அரண்மனை படத்தின் பாடல் விரைவில் வெளியீடு

விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் சார்பில் டி.தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படம் அரண்மனை. இப்படத்தை சுந்தர்.சி. இயக்கி வருகிறார். இதில் நாயகனாக சுந்தர்.சி, வினய், சந்தானம், கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, லட்சுமிராய், நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் சரவணன், கோவைசரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், நிதின் சத்யா மற்றும் 21 நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். 


தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படத்தை எடுக்கிறார்கள்.
அரண்மனையில் நடக்கும் திகிலான சம்பவங்களை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் அரண்மனையும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்குமாம்.
இப்படத்திற்காக ஐதராபாத்திலிலுள்ள மணிக்கொண்டா என்ற இடத்தில் ரூ.3 கோடி செலவில் ஒரு அரண்மனையை கலை இயக்குனர் குருராஜ் உருவாக்கியுள்ளார். மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த அரண்மனையை 400 ஊழியர்கள் 3 மாதம் இரவு பகலாக வேலை செய்து உருவாக்கினார்களாம்.

பேமிலி திரில்லர் படமான இதில் காமெடியும் கலந்திருக்கிறார்கள். காட்சிக்கு காட்சி சந்தானம் காமெடியில் மிரட்டியிருக்கிறார். கோவை சரளா, மனோபாலா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இந்த ஜோடியும் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள்.

மூன்று கதாநாயகிகளும் நடிப்பிலும், பாடல் காட்சிகளிலும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பை ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார் அனைத்து தொழில்நுட்ப கருவிகளையும் பயன்படுத்தி படம்பிடித்துள்ளார். படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளையும் மிகுந்த பொருட்செலவில் உருவாக்கியுள்ளனர். இசையை பரத்வாஜ் அமைத்துள்ளார். இவர் இசையில் 5 பாடல்கள் உருவாகியுள்ளன. இறுதிக்கட்ட வேலைகளில் நடந்துவரும் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது.