எக்ஸெல்லில் காலியான செல்களை அறிவது எப்படி?

காலியான செல்களை அறிய: ஒர்க் ஷீட் ஒன்றில் குறிப்பிட்ட செல்களிடையே எத்தனை செல்களில் டேட்டா அமைக்கவில்லை என்று தெரிந்தால் உங்களுக்கு 











வேறு சில கணக்குகளை அமைத்திட வசதியாக இருக்கும். இதற்கு என்ன செய்திடலாம்? மானிட்டரில் பென்சில் முனையால் தொட்டு தொட்டு எண்ணவா முடியும்? எடுத்துக் காட்டாக A1:B15 என்ற செல்களிடையே சிலவற்றை விட்டுவிட்டு டேட்டா தந்திருக்கிறீர்கள். காலியான செல்களின் எண்ணிக்கையப் பார்ப்போமா? 30 செல்களில் 14ல் டேட்டா உள்ளது. இதனை அறிய கீழே தந்துள்ள பங்சனைப் பயன்படுத்தலாம். =COUNTBLANK(A1:B15) என்று இன்னொரு செல்லில் தந்தால் 16 என விடை வரும்.
கிரிட் லைன் வண்ணம் மாற்ற: எக்ஸெல் ஒர்க்ஷீட்களில், தகவல்கள் கொண்டுள்ள செல்களைப் பிரித்துப் பார்க்க, செல்களின் கிரிட் லைன்கள் வண்ணத்தில் அமைவது நமக்கு உதவியாக இருக்கும். பொதுவாக, தொடக்கத்தில் இந்த செல் பார்டர் கோடுகள் கருப்பு வண்ணத்தில் இருக்கும். ஆனால், இவற்றை நம் விருப்பப்படி, ஸ்டைலாக வண்ணங்களில் மாற்றிக் கொள்ளலாம். இந்த பார்டர் கோடுகளின் வண்ணங்களை மாற்ற, கீழ்க்காணும் செயல்முறைகளைப் பின்பற்றவும்.
1. டூல்ஸ் (Tools) மெனுவிலிருந்து ஆப்ஷன்ஸ் (Options) தேர்ந்தெடுக்கவும். உடன் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
2. இந்த விண்டோவில் கிடைக்கும் டேப்களில் View டேப்பினை அழுத்தித் தேர்ந்தெடுக்கவும்.
3. இங்கு தரப்படும் கலர் விரி மெனுவில், உங்களுக்குப் பிடித்தமான வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். Gridlines செக் பாக்ஸ் கட்டத்தில் டிக் அடையாளம் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும், வேறுபாடான வண்ணங்களைக் கொடுத்து, அடையாளம் காணும் வகையில், வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
டேட்டாவின் கீழே கோடு: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டாவைத் தேர்வு செய்து, பின்னர் அடிக்கோடுக்கான யு (U) ஐகான் மீது அழுத்தினால், அல்லது கண்ட்ரோல் + யு அழுத்தினால், டேட்டாவின் கீழாக ஒரு கோடு அமைக்கப்படும். இது அன்டர்லைன் அமைத்தலாகும். ஒரு அடிக்கோடுக்குப் பதிலாக, இரண்டு கோடுகள் அமைக்க வேண்டும் என்றால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு Underline டூலை அழுத்தவும். இரு கோடுகள் அமைக்கப்படும். இதே போல பலவகைக் கோடுகள் அமைக்க, Format=>Cells கட்டளையை கொடுத்து, பின்பு Font டேபை அழுத்திப் பாருங்கள். பலவித அடிக்கோடுகளை Underline பகுதியில் காணலாம்.