என்னமோ ஏதோ சினிமா விமர்சனம்

படத்தின் ஆரம்பத்தில் சாலையோரம் நிற்கும் நாயகனான கௌதம் கார்த்திக்கை அடித்து கடத்திச் செல்கிறார் பிரபு. கடத்தி செல்லும் போது வழியில் கௌதமிடம் உன்னைப் பற்றி சொல் என்று கேட்கிறார் பிரபு. அதிலிருந்து படம் பிளாஸ்பேக்கில் நகருகிறது.


சென்னையில் வசதியான குடும்பத்தில் பிறந்து தாயுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் கௌதம் கார்த்திக். சிம்ரன் என்னும் பெண்ணை காதலித்து அந்த காதல் கைகூடாமல் போகிறது. அந்தப் பெண்ணுக்கு ஐதராபாத்தில் டாக்டர் ஒருவருடன் திருமணம் நடக்கிறது. அத்திருமணத்திற்கு செல்லும் கௌதம், காதல் தோல்வியால் மது அருந்திவிட்டு சோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறார். இதேபோல் மணமகன் டாக்டரால் காதல் தோல்வியடைந்த ராகுல் ப்ரீத் அதே திருமணத்திற்கு வருகிறார். இருவரும் சந்தித்து ஆட்டம் ஆடி நண்பர்களாகின்றனர்.
அதன்பிறகு இருவரும் சென்னையில் சந்திக்கிறார்கள். பிறகு நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறார்கள். கௌதமிற்கு, ராகுல் ப்ரீத் மீது காதல் ஏற்படுகிறது. தன் காதலை சொல்ல முயற்சி செய்யும் போது, ராகுல் ப்ரீத் ஒருவரை அறிமுகம் செய்து வைத்து இவரை திருமணம் செய்யப்போவதாக கூறுகிறார். இதனால் மனவேதனை அடைகிறார் கௌதம். அதன் பிறகு நிகிஷா படேலின் நட்பு கௌதமிற்கு கிடைக்கிறது. இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். 
இதற்கிடையில் ராகுல் ப்ரீத் திருமணம் செய்யபவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கௌதம் மீது காதல் வயப்பட்டு அவரை தேடி வருகிறார். இறுதியில் கௌதம் யாருடன் ஜோடி சேர்ந்தார்? எதற்காக பிரபு கடத்தினார்? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனான கௌதம் கார்த்திக், துறுதுறு நடிப்பில் படம் முழுக்க சாக்லேட் பாயாக வலம் வருகிறார். இவருடைய நடிப்பு அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. காதல் மற்றும் நடன காட்சிகள் என அனைத்திலும் திறமையாக நடித்து அசத்தியிருக்கிறார்.
நாயகிகள் ராகுல் ப்ரீத், நிகிஷா படேல் இருவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். அழகம் பெருமாள், மதன்பாப், அனுபமா குமார், பிரபு ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர்.
டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக ஷட் அப் யுவர் மவுத்…’, ‘நீ என்ன பெரிய அப்பா டக்கரா…’ பாடல் தாளம் போட வைக்கிறது. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ள இயக்குனர் ரவி தியாகராஜன், படத்தை காமெடியாக சொல்ல முயற்சி செய்து அதில் பின்னடைவு அடைந்திருக்கிறார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கிலாம்.