நீ எங்கே என் அன்பே சினிமா விமர்சனம்

ஐதராபாத்தில் காத்தாடி திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழாவில் தீவிரவாதிகளின் சதி திட்டத்தால் குண்டு வெடிப்பு நடக்கிறது. அதில் பலர் உயிரிழக்கிறார்கள்.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து ஐதராபாத்துக்கு வருகிறார் நாயகி நயன்தாரா. வந்தவுடன் நேராக போலீஸ் நிலையம் செல்கிறார். அங்கு என் கணவர் காணவில்லை என்று புகார் கூறுகிறார். 


போலீசாக இருக்கும் வைபவிடம் எனக்கும் என் கணவருக்கும் திருமணமாகி 8 மாதம் ஆகிறது. இன்ஜினீயரான அவர் வேலை விசயமாக ஐதராபாத் வந்தார். சில நாட்களாக அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் அவரை கண்டுபிடித்து தரும்படி கேட்கிறார். புகாரை பெற்றுக்கொண்ட வைபவ், நயன்தாராவின் கணவரை தேட ஆரம்பிக்கிறார்.
ஒரு கட்டத்தில் தன் கணவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருப்பதாக அறிந்துக் கொண்ட நயன்தாரா, அதை வைபவிடம் சொல்லுகிறார். இருவரும் சில தடயங்களை வைத்து குறிப்பிட்ட சிலரை விசாரிக்கிறார்கள். அவர்கள் விசாரிக்கும் அனைவரும் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். இந்நிலையில் உயர் போலீஸ் அதிகாரியான பசுபதி, ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு உன் கணவர்தான் காரணம் என்று நயன்தாராவிடம் கூறுகிறார். இதைக்கேட்ட நயன்தாரா அதிர்ச்சியடைகிறார். இதற்கு மறுப்பு தெரிவித்து இன்ஜினீயரான அவர் இதுபோன்ற செயலில் ஈடுபடுமாட்டார் என்று கூறுகிறார்.
இதற்கிடையில் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட ஹார்டிஸ்க் ஒன்று நயன்தாராவிடம் கிடைக்கிறது. இதை தெரிந்துக் கொண்ட தீவிரவாதிகள் ஹார்டிஸ்க்கை கொடுத்தால் உன் கணவரை விடுவிப்பதாக நிப்பந்தனை விதிக்கிறார்கள்.
இறுதியில் அந்த ஹார்டிஸ்க்கை தீவிரவாதிகளிடம் கொடுத்து கணவரை நயன்தாரா மீட்டாரா? அவருடன் சேர்ந்து வாழ்ந்தாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நயன்தாராவிற்கு வலுவான கதாபாத்திரம். படம் முழுக்க அவரை சுற்றியே திரைக்கதை பின்னப்பட்டிருக்கிறது. மற்றப் படங்களைப் போன்று நடனம், பாடல், நவீன ஆடை என்று இல்லாமல் கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்கு உயிரூட்டியிருக்கிறார். குறைந்த மேக்கப்போடும் வலம் வரும் நயன்தாரா பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார். கணவரை தேடும் காட்சிகளில் இவருடைய நடிப்பு அருமை. மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார்.
போலீசாக வரும் வைபவ், கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார். சில காட்சிகள் மட்டுமே வரும் உயர் போலீஸ் அதிகாரியான பசுபதி மனதில் நிற்கிறார். மந்திரியாக வரும் நரேஷ் நடிப்பு இயல்பாக உள்ளது.
மரகதமணி இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் திறம்பட செய்திருக்கிறார். படத்திற்கு கூடுதல் பலம் விஜய் சி.குமாரின் ஒளிப்பதிவு.
இந்தியில் ஹிட்டான கஹானிபடத்தை தமிழில் ஒரு சில மாறுதல்களை திரைக்கதையில் ஏற்படுத்தி அதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் சேகர் கம்முலா. திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்தியிருப்பது அருமை.
நடிகர் : வைபவ்
நடிகை : நயன்தாரா
இயக்குனர் : சேகர் கம்முலா
இசை : மரகதமணி
ஓளிப்பதிவு : விஜய் சி.குமார்