ஜில்லா 100வது நாள் வெற்றி விழா

தலைவா படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் இந்தாண்டு பொங்கல் விருந்தாக வெளிவந்த படம் ஜில்லா. விஜய்யுடன் சேர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலும் நடித்து இருந்தார். இவர்கள் தவிர காஜல் அகர்வால், மகத், பூர்ணிமா, சூரி, தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இமான் இசையமைத்து இருந்தார். நேசன் இயக்கி இருந்தார், சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து இருந்தார். 


இப்படம் 100வது நாளை எட்டியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக சென்னை ஆல்பர்ட் தியேட்டரில், ஜில்லா 100வது நாள் கொண்டாட்ட விழா இன்று(ஏப்ரல் 18ம் தேதி) மாலை சிறப்பாக நடந்தது.
இதில் நடிகர் விஜய், இயக்குநர் நேசன், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, படத்தில் நடித்த மகத், சூரி, இசையமைப்பாளர் இமான், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் கலந்து கொண்டனர். விழாவில் இப்படத்தில் நடித்த நடிகர், நடிகையருக்கும், டெக்னீஷியன்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ரசிகர்கள் தான் கண்கள்
பின்னர் விழாவில் பேசிய நடிகர் விஜய், எனது படம் பல பிரச்னைகளை சந்தித்தது. அப்போது மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். கஷ்டப்பட்டு உழைத்தால் கண்டிப்பாக ஜெயிக்கலாம். அப்படி கஷ்டப்பட்டு உழைப்பவர்கள் எல்லாம் ஜெயிக்கிறார்களா என கேட்காதீர்கள். ஜில்லா படத்திற்கு அப்படி ஒரு உழைப்பை கெடுத்துள்ளோம். அதன் வெளிப்பாடு தான் இந்த 100வது நாள்.
100 நாள் என்பது சாதாரணமானது கிடையாது. அதற்கு முழுக்க முழுக்க ரசிகர்கள் தான் காரணம். சினிமா என்பது கனவு தொழிற்சாலை என்று சொல்கிறோம். அதில் கண்கள் மாதிரி ரசிகர்கள் இருக்கிறார்கள். ரசிகர்கள் கண்ணால் காணவில்லை என்றால் அந்த தொழிற்சாலை இல்லை. சினிமாவை காசு கொடுத்து தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள். அவர்களை முழுமையாக திருப்திப்படுத்த வேண்டும். கிரிக்கெட்டில் ஆடுபவர்களை விட அதை பார்ப்பவர்கள் தான் டென்ஷனாக இருப்பார்கள். ஆட்டத்தின் கடைசி பந்து வரை ரசிகர்கள் டென்ஷனோடு இருப்பார்கள். அதேப்போல் என்னை விட என் படத்தை பார்க்க ஆர்வமாய், வெறியாய் இருக்கும் ரசிகர்களுக்கு தான் டென்ஷன் அதிகம். இந்த நேரத்தில் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் இந்தப்படத்தை இவ்வளவு பெரிய செலவு செய்து தயாரித்த தயாரிப்பாளர், மக்களிடம் சேர்த்த விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், மீடியா நண்பர்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
புதுமுக இயக்குநர்களுக்கு வேண்டுகோள்
இந்த நேரத்தில் நான் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். இப்போது நிறைய புதுப்புது இயக்குநர்கள், நல்ல கதை அம்சமுள்ள படங்களை எடுக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். படத்தை எடுக்கும் புதுமுக இயக்குநர்கள் இரண்டரை மணி நேரத்திற்குள்ளாகவே படத்தை முடித்து விடுங்கள், அதற்கு மேல் படம் நீண்டு கொண்டே போனால் ரசிகர்கள் படத்தை பார்ப்பதை விட்டுவிட்டு மணியை பார்க்க தொடங்கி விடுகிறார்கள். எனவே ரசிகர்களை மனதில் கொண்டு படத்தை எடுங்கள்.
இயக்குநர் நேசன் கூட வேலை பார்த்தது நல்ல அனுபவம். தலைவா பட பிரச்னையோடு தான் ஜில்லா ஷூட்டிங்கிற்கு போனேன். அங்கு எனது நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி ஷூட்டிங் எடுத்தார். அவர் இன்னும் நிறைய நல்ல நல்ல படங்கள் எடுக்கணும், அவருக்கு என வாழ்த்துக்கள். அதேப்போல் சூப்பர் குட் பிலிம்ஸ் நல்ல ராசியான தயாரிப்பு நிறுவனம். இந்தப்படத்தில் ஜீவா தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். என்னை போன்ற நடிகர்களுக்கு அவர் நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நான் உட்பட எங்கள் எல்லோருக்கும் விருது கிடைத்தது சந்தோஷம். அப்படியே வைரமுத்து, மகத், சூரி, இமான் உள்ளிட்ட எல்லோருக்கும் இந்தநேரத்தில் என் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு விஜய் பேசினார்.