டெஸ்க்டாப்பில் பைல்களை சேவ் செய்யலாமா

விண்டோஸ் இயக்க முறைமையை அதன் தொடக்கத்திலிருந்து பயன்படுத்தி வருகிறேன். அதில் உருவாக்கப்படும் பைல்களை, டெஸ்க்டாப் மேலாக சேவ் செய்திடும் செட் அப் எதிலும் இல்லை. மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் தான் அவை சேவ் செய்யப்படும். 


ஆனால், நம்மில் பலர், டெஸ்க்டாப் மேலாகப் பைல்களைப் பதிவதனையே பழக்கமாகக் கொண்டுள்ளோம். இது நல்ல பழக்கமா? இல்லையா? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்று பார்க்கலாம்.
டெஸ்க்டாப்பில் பைல்களைப் பதிவு செய்து வைப்பதற்கு முதல் காரணம், இந்த பைல்களை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ளலாம் என்பதே. நம் கண்கள் முன்பு இவை எப்போதும் காட்சி தரும் அல்லவா? எனவே தான் பலரும் பைல்களை இதில் சேவ் செய்கின்றனர்.
ஆனால், டெஸ்க்டாப்பில் பைல்களை சேவ் செய்யக் கூடாது என்பதற்குப் பல நல்ல காரணங்கள் உள்ளன. முதல் காரணம், இவற்றை வகைப்படுத்த முடியாது. குழுவாக அமைத்து வைக்க முடியாது. பெயர் மற்றும் பைல் உருவான நாள் அடிப்படையில், இவற்றை வகைப்படுத்த முடிந்தாலும், வேறு எந்த வகையிலும் இவற்றை ஒழுங்கு செய்திட முடியாது. எனவே, நாம் போல்டர்களில் எளிதாகத் தேடி அறியும் வழிகளை இங்கு பயன்படுத்த இயலாது.
மேலும் இந்த பைல்களுக்கு மேலாக, அப்ளிகேஷன் விண்டோக்கள் இருப்பதால், பைல்களைக் காண இயலாது. இந்த விண்டோக்களைச் சிறியதாக வைத்திடவும், மறைத்திடவும் வழிகள் இருந்தாலும், அவை இன்னொரு பிரச்னையும் தரும் வாய்ப்பு உண்டு.
இதில் இன்னொரு முக்கிய விஷயம் உள்ளது. டெஸ்க்டாப்பில் உள்ள பைல்கள், லைப்ரரீஸ் பிரிவில் உள்ள மற்ற போல்டர்களான My Documents and My Pictures போன்றவற்றில் உள்ளவற்றைப் போல பாதுகாப்பானவை இல்லை. நீங்கள் ஏதேனும் காரணத்திற்காக சிஸ்டம் ரெஸ்டோர் பயன்படுத்தினால், விண்டோஸ் இயக்கத்தினை ஒரு குறிப்பிட்ட நாளன்று இருந்தபடி அமைத்தால், அந்த நாளுக்குப் பின்னர், நீங்கள் உருவாக்கி டெஸ்க்டாப்பில் வைத்த பைல்கள் மீட்கப்பட மாட்டாது.
மேலும், பல பேக் அப் புரோகிராம்கள், மாறா நிலையில், டெஸ்க்டாப்பில் உள்ள பைல்களை பேக் அப் செய்திடாது. இது போன்ற பேக் அப் புரோகிராம்கள், டெஸ்க்டாப் பைல்களுக்கும் பேக் அப் எடுக்க வேண்டும் என விரும்பினால், அவற்றின் செட் அப் அமைப்பில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். முதலில் டெஸ்க்டாப்பினை Documentslibraryயில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் சிஸ்டம் ரெஸ்டோர் செயல்படுகையில், டெஸ்க் டாப் பைல்களும் திரும்பக் கிடைக்கும். இதற்கு முதலில் Windows Explorer (File Explorer inWindows 8), செல்லவும். அங்கு Library பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு Documentsஎன்பதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Include a folder என்பதில் கிளிக் செய்து, பின்னர் desktop என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது Navigation பேனல் மேலாக, Favorites என்பதின் கீழ் இருக்கும்.

நீங்கள் புரோகிராம்கள், மாறா நிலையில், அவற்றின் பைல்களை டெஸ்க்டாப்பில் சேவ் செய்யப்பட வேண்டும் எனத் திட்டமிட்டால், Library பிரிவில், டெஸ்க்டாப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Set save location என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், வேர்ட், எக்ஸெல் என எந்த அப்ளிகேஷனில் நீங்கள் பைல் தயாரித்தாலும், அது டெஸ்க்டாப்பில் தான் சேவ் செய்யப்படும். ஆனால், விடியோ, ஆடியோ, போட்டோ பைல்கள் இங்கு சேவ் செய்யப்படாது.