வெள்ளித் திரையில் மீண்டும் ஜோதிகா

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடித்த வாலி படத்தில் அறிமுகமானவர்தான் ஜோதிகா. அதையடுத்து விஜய்யுடன் நடித்த குஷி உள்ளிட்ட சில படங்களில் தொடர் வெற்றி அவரை பிரபல நடிகையாக்கியது. அதோடு, எந்த மாதிரி வேடமாக இருந்தாலும் அதை பிரித்து மேய்ந்து விடும் அளவுக்கு திறமையான நடிகையாகவும இருந்தார் ஜோதிகா. அதன்காரணமாக, மொழி, சந்திரமுகி போன்ற படங்களில் நடித்தமைக்கு சிறந்த நடிகைக்கான அரசு விருதுகளையும் பெற்றார்.
ஆனால், நடிகர் சூர்யாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்ட பிறகு, எந்த படத்திலும் அவர் தலைகாட்டவில்லை. ஒரு விளம்பர படத்தில் மட்டுமே சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில், பசங்க பாண்டிராஜ், இது நம்ம ஆளு படத்தையடுத்து இயக்கும் ஒரு படத்தில் ஜோதிகா ரீ-என்ட்ரி ஆகிறாராம்.
பசங்க படத்தை போன்றே குழந்தைகள் பிரச்சினையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறாராம் பாண்டிராஜ். அந்த படத்தில் ஒரு பிரதான ரோலில் நடிப்பதற்கு ஜோதிகாதரப்பை அணுகி கதை சொன்னாராம். அது சூர்யா குடும்பத்தினர் அனைவருக்குமே பிடித்து விட்டதாம். அதனால் மீண்டும் ஜோதிகா நடிப்பதற்கு சூர்யா குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்டி விட்டார்களாம்.
இந்த சேதி பரவியதையடுத்து, மேலும் சில இயக்குனர்களும் ஜோதிகாவுக்கான வெயிட்டான கதாபாத்திரங்களை தயார் செய்யத் தொடங்கி விட்டனர். ஆனால், இப்போதைக்கு இந்த ஒரு படம் தான். இப்படத்திற்கு பிறகு தான் அடுத்து நடிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்று சூர்யாதரப்பு உறுதியாக அறிவித்து விட்டனர்.