம்மதம் சொல்கிறான்.
இருவருக்கும் திருமணம் நடக்கிறது. தான் நினைத்ததுபோல் நடக்கவில்லையே என நாயகனின் தாய் தினமும் வருத்தத்தோடு இருக்கிறாள். இந்நிலையில், நாயகன் விடுமுறை முடிந்து பணிக்கு செல்கிறான். வீட்டில் தனிமையில் இருக்கும் நாயகியிடம், நாயகனின் அம்மா கடுமையாக நடந்து கொள்கிறாள். அவளை செத்துவிடு என்னும் அளவுக்கு அவளை திட்டி தீர்க்கிறாள்.
இதனால் மனமுடைந்த நாயகி தற்கொலை செய்துகொள்கிறாள். இந்த தற்கொலைக்கு நாயகனின் அம்மாவும், அப்பாவும்தான் காரணம் என்று அவர்களை போலீஸ் கைது செய்கிறது. இதன்பிறகு நாயகனின் வாழ்க்கை என்னவாயிற்று? நாயகன் தன் அம்மாவையும், அப்பாவையும் வெளிக்கொண்டு வந்தாரா? என்பதே மீதிக்கதை.
பேராசை பெருநஷ்டத்தில்தான் முடியும் என்பதை சொல்ல வந்திருக்கும் மற்றொரு திரைப்படம்தான் இது. ஆனால், சொல்ல வந்த கருத்தில் தேவையில்லாத காட்சிகளை புகுத்தி படம் முழுவதையும் ரசிக்க முடியாமல் வைத்துவிட்டார் இயக்குனர் ஆர்.கே.அன்புச்செல்வன்.
படத்தின் நாயகன் ரவிக்குமார்தான் என்றாலும், ஆர்.கே.அன்புச்செல்வனே படம் முழுவதும் வருகிறார். அன்புசெல்வனுக்கும் நடிப்பு வரவில்லை. இவர் ரவுடிகளிடம் சண்டை போடும் போது சிரிப்புதான் வருகிறது. லஞ்சம், வரதட்சணை கொடுமை, அதிக விலைக்கு உணவு விற்கும் ஓட்டல்கள், விவசாயிகளின் மறுவாழ்வு, ரவுடிகளின் அராஜகம் என சமூக பிரச்சினையை கையிலெடுத்திருக்கும் இயக்குனர், அதை தெளிவாக காட்சிப்படுத்தவில்லை. நாயகி பவித்ரா அழகாக இருந்தாலும், நடிப்பு சுத்தமாக வரவில்லை. கோபம், காதல் என எதையும் தன் முகத்தில் காட்டமுடியாமல் தவியாய் தவிக்கிறார்.
ஜீவன் மயில் இசையில் தங்கம் விதை விதைச்சிபாடல் கேட்கும் ரகமாக இருந்தாலும், அதை காட்சியாக்கிய விதம் காமெடியாக இருக்கிறது.