கணினி டாஸ்க்பாரும் இம்மாம் பெரிய டூல் பாரும்

டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் வண்ணமும் மாறும்; இடமும் மாறும். இதனை மேலாக அல்லது இடது வலது புறங்களில் அமைத்துக் கொள்லலாம். 





இதில் தான் இடது பக்கம் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நீங்கள் இயக்கும் புரோகிராம் பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது. ஒன்று மாற்றி ஒன்று நீங்கள் இயக்க விரும்பினால் இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் போதும். இதிலேயே குயிக் லாஞ்ச் டூல் பாரினையும் அமைக்கலாம். புரோகிராம்களை இயக்க இது ஷார்ட் கட் வழியாகப் பயன்படுகிறது. இதில் புரோகிராம்களின் ஐகான்கள் அமர்ந்திருக்கும். இதனை ஒரு கிளிக் செய்தால் புரோகிராம்கள் செயல்பாட்டிற்குக் கிடைக்கும். இந்த பாரின் இறுதியில் வலது பக்கம் சிஸ்டம் தொடங்குகையில் இயங்கி பின்னணியில் ஓடிக் கொண்டிருக்கும் புரோகிராம் களின் ஐகான்களைக் காணலாம். ஆன்டி வைரஸ் புரோகிராம் மற்றும் சில தொடங்கும்போதே இயக்கப்படும் புரோகிராம்கள் இதில் இருக்கும். கடிகாரத்தின் மணி இதில் காட்டப்படும்.
டூல் பார் என்பது சின்ன ஸ்ட்ரிப். புரோகிராம் ஒன்றின் ஐகான்களைக் கொண்டிருக்கும். பொதுவாக இவை அனைத்து மெனுக்களுக்கும் காட்டப்படும். நம் விருப்பப்படி புரோகிராம்களின் டூல் பார்களை அமைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வசதிகளுக்கான ஐகான்களை மட்டும் அமைத்துக் கொள்ளலாம். வியூ மற்றும் டூல்பார்ஸ் சென்று இவற்றை அமைத்துக் கொள்ளலாம்.
டூயல் பூட்டிங் சிஸ்டம்: ஒரு கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பதிந்து இயக்கலாம். இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இயக்கும் வசதியையே டூயல் பூட் என்று அழைக்கிறோம். இதனால் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை இயக்க விரும்புகிறீர்கள் என்று நீங்களே கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போது தீர்மானிக்கலாம். எடுத்துக்காட்டாக உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் விஸ்டா என இரண்டு மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நிறுவிப் பயன்படுத்தலாம். இதனை நீங்களே பதிந்து இயக்கலாமா என்ற கேள்விக்கு ஆம் என்றுதான் பதில் சொல்வேன். Boot loader என்ற புரோகிராம் மூலம் நீங்களே இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை பதிந்து இயக்கலாம். என்ன செய்யப் போகிறோம் என்பதனை நன்கு உணர்ந்து படித்து அறிந்து கொண்டு செய்வது நல்லது.
எதற்காக இந்த டூயல் பூட் வசதி? நல்ல கேள்விதான். வேலியில் போற ஓணான் கதையாக இது ஆகக் கூடாது அல்லவா! எனவே இதனையும் தெளிவு செய்து கொள்வது நல்லது. நீங்கள் ஏற்கனவே ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி அதனுடன் நல்ல பரிச்சயம் கொண்டிருக்கிறீர்கள். அதுவே உங்களுக்குப் போதும். ஆனால் புதியதாக ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வருகிறது. அதற்கு உடனே மாறுவதற்குத் தயங்கலாம். ஆனாலும் அது எப்படி இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்க்க ஆவல். இந்த வேளையில் தான் டூயல் பூட் உங்களுக்குப் பயனப்டுகிறது. எடுத்துக் காட்டாக விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் பல ஆண்டுகள் பழகி இருக்கலாம். விண்டோஸ் 7 பற்றிக் கேள்விப்பட்டு அதனையும் இயக்கிப் பார்க்க ஆவலாக இருக்கும். அதே நேரத்தில் எக்ஸ்பியையும் முழுமையாக விட்டுவிடக் கூடாது. இரண்டையும் கம்ப்யூட்டரில் பதிய வைத்து டூயல் பூட் முறையில் இயக்கலாம். அப்ளிகேஷன் புரோகிராம்கள் எந்த சிஸ்டத்தில் சிறப்பாகவும் முழுமையாகவும் இயங்குகின்றன என்று கண்டறியலாம்.
கூடுதலாக விண்டோஸ் 7 மட்டுமின்றி விண்டோஸ் இயக்கத்துடன் லினக்ஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையும் பதித்து டூயல் பூட் முறையில் இயக்கலாம்.